சனாதனத்தையும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையும் அவமதித்து கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதை திமுக காயப்படுத்தியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஏப்ரல் 13) குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக அமித்ஷா நேற்று (ஏப்ரல் 12) தமிழகம் வந்தார். மதுரையில் பாஜக வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை ஆதரித்து ரோடு ஷோ நிகழ்ச்சி நடத்தினார். இதனையடுத்து திருவனந்தபுரம் சென்றார்.
இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் காவலர் படை மைதானத்திற்கு வந்தார். அங்கு அவரை கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து தக்கலை பேருந்து நிலையத்தில் இருந்து மேட்டுக்கடை வரை திறந்தவெளி வாகனத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் நந்தினி ஆகியோரை ஆதரித்து அமித்ஷா ரோடு ஷோ சென்றார். சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
அப்போது அமித்ஷா பேசுகையில், “உங்களிடம் தமிழ் மொழியில் பேசமுடியவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், நான் உங்களுக்கு வாக்குறுதி தருகிறேன், நான்கு ஆண்டுகளுக்குள் இதே இடத்தில் நான் தமிழில் பேசுவேன்.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஊழல் செய்து தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த தேர்தலில் அதிமுக, திமுகவை ஓட ஓட விரட்டிவிட்டு பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
சனாதனத்தையும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதையும் அவமதித்து கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதை காயப்படுத்தியிருக்கிறார்கள்.
பிரதமர் மோடி இந்தியாவை பாதுகாப்பாகவும், வளர்ச்சியை நோக்கியும் முன்னேற்றி செல்கிறார். நான் தமிழ்நாட்டில் செல்லும் இடங்களில் எல்லாம் பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்று மக்கள் சொல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…