இது உங்களை நிரூபிக்கிற தேர்தல் இல்லை: எடப்பாடியை அதிரவைத்த அமித் ஷா

அரசியல்

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு இருபது நிமிடங்களே நீடித்தபோதும் அதற்குள் தான் சொல்ல வேண்டிய விஷயங்களை எல்லாம் கடகடவென அமித் ஷாவிடம் கொட்டிவிட்டார் எடப்பாடி.

திமுகவுக்கு எதிரான தகவல்கள் அடங்கிய ஃபைலை கொடுத்தது ஒருபக்கம் என்றால்… இந்த சந்திப்பில் எடப்பாடியின் அடிப்படை நோக்கமே தனக்கு இன்னும் தலைவலியாக தொடரும் பன்னீர்செல்வத்தை அரசியலில் இருந்து அப்புறப்படுத்தி அதிமுகவை, தான் முழுமையாகக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான்.

தமிழ்நாட்டு அரசியல் பற்றி எடப்பாடியிடம் விசாரித்த அமித் ஷா, ‘தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு எதிரான நிறைய விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஆனால் அதேநேரம் நம்ம கூட்டணியை நாம் பலப்படுத்திக்க வேண்டாமா? நீங்க, ஓபிஎஸ், சசிகலா-தினகரன் எல்லாம் ஒண்ணாக சேரணும். அப்போதான் எம்.பி. தேர்தல்ல நம்ம வெற்றிபெற முடியும்’ என்று சொல்லியிருக்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஏனென்றால் ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலின் போது சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தையின் போதும் எடப்பாடியிடம் இதையேதான் கூறினார் அமித் ஷா.

அதாவது, ‘அதிமுகவின் அனைத்து பிரிவுகளும் ஒன்றாக சேரணும். அப்ப நம் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு அதிகமாகும்,. திமுக ஆட்சிக்கு வர முடியாத சூழல் உருவாகும்’ என்று கூறினார் அமித் ஷா.

ஆனால் அப்போது எடப்பாடிதான், “இல்லல்ல… அவங்கக்கிட்ட எதுவுமே இல்லை. இரட்டை இலைதான் இங்கே பலம். அது நம்மகிட்ட இருக்கு’ என்று சொல்லி டிடிவி தினகரனை முதல்கட்டமாக அதிமுக கூட்டணிக்குள் கொண்டுவர கூட மறுத்துவிட்டார் எடப்பாடி.

தேர்தல் முடிவுக்குப் பின் தென் மாவட்டங்களில் அதிமுகவின் தோல்விக்குக் காரணமாக அமமுக தனியாக போட்டியிட்டு எடுத்த வாக்குகளை குறிப்பிட்டு பன்னீர் செல்வம் அப்போதே அமித் ஷாவுக்கு புகார் அனுப்பினார்.

எடப்பாடியின் தான் மட்டுமே தலைவர் என்ற மனப்பான்மையால்தான் அதிமுக-பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போய்விட்டது என்றும் அதிமுக ஒற்றுமையாக நின்றிருந்தால் மீண்டும் அதிமுக ஆட்சியே அமைந்திருக்கும் என்றும் அமித் ஷாவுக்கு புள்ளி விவர ரீதியாக தெரிவித்தார் பன்னீர்.

அந்த நினைவில்தான் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலாவது அதிமுகவை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்று இப்போதும் கூறியிருக்கிறார் அமித் ஷா.
ஆனால் எடப்பாடியோ தன் பழைய நிலைப்பாட்டிலேயே இருந்திருக்கிறார்.

‘அதிமுக கட்சியில இப்ப எந்த பிளவும் இல்லை. 95% பேர் என் தலைமையிலதான் இருக்காங்க. மீதி பேர்தான் மூணு குரூப்பா இருக்காங்க. அதனால அவங்களால நமக்கு எந்த இழப்பும் வராது. ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு மக்கள்கிட்ட எந்த செல்வாக்கும் இல்லை.

இன்னும் சொல்லப் போனா ஓ.பன்னீர் போன சட்டமன்றத் தேர்தல்ல நம்ம கூட்டணி தோக்கணும்குறதுக்காக திமுக-காங்கிரஸ் கூட்டணி ஜெயிக்கணும்குறதுக்காக வேலை பார்த்திருக்காரு. இதுக்காக அவர் திமுக தரப்புக்கு 200 கோடி ரூபாய் தேர்தல் நிதி கொடுத்திருக்காரு.

நான் முதல்வராக இருந்தபோது இந்தத் தகவல் வந்ததும் முதலில் நான் நம்பலை. ஆனால் அதுக்கான ஆதாரங்கள் அப்பவே எனக்கு கிடைச்சது. ஓபிஎஸ் முழுமையாக திமுகவின் ஏஜென்ட்டாகத்தான் செயல்பட்டு வர்றாரு. அவருக்குனு தனிப்பட்ட பலம் எதுவும் இல்லை.

இதேபோலத்தான் சசிகலா, தினகரனுக்கும் பலம் கிடையாது” என்று எடப்பாடி சொல்ல இதை அருகே இருந்த மொழிபெயர்ப்பாளர் அமித் ஷாவிடம் இந்தியில் சொல்லியிருக்கிறார். உடனே, ‘அப்படியா?’ என கேட்டிருக்கிறார் அமித் ஷா.

தொடர்ந்து அமித் ஷாவிடம் பேசிய எடப்பாடி, ‘கட்சி இப்ப முழுமையா என் கட்டுப்பாட்டுலதான் இருக்கு. அதனால எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்க.

அவங்க எல்லாம் இல்லாமலே வர்ற எம்பி தேர்தல்ல ஏற்கனவே இருக்கும் நமது தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளோட போட்டியிட்டு வெற்றிபெற வச்சிக் காட்டுறேன்.

நான் என்னை நிரூபிச்சுக் காட்டுறேன். எனக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு கொடுங்க’ என்று மீண்டும் மீண்டும் கேட்டிருக்கிறார் எடப்பாடி.

அப்போது அமித் ஷா, ‘ நம்ம கூட்டணி ஸ்ட்ராங்கா இருக்கணும். ஏற்கனவே நம்ம கூட்டணியில இடம்பெற்ற கட்சிகளும் நம்மளோட இருக்கணும். மத்தபடி இந்த எம்பி தேர்தல் உங்களை நிரூபிக்குறதுக்கான தேர்தல் இல்லை’ என்று பதில் சொல்லியிருக்கிறார் .

இதைக் கேட்ட எடப்பாடி, ‘எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க ஜி’ என்று மீண்டும் மீண்டும் கேட்க அமித் ஷா அதற்கு பதில் சொல்லவில்லை. இப்படித்தான் அமித் ஷாவுடனான எடப்பாடியின் இருபது நிமிட சந்திப்பு முடிந்திருக்கிறது.

எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க ஜி என்று எடப்பாடியின் வேண்டுகோளுக்கு அமித் ஷா எந்த பதிலையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக முதல் சிறை நிரப்பும் போராட்டம்!

இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *