கடந்த 9 ஆண்டுகளாக தமிழகத்திற்கு பாஜக செய்த சிறப்பு திட்டங்களை பட்டியல் போட முடியுமா என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் சவால் விடுத்த நிலையில் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகளை அவர் இன்று பட்டியல் போட்டுள்ளார்.
பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் இன்று வேலூரில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “10 ஆண்டுக்காலம் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் 12 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளார்கள். பாஜக ஆட்சியில் ஊழல் நடைபெறவில்லை. பாரதத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறோம்.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் தமிழகத்தின் பெருமையான செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமையும். தமிழ்நாட்டில் 25 நாடாளுமன்ற தொகுதிகளை பாஜக வெல்லும். இன்று காலை கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை அண்ணாமலை நடத்தும் போது எனக்கு நம்பிக்கை பிறந்தது. 25 அல்ல அதற்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக தமிழகத்தில் வெல்லும். தமிழகத்திலிருந்து மத்திய அமைச்சரவையில் இடம் பிடிக்க போகிறார்கள். தமிழ் மொழி, தொன்மை, சிறப்புகளை பிரதமர் மோடி மேம்படுத்தி வருகிறார்.
உலகின் எந்த நாட்டிற்கு சென்றாலும் பிரதமர் தமிழகத்தின் பெருமைகளை பேசி வருகிறார். குஜராத் மற்றும் செளராஷ்டிராவில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் தமிழின் பெருமையை உயர்த்தியுள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது திருக்குறள் 23 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
மத்தியில் 10 ஆண்டுகளாக காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி செய்த போது சிஆர்பிஎஃப், நீட் போன்ற தேர்வுகளை தமிழ் மொழியில் எழுத முடியவில்லை. பாஜக அரசு மத்திய அரசு தேர்வுகளை தமிழகத்தில் எழுத வழிவகை செய்துள்ளது.
தமிழக சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக சீன அதிபரை தமிழகத்திற்கு பிரதமர் மோடி அழைத்து வந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பாஜகவின் 9 ஆண்டுகால சாதனைகளை பட்டியல் போட முடியுமா என்று கேள்வி கேட்கிறார். தமிழகத்திற்கு பாஜக செய்த சாதனைகளை நான் சொல்கிறேன். நாளை அவர் பதில் சொல்லட்டும்.
2004-14 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தமிழகத்திற்கான பங்களிப்பு நிதி 95 ஆயிரம் கோடி. பாஜக அரசு 9 ஆண்டுகளில் 2.47 லட்சம் கோடி தமிழகத்திற்கு நிதி கொடுத்துள்ளது.
தமிழகத்திற்கான நெடுஞ்சாலை திட்டத்திற்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 2,352 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
3000 கோடி ரூபாய் செலவில் கிழக்கு கடற்கரை சாலை அமைக்க தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சென்னை – பெங்களூரு விரைவு பாதை அமைப்பதற்காக திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பணிகளுக்கு 72 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
சென்னை எழும்பூர், காட்பாடி, மதுரை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் புதிய ரயில் நிலையங்கள் கட்ட 3500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை – மைசூர், சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
1260 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உள்ள 56 லட்சம் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வருடம்தோறும் மத்திய அரசால் கொடுக்கப்படுகிறது. 84 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 2.5 கோடி மக்களுக்கு மருத்துவ உதவி திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 62 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 1 கோடி ஏழை மக்களுக்கு 5 கிலோ அரிசி, தானியம், பருப்பு வகைகள் மத்திய அரசு வழங்கியுள்ளது.
செம்மொழி ஆராய்ச்சி மையத்திற்கான புதிய கட்டிடம் சென்னை தரமணியில் கட்டப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்தில் ஏன் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கூட கொண்டு வரவில்லை. மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கிவிட்டது. மாணவர்கள் படிக்க தொடங்கி விட்டார்கள். தமிழகத்தில் மத்திய அரசால் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ், திமுக ஊழல் செய்கின்ற கட்சிகள். நான்கு தலைமுறைகளாக குடும்ப ஆட்சி செய்து வருகிறார்கள். மாறன் குடும்பம் 2ஜி, இரண்டு தலைமுறையாக ஊழல் செய்து வருகிறார்கள். கலைஞர் குடும்பம் 3ஜி, மூன்று தலைமுறைகளாக ஊழல் செய்து வருகிறார்கள். காங்கிரஸ் குடும்பம் 4ஜி நான்கு தலைமுறைகளாக ஊழல் செய்து வருகிறார்கள். 2024-ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது” என்று அமித்ஷா தெரிவித்தார்.
செல்வம்
“கூட்டணி குறித்து அமித்ஷா முடிவெடுக்க முடியாது” – செம்மலை