தென்னிந்தியாவின் மீது மோடிக்கு சிறப்புப் பற்று இருக்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
நேற்று (செப்டம்பர் 3) தெற்கு மண்டல கவுன்சிலின் 30 ஆவது கூட்டம் கேரள மாநில தலைநகரம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு தலைமை வகித்தார் அமித் ஷா. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,
“பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், கடந்த எட்டு ஆண்டுகளில் மண்டல கவுன்சில்களின் தன்மை மாறியுள்ளது. கூட்டங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
2014ஆம் ஆண்டுக்கு முன், மண்டல சபைகள் ஒரு வருடத்தில் சராசரியாக இரண்டு கூட்டங்களை நடத்தியது, இந்த அரசாங்கம் 2.7 ஆக அதிகரித்துள்ளது. சராசரியாக, நிலைக்குழுக்கள் 1.4 அமர்வுகளைக் கொண்டிருந்தன, இந்த அரசாங்கமும் கிட்டத்தட்ட இரு மடங்காக அதாவது, 2.75 ஆக அதிகரித்துள்ளது.
2006 முதல் 2013 வரை, மண்டல கவுன்சில் கூட்டங்களில் 104 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன, 2014 முதல் 2022 வரை, 555 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, இதில் 64 சதவீத பிரச்சனைகள் பரஸ்பர ஒப்புதலுடன் தீர்க்கப்பட்டன” என்று புள்ளி விவரங்களைச் சொன்னார்.
தென் பகுதியில் அதிக கடலோரம்!
மேலும் அமித் ஷா, “9 கடலோர மாநிலங்களில் 4 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 4 தெற்கு மண்டல கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ளன, அதாவது மொத்தம் 7,500 கிமீ நீளமுள்ள கடற்கரையில், சுமார் 4,800 கிமீ இந்த மாநிலங்களின் கீழ் வருகிறது.
இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் 7 பெரிய துறைமுகங்கள் இந்தப் பகுதியில் இருப்பதாக திரு ஷா கூறினார். இதன் மூலம், இப்போது இந்தியாவில் உள்ள மொத்தமுள்ள 3,461 மீனவ கிராமங்களில், 1,763 மீனவக் கிராமங்கள் இந்த மண்டலத்தில் உள்ளன, மேலும் கடல்சார் பொருட்களின் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.
தென்னிந்தியாவின் மீது சிறப்புப் பற்று!
”தென்னிந்தியாவின் மீது பிரதமருக்கு சிறப்புப் பற்று உள்ளது, அதனால்தான் 2014-ல் பிரதமரான பிறகு, சாகர்மாலா திட்டத்துடன் இணைந்து கடலோரப் பகுதிகளின் மேம்பாட்டிற்காக முக்கியத் துறைமுகங்களை மேம்படுத்த பல்வேறு திட்டங்களைத் தொடங்கினார்.
இவற்றில் ரூ. 76,000 கோடி மதிப்பிலான 108 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. 1,32,000 கோடி மதிப்பிலான 98 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கடலோர மாநிலங்களுக்கு சாகர்மாலா திட்டத்தின் கீழ் ரூ.2,00,000 கோடி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு 7,737 கோடி ரூபாய் செலவில் நீலப் புரட்சிக்காக பிரதமரின் மத்ஸ்ய சம்படா யோஜனா செயல்படுத்தப்படுகிறது.
2015 முதல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதித் திட்டத்திற்கு ரூ.4,206 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் 56 திட்டங்களுக்கு மாநிலங்களில் துறைமுகங்கள் மற்றும் மீன்வளத்தின் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 2,711 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது” என்றும் பேசினார் அமித் ஷா.
பிரச்சினைகளுக்குத் தீர்வு!
மேலும் அவர், “திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற தென் மண்டல கவுன்சிலின் 30வது கூட்டத்தில் 26 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, 9 பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது, 17 பிரச்னைகள் கூடுதல் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டது, இதில் ஆந்திரா மறுசீரமைப்பு தொடர்பான 9 பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா இடையே நிலுவையில் உள்ள பிரச்சனைகளை அந்த மாநிலங்கள் தங்களுக்குள் தீர்த்து கொள்ள வேண்டும், இது அம்மாநில மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் நன்மை பயக்கும்,
அதோடு முழு தென் பிராந்தியத்தின் அனைத்து சுற்று வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். கவுன்சிலின் அனைத்து உறுப்பு மாநிலங்களும் நீர் பங்கீடு தொடர்பான பிரச்சனைகளுக்கு கூட்டுத் தீர்வு காண வேண்டும். அதன் நிலைக்குழுவின் 12வது கூட்டத்தில், மொத்தம் 89 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு, இதில் 63 பிரச்சனைகள் பரஸ்பர ஒப்பந்தம் மூலம் தீர்க்கப்பட்டன. இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை.
பரஸ்பர ஒப்பந்தத்தின் மூலம் மத்திய, மாநிலங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான மோதல்களை சுமுகமாகத் தீர்த்து வைப்பது, மாநிலங்களுக்கு இடையே பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவது, அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனைக்காக ஒரு மன்றத்தை உருவாக்குவது ஆகியவை மண்டல கவுன்சில் கூட்டத்தின் முக்கிய நோக்கங்கள்.
பொதுவான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த ஒரு ஒத்துழைப்பு அமைப்பை அமைத்தல். நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக, பிரதமர் நரேந்திர மோடி டீம் இந்தியா என்ற கருத்தை முன் வைத்துள்ளார், அனைத்து மாநிலங்களும் இணைந்து டீம் இந்தியாவை உருவாக்குவோம்” என்று அமித் ஷா கூறினார்.
–வேந்தன்
மின்சாரத் திருத்த மசோதாவை கைவிடுக : அமித்ஷா முன் ஸ்டாலின் பேச்சு!