சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணி தொடர்பாக அமித்ஷா எவ்வளவோ சொன்னார் அதை எடப்பாடி கேட்கவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். Amit Shah said so much… but Edappadi didn’t listen
அதிமுக உட்கட்சி வழக்கின் தீர்ப்பை தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 13) தேனியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, செங்கோட்டையன் விவகாரம், அதிமுக ஒன்றிணைவது, கூட்டணிக்காக எடப்பாடியுடன் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தியது என பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
செய்தியாளர்களின் கேள்வியும் பதிலும்…
தேர்தல் ஆணையம் குமாஸ்தா வேலையைதான் பார்க்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் சொல்லியிருக்கிறாரே?
அது தனி அமைப்பு. இந்திய அரசியலமைப்பு படிதான் செயல்பட வேண்டும். நீதிமன்றங்களுக்கு உரிய அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கும் இருக்கிறது. அப்படித்தான் தீர்ப்பும் வந்துள்ளது.
செங்கோட்டையன் மீது அதிருப்தி… என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,
செங்கோட்டையன் மீது எனக்கு எந்த அதிருப்தியும் இல்லை. அவர் விசுவாசமானவர். எந்த நிலையிலும் கட்சி ஒன்றாக இயங்க வேண்டும் என்ற மனசாட்சி கொண்டவர்.
ஒன்றாக என்றால் நீங்களும் தானே?
நானும் அதைத்தான் சொல்கிறேன். நான் மட்டுமல்ல டிடிவி தினகரன், சசிகலா என்று எல்லோரும் ஒன்று சேர வேண்டும். ஒன்று சேர்ந்ததால் வெற்றி பெற முடியும். ஒன்றிணையாமல் வெற்றி பெற்று காட்டுவோம் என்று சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை.
ராமநாதபுரத்தில் என்னை தோற்கடிக்க 6 வேட்பாளர்களை அதுவும் ஓ,பன்னீர் செல்வம் என்ற பெயரிலேயே நண்பர் உதயக்குமார் கொண்டு வந்தார். இதையெல்லாம் எங்கு போய் சொல்வது. மொத்தமாக 10 லட்சம் வாக்குகள் பதிவானது. அதில் 33 சதவிகித வாக்குகளை நான் பெற்றேன்.
வத்தலகுண்டு ஆறுமுகம் போன்றவர்கள் இந்த இயக்கத்துக்காக உயிரைகொடுத்துள்ளனர். பட்டப்பகலில் திண்டுக்கல்லில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். உயிர்பலி வாங்கிய கட்சி.
இப்படி வளர்க்கப்பட்ட கட்சியை சின்னாபின்னாமாக்கினால் யாருக்குதான் கோவம் வராது.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவுக்கு கிடைத்த இறையருள் என்று உதயக்குமார் சொல்லியிருக்கிறாரே?
உதயக்குமாருக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை எனக்கு இல்லை. இதுவரை நான் பதில் சொன்னதும் இல்லை. அவருடைய பேச்சை நான் பொருட்டாக நினைத்தது இல்லை.
மீண்டும் ஒற்றுமையாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
ஆண்டவன் முடிவு செய்ய வேண்டும். அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அண்ணா திமுக உறுப்பினர்கள் எல்லாம் கூக்குரலிட்டு கொண்டிருக்கிறார்கள். ஒன்று சேருங்கள் என்று சொல்கிறார்கள். நானும் சொல்லிவிட்டேன், எனக்கு எந்தவித நிபந்தனையும் கிடையாது.
ஜெயலலிதா எனக்கு மூன்று முறை முதல்வர் பதவியை கொடுத்தார். 12 ஆண்டுகள் பொருளாளராக இருந்துவிட்டேன். நான் பொருளாளராக பதவி ஏற்கும் போது 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. வெளியில் வரும்போது 256 கோடி ரூபாய் வைப்பு நிதியாக வைத்துவிட்டு வந்தேன். எதிர்க்கட்சியாக இருக்கும் போது 9 இடைத்தேர்தல்களை என்னைதான் நடத்தச் சொன்னார். அதை நடத்தியிருக்கிறேன். பல்வேறு பிரச்சினைகள் பற்றி என்னிடம் ஜெயலலிதா பேசியிருக்கிறார். அந்தளவுக்கு எனக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
எனக்கு எந்த நிபந்தனையும் கிடையாது. டிடிவி தினகரன், சசிகலாவிடமும் பேசியிருக்கிறேன்.
டிடிவி தினகரனுக்கு எந்த நிபந்தனையும் கிடையாதா?
பொதுநன்மை கருதி அதை பேசித் தீர்த்துக்கொள்வோம். எனக்கு பின்னும் 100 ஆண்டு காலம் இந்த இயக்கம் இருக்க வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னார். அதற்கு நாங்கள் தான் உழைக்க வேண்டும். நாங்கள் வேறு வேறு கட்சிக்கு சென்று பதவியை வாங்கிக் கொண்டு போய்விடலாம் . எங்களுக்கு அது தேவையில்லை. ஆனால் உருவாக்கப்பட்ட கட்சிக்கு கடைசி வரை உழைக்க வேண்டும்.
