அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக வெளியேறியது. இது தொடர்பாக முதலில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்த நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எனினும், பாஜகவுடன் மறைமுகமாக அதிமுக கூட்டணியில் இருக்கிறது என்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் விமர்சித்து வந்தார்.
இதைதொடர்ந்து உச்சபட்ச அதிகாரம் கொண்ட அதிமுக பொதுக்குழுவிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லிக்கு கிடைத்திருக்கும் ரிப்போர்ட் படி, தமிழ்நாட்டில் அதிமுக பாஜக மற்றும் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை சந்தித்தால் மட்டுமே திமுகவுக்கு வலுவான போட்டியை ஏற்படுத்த முடியும். தனித்தனியாக போட்டியிட்டால் , திமுக இன்னும் எளிதாக வெற்றி பெற்று விடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படையில் எப்படியாவது எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தி மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அவரைக் கொண்டு வருவதற்கு டெல்லி பாஜக தலைமை முயற்சித்து வருகிறது.
அந்த முயற்சிகளின் கடைசி கட்ட முயற்சியாக தான் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்திருக்கிறார்.
இது தொடர்பாக பிப்ரவரி 3ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியான டிஜிட்டல் திண்ணையில், “எடுபடாத அண்ணாமலை வியூகம்… எடப்பாடிக்கு அமித்ஷாவிட்ட கடைசி தூது” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த சூழலில் அதிமுக கூட்டணிக்காக பாஜகவின் கதவு திறந்தே இருக்கிறது என்று அமித்ஷா தினத்தந்தி நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு என்பது ஒரு முக்கியமான மாநிலம். அதற்கென தேர்தல் அறிக்கையில் நிறைய விஷயங்கள் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.
கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமித் ஷா சொல்லியிருக்கும் நிலையில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமையுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சாதனைப் பயணம்: ஸ்பெயினில் இருந்து சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்
என்.சி.பி அஜித் பவாருக்கு சொந்தம் : தேர்தல் ஆணைய முடிவை கடுமையாக விமர்சித்த சுப்ரியா சுலே