மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஆய்வுக்குழு அளித்த அலுவல் மொழி தொடர்பான அறிக்கைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக் குழு, தமது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் வழங்கியது.
அதில், ’ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள், ஐஐஎம் கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்தி மொழி பயிற்று மொழியாக கட்டாயமாக்க வேண்டும்.
தேவைப்பட்டால்தான் ஆங்கிலத்தை பயிற்று மொழியாக பயன்படுத்தலாம்; காலப்போக்கில் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயிற்று மொழியாக இடம்பெறச் செய்ய வேண்டும்.
அதேபோல், வேலைவாய்ப்பு தேர்வுகளிலும் இந்தி மொழி அவசியமாக்கப்பட வேண்டும். பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு இந்தி மொழி அறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி இருக்க வேண்டும்.
மத்திய அரசின் அலுவலகங்கள், அமைச்சரவை இலாகாக்கள் அனைத்திலும் கடிதங்கள், ஃபேக்ஸ்கள், இமெயில்கள் இந்தியில்தான் இருக்க வேண்டும்; அலுவலக பயன்பாட்டுக்கு எளிதான இந்தி பயன்படுத்த வேண்டும்.
மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ்கள், உரைகள் அனைத்தும் இந்தியில் இருக்க வேண்டும் எனவும்’ என அமித் ஷா குழு பரிந்துரைத்துள்ளது.
இந்தி மொழி தொடர்பாக அமித்ஷா குழு அளித்துள்ள பரிந்துரைகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்குத் தமிழகத்தில் கண்டனங்கள் குவிந்துவருகின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எனப் பலரும் இந்த அறிக்கைக்கு எதிராகத் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன்னுடைய கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 11) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இது, இந்திய நாடா? இந்தியின் நாடா? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்தான் இந்நாட்டுக்கு வரிசெலுத்துகிறார்களா? இல்லை,
இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் விடுதலைக்குப் பங்களிப்பு செலுத்தினார்களா? இல்லை, இந்திக்காரர்கள் மட்டும்தான் இந்நாட்டின் குடிமக்களா? எதற்கு இந்திக்கு மட்டும் இத்தகைய முக்கியத்துவம்?

அரசியலமைப்பு அட்டவணையில் இடம்பெற்றுள்ள 22 மொழிகளையும் தேசிய மொழிகளாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லி உச்ச நீதிமன்றமே அறிவுறுத்தியுள்ள நிலையில்,
அதற்கு முற்றிலும் நேரெதிராக ஒற்றைமொழியை முன்னிறுத்தி, அதனைத் திணிக்க முற்படும் ஒன்றிய அரசின் செயல் மிகப்பெரும் ஜனநாயகப் படுகொலையாகும்.
பலதரப்பட்ட மொழிகள் பேசப்படும் இந்நாட்டின் பன்மைத்துவத்தைச் சிதைத்து, இந்தி எனும் ஒரே மொழியை இந்தியா முழுக்க நிறுவ முற்படுவது இந்நாடு ஏற்றிருக்கிற கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான கொடுஞ்செயல்.
ஆகையினால், அந்நிய மொழிக்கு வேர்பரப்புகிற வேலையைக் கைவிட்டுவிட்டு மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதன் முக்கியத்துவத்தை உணர்ந்து,
அந்தந்த மாநிலங்களில் அந்தந்த மொழிகளுக்கே முதன்மைத்துவம் தரப்பட இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.
பல தேசிய இனங்கள் வாழும் பெரும் நிலப்பரப்பான இந்திய ஒன்றியத்தை ஆளுகை செய்துவரும் பாஜக அரசு தனது அதிகார வலிமையைக் கொண்டு நாடெங்கிலும் இந்தியைத் திணிக்க முற்பட்டால்,
இந்தியாவின் மற்ற மாநிலங்கள் அதனை ஏற்றுக் கொண்டாலும், அம்முடிவினை ஏற்றுக் கொண்டாடித் தீர்த்தாலும், தமிழ் மண் போர்க்கோலம் பூண்டு, வன்மையான எதிர்ப்பினை வெளிப்படுத்தும்; தமிழர் நிலத்தில் மீண்டுமொரு மொழிப்போர் வெடிக்கும்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
சபாநாயகருக்கு ஓ.பி.எஸ் 2ஆவது கடிதம்!
புதிய நிர்வாகிகள்: எடப்பாடி மாவட்டத்தில் கைவைத்த பன்னீர்