டிடிவி தினகரன் என்ன சொன்னார்? Amit Shah said so much… but Edappadi didn’t listen
மனப்பூர்வமாக கட்சி இணைய வேண்டும் என்றுதான் சொன்னார்.
எல்லோருமே தற்காலிக தீர்ப்பை பெற்றுக்கொண்டு தலைமை கழகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் எப்படி விட்டுக்கொடுத்தேன் என்று எல்லோருக்கும் தெரியும். நான் முதலில் தர்மயுத்தம் நடத்தியபோது என்னிடம் 58 சதவிகிதம் இருந்தது. எடப்பாடிக்கு 4 சதவிகிதம் தான் இருந்தது. நூற்றாண்டு விழாவை அவர் அரசு சார்பாக நடத்தினார். நான் தர்மயுத்தத்தின் படி நடத்தினேன். 16ஆவது கூட்டம் கோவையில் நடந்தது.
கொங்கு மக்கள் எல்லாம் அங்கு கூடினார்கள். அப்போது காலை 5.30க்கு எல்லாம் தங்கமணி, வேலுமணி எல்லாம் என் மகள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். ‘அண்ணே… கட்சியில் இணைங்க… ஒன்னும் பிரச்சினை இல்லை… இல்லைனா கட்சி நாசமா போய்டும்’ என்றார்கள்.
கட்சியை நீங்க பார்த்துக்கோங்க… ஆட்சியை எடப்பாடி பார்த்துக்கொள்ளட்டும் என்றார்கள். சரி என்று நானும் சம்மதித்து எவ்வளவோ விட்டுக்கொடுத்தேன்.
இதையடுத்து காலையில் இணைகிறோம் என்றால், இரவு ஒரு மணிக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரண்டு பதவி உருவாக்கப்படும். எதுவாக இருந்தாலும் இரண்டு பேரும் கையெழுத்து போட வேண்டும் என்றார்கள். அதற்கு ஒத்துக்கொண்டுதான் போனேன். நான்கரை வருடம் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன்.
2026 தேர்தலில் ஒன்றிணைந்த அதிமுகவை எதிர்பார்க்கலாமா?
ஒன்றிணைந்தால் தான் அதிமுகவுக்கு வாழ்வு. இல்லையென்றால் அனைவருக்குமே தாழ்வு.
தொடர் வீழ்ச்சிகளால் எல்லோரும் பெரிய அதிருப்தியில் இருக்கிறார்களே?
என்னால் இருக்கிறார்களா… சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அமித்ஷா, சந்தோஷ் எல்லாம் பேசுவதற்காக வந்திருந்தார்கள். அமித்ஷா எவ்வளவோ சொல்லியும் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கான விளைவுதான் இது. எதிர்க்கட்சியாக இருக்கிறோம். தோல்விக்கு முக்கிய காரணம் பிரிவுதான்.
நாடாளுமன்றத் தேர்தலில் தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை சிவங்கை என 14 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் ஒவ்வொன்றிலும் அமமுகவினர் 1.5 லட்சம் வாக்குகள் பெற்றிருந்தனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் 25 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தனர்.
இதை அமித்ஷாவும் சொன்னார், நானும் சொன்னேன். ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை. உங்களுக்கு சேர்த்துக்கொள்ள விருப்பம் இல்லை என்றாலும், எங்களுக்கு கொடுக்க வேண்டிய இடங்களில் 20 இடங்களை சேர்த்து கொடுங்கள் என்று கேட்டார். 10ஆவது கொடுங்கள் என்று அமித்ஷா கேட்டார்.

மத்திய உளவுத்துறை மூலமாக 75 இடங்கள் தான் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்றும் சொன்னார். நீங்கள் எவ்வளவு இடங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று எடப்பாடியிடம் கேட்டார். 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று எடப்பாடி சொன்னார். அப்படியென்றால், நான் ஒன்று சொல்கிறேன். இந்த தேர்தலில் நான் சொன்னால் டிடிவி தினகரன் நாட்டின் நலன் கருதி ஒத்துக்கொள்வார். தேர்தலில் நிற்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறேன். ஆனால் இவ்வளவு உதவும் அவருக்கு 10 வாரியத் தலைவர் பதவியை கொடுக்க வேண்டும் என்றார். இதற்கும் முடியாது என்று எடப்பாடி மறுத்துவிட்டார். உடனே எழுந்த அமித்ஷா ப்ளைட் டிக்கெட் போடுங்கள் கிளம்ப வேண்டும் என்று சொல்லிவிட்டார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொண்டிருந்தால் இன்று நாம் ஆளும் கட்சி.
இவ்வாறு கூறினார் ஓ.பன்னீர் செல்வம். Amit Shah said so much… but Edappadi didn’t listen