வைஃபை ஆன் செய்ததும் இன்றைய தினத்தந்தியில் அமித் ஷா அளித்த பேட்டியின் ஸ்க்ரீன் ஷாட்டும், அதற்கு தஞ்சையில் ஜெயக்குமார் அளித்த பதில் வீடியோவும், சேலத்தில் எடப்பாடி அளித்த பதில் வீடியோவும் இன்பாக்சில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“இன்று வெளிவந்த தினத்தந்தி இதழில் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா, ‘தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணிக் கதவு அனைவருக்கும் திறந்தே இருக்கிறது’ என்று பேட்டியளித்தார்.
சில வாரங்களாக அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் அமையுமா என்று அக்கட்சிக்குள்ளேயே விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில்… தமாகா தலைவர் ஜி.கே.வாசன் டெல்லி பாஜக தலைமைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே சமரச பாலமாக செயல்பட்ட நிலையில்… அமித் ஷாவின் இந்த கருத்து அதிமுகவுக்குள் இதுபற்றிய விவாதத்தை அதிகப்படுத்தியது.
உடனடியாக தஞ்சாவூரில் இதுகுறித்து பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‘நாங்கள் பாஜகவுக்கான கதவை சாத்திவிட்டு பெரிய பூட்டே போட்டுவிட்டோம்’ என்று பதிலளித்தார்.
ஆனால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று பகலில் அமித் ஷாவின் அழைப்பு குறித்து செய்தியாளர்கள் சேலத்தில் கேட்டபோது, ‘நான் பாக்கலை… பேப்பர் பார்க்கலை..’ என்று நழுவலாக சொல்லிவிட்டுச் சென்றார்.
ஏற்கனவே அதிகாரபூர்வமாக பாஜக கூட்டணி முறிந்துவிட்ட நிலையில் பிறகு ஏன் எடப்பாடி பழனிசாமி, தான் அமித் ஷாவின் பேட்டியை பார்க்கவில்லை என்று சொல்ல வேண்டும், அதெல்லாம் இல்லை என்று ஜெயக்குமாரை போல மறுத்திருக்க வேண்டியதுதானே… என்ற கேள்விகள் அதிமுகவுக்குள்ளேயே எழுந்திருக்கின்றன.
இதுகுறித்து அதிமுக வட்டாரங்களில் விசாரித்தபோது… ‘கடந்த செப்டம்பர் மாதம் பாஜகவுடனான கூட்டணியை முறித்த அறிவிப்புக்கு முன்பே நிர்வாகிகளிடம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ‘பாஜகவுடனான கூட்டணியை முறித்தால் அவர்கள் நம் மீது கோபப்படலாம். என் மீது வழக்கு போடலாம்… அல்லது ஏதாவது ஒரு பழைய வழக்கை தூசு தட்டலாம். அதுபோல உங்களுக்கும் நேரலாம். ஆனால் அதுபற்றியெல்லாம் பயப்படக் கூடாது’ என்று கூறினார். அப்போது நிர்வாகிகள் எல்லாம், ‘நமக்கு கட்சிதாண்ணே முக்கியம். நாங்க பயப்படமாட்டோம்’ என்று எடப்பாடியின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் மாதங்கள் ஆக ஆக… அதிமுகவிலேயே சிலர், ‘திமுக அரசுக்கு எதிராக மக்களின் அதிருப்தி அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து நின்று சந்தித்தால் திமுகவை வீழ்த்திவிடலாம். நாம் தனியாக நிற்பது அரசியல் ரீதியாக சரியாக இருக்குமா?’ என்றெல்லாம் விவாதிக்கத் தொடங்கினார்கள்.
அவர்கள் மேலும், ‘மாநிலத்தில் நாம் ஆட்சியில் இல்லாத இந்த நேரத்தில் மத்திய ஆட்சியில் நமக்கு இருக்கும் நெருக்கத்தை வலுப்படுத்திக் கொண்டால்தானே திமுகவுக்கு அதிக நெருக்கடியைக் கொடுக்க முடியும்? அடுத்த இரண்டரை ஆண்டு காலம் திமுக ஆட்சியை எதிர்த்து நிற்கும் அதேநேரம் ஒருவேளை மீண்டும் பாஜக ஆட்சி வந்துவிட்டால் ஒரே நேரத்தில் மத்திய அரசையும், மாநில அரசையும் எதிர்த்து நிற்கவேண்டுமா?’ என்றெல்லாம் கேள்விகளை கேட்கத் தொடங்கினார்கள்.
இப்படியாக மீண்டும் பாஜகவோடு சேரலாம் என்ற எண்ணத்துக்கு அதிமுகவிலுள்ள ஒரு பகுதி நிர்வாகிகள் மெல்ல மெல்ல மாறி வருகிறார்கள். அவர்கள் அதற்கு ஒரு கணக்கையும் காரணமாக சொல்கிறார்கள்.
‘அதிமுக-பாஜக கூட்டணி முறிந்து ஆறு மாதங்கள் ஆகியும் சிறுபான்மை மக்கள் நம் மீது இன்னும் முழு நம்பிக்கை வைக்கவில்லை. அவர்கள் நம்மை ஒரு வித சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறார்கள். இந்த ஆறு மாதங்களில் சிறுபான்மையினர் ஓட்டு 2% தான் நம் பக்கம் திரும்பியிருக்கிறது. அதேநேரம் அதிமுகவின் வாக்குகளில் 5% வரை பாஜகவுக்கு செல்லும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இதை நாம் உணர்ந்து அரசியல் வியூகத்தை வகுக்க வேண்டும்’ என்கிறார்கள் அவர்கள்.
ஆனால் கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம், ஜெயக்குமார் போன்றவர்களோ, ‘அதிமுக இப்போதுதான் அடுத்த சட்டமன்றத் தேர்தலை நோக்கி தெளிவாகச் செல்கிறது. இதில் எந்த மாற்றமும் வேண்டாம். எடப்பாடி ஒரு முடிவெடுத்துவிட்டால் அதில் எள்ளளவும் பின் வாங்க மாட்டார்’ என்று சொல்லி வருகிறார்கள்.
அமித் ஷாவின் பேட்டிக்கு பிறகு அதிமுகவுக்குள் இந்த விவாதங்கள் அதிகமாகியிருக்கின்றன. தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கும் நிலையில் அதிமுகவுக்குள் இப்படி ஒரு குண்டை போட்டிருப்பதால் ஏதேனும் மாற்றம் வருமோ என்ற கேள்விக்கு அதிமுகவில் இன்னும் உயிர் இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்குகள் : நீதிபதி ஆனந்த் வெஙக்டேஷ் விசாரிக்க ஒப்புதல்!
‘லெஜண்ட்’ சரவணின் 2-வது பட இயக்குநர் இவரா?