அலுவலகத்தில் நுழைந்ததும் வைஃபை கனெக்ட் ஆனதும், ‘அமித் ஷா விசிட்டில் நடந்தது என்ன?’ என்ற கேள்விகள் மெசேஜில் வந்திருந்தன. அவற்றுக்கு பதில் சொல்லும் வகையில் தனது பதில் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.
“பாஜகவின் இரும்பு மனிதர் என்று அக்கட்சியினரால் அழைக்கப்படும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று (நவம்பர் 12) சென்னையில் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75 ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொண்டுவிட்டு… அதன் பின் பாஜகவின் மாநில அலுவலகமான கமலாலயத்துக்கு மதியம் 2 மணிக்கு சென்றார்.
நிர்வாகிகளின் வரவேற்புக்குப் பின்னர் அங்கிருந்த பாரத மாதா சிலைக்கு மரியாதை செலுத்தினார். அமித் ஷாவுக்கு சென்னையில் இன்னும் ஒரு மணி நேரமே பயணத் திட்டம் இருந்ததால் உடனடியாக கமலாலயத்தின் முதல் தளத்தில் இருக்கும் மினி ஹாலில் கோர் கமிட்டி என்று அழைக்கப்படும் முக்கிய நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டினார்.
மாநில தலைவர் அண்ணாமலை, மாநிலப் பொதுச் செயலாளர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கலந்துகொண்ட கூட்டம் அது. எல்லாருக்கும் வாழ்த்து தெரிவித்த அமித் ஷா அண்ணாமலையின் முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.
தமிழக பாஜகவின் செயல்பாடுகள் பற்றி அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் சில குறிப்புகளை ஏற்கனவே அமித் ஷாவுக்கு அனுப்பியிருந்தார். நேற்று அவர் வெளியூரில் இருந்ததால் கமலாலயத்துக்கு வரவில்லை. மாநில முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித் ஷா,
’தமிழ்நாட்டில் இப்போது பாஜக செல்லும் திசை சரியாக இருக்கிறது. இதே திசையில்தான் நாம் செல்ல வேண்டும். ஆனால் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பூத் கமிட்டிகளையும் நாம் வலுப்படுத்த வேண்டும். ஒவ்வொரு பூத்திலும் கட்சியின் கட்டமைப்பை உறுதிப்படுத்துங்கள். அதுதான் நமக்கு முக்கியம்.
இவர்களால் ஜெயித்தோம், அவர்களால் ஜெயித்தோம் என்றெல்லாம் நம்மை யாரும் சொல்ல கூடாது. நாம் சொந்தக் காலில் நிற்க வேண்டும். கட்சியை வலுப்படுத்துவதே நமக்கு முக்கியம். திமுகவை எதிர்த்து இன்னும் மூர்க்கமாக சண்டையிடுங்கள். ஒவ்வொரு அமைச்சரின் ஊழலையும் மக்களிடம் அம்பலப்படுத்துங்கள். திமுக ஆட்சிக்கும், அமைச்சர்களுக்கும் எதிராக இதேபோன்ற அதிர்வுகளை நாம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு தொடர்ந்து மத்திய அமைச்சர்களை அனுப்புகிறார். தமிழ்நாட்டுக்கு வரும் மத்திய அமைச்சர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்,அவர்களது வருகை பற்றி மக்களிடம் எடுத்து செல்லுங்கள். தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நமது மத்திய அரசால் எத்தனை பேர் நலத்திட்ட உதவிகள் பெற்றார்கள் என்பதை நீங்கள் போய் கேட்டால் கலெக்டர்கள் கொடுக்க மாட்டார்கள். ஆனால், மத்திய அமைச்சர்கள் கேட்டால் கொடுப்பார்கள். மத்திய அமைச்சர்கள் மூலம் அந்த விவரங்களை வாங்கி மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். எக்காரணம் கொண்டும் நாம் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். கட்சிக்கு புதியவர்களை அழைத்து வாருங்கள். இதே திசையில் இன்னும் வேகத்தோடு செல்லுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார் அமித் ஷா.
அதன் பின் இரண்டாவது தளத்தில் நிர்வாகிகளுடன் சிறிது நேரம் உரையாற்றினார். அப்போதும், “தமிழகத்தில் பாரதிய ஜனதா வேகமாக வளர்ந்து வருகிறது. நம் ஓவ்வொருவரும் கட்சிக்காக உழைக்க வேண்டும். கூட்டணி பற்றியெல்லாம் தேசிய தலைமை பார்த்துக் கொள்ளும், நீங்கள் அதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் கட்சியை வளர்ப்பதில் கவனத்தை செலுத்துங்கள்’ என்று பேசியிருக்கிறார் அமித் ஷா.
கூட்டத்தின் இடையே இமாச்சல் பிரதேச தேர்தல் பற்றிய அப்டேட்டுகளும் அமித் ஷாவுக்கு வந்துகொண்டே இருந்தன.
நிர்வாகிகளுடனான சந்திப்புக்குப் பின், ‘என்னை வழியனுப்ப விமான நிலையமெல்லாம் வரவேண்டாம். இரண்டு நாட்களாக அலைந்திருப்பீர்கள்’ என்று அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டு… கமலாலய வாசலில் இருந்தே பாஜகவினரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார் அமித் ஷா” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
இன்று இரவே சீர்காழி கிளம்புகிறேன்: முதல்வர்
சாம் கரன் வேகத்தில் சரிந்த பாகிஸ்தான்