அலுவல் மொழி பாராளுமன்ற குழு தலைவர் பொறுப்பிலிருந்து அமித்ஷா பதவி விலக வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தி திணிப்பு போராட்டம்
இந்தி திணிப்பிற்கு எதிராகத் தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக் குழு, தொழில் நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்வி நிறுவனங்களில் இந்தி மொழிதான் பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் பரிந்துரைத்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
நேற்று (அக்டோபர் 15) தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி மற்றும் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமாவளவன் அறிக்கை
தற்போது விசிக தலைவர் திருமாவளவன் அலுவல் மொழி ஆய்வுக் குழுவின் பரிந்துரையை எதிர்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான ‘அலுவல் மொழிக்கான பாராளுமன்ற குழு’ அண்மையில், குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள அறிக்கையின் விவரங்கள் ஊடகங்களுக்குத் தெரிய வந்து இந்தி பேசாத மாநில மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பே அறிக்கையின் விவரம் ஊடகங்களுக்கு வெளியானது பாராளுமன்ற விதிகளுக்குப் புறம்பானதாகும். எனவே அந்த அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும்.
அத்துடன், அக்குழுவின் தலைவர் பொறுப்பு வகிக்கும் அமித்ஷா அவர்கள் பொறுப்பிலிருந்து விலக வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
அலுவல் மொழிக்கான பாராளுமன்றக் குழு அளித்துள்ள அறிக்கையில் நூறு பரிந்துரைகளை முன் வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஐஐடி, ஐஐஎம், மத்திய பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் இந்தியையே பயிற்று மொழியாக்க வேண்டும். ஒன்றிய அரசின் நிர்வாகத் தொடர்புகள் அனைத்துக்கும் இந்தியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்தியைப் பயன்படுத்தாத மத்திய அரசின் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றெல்லாம் அந்த பரிந்துரைகளில் கூறப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் வைக்கப்பட வேண்டும். விதிவிலக்காக சில நேரங்களில் அதை முன்னதாகவே அரசிடம் அளிக்கலாம்.
ஆனால் பாராளுமன்றத்தில் அறிக்கை வைக்கப்படும் வரை அது ரகசியமாக இருக்க வேண்டும் என்பது விதி.
அலுவல் மொழிக்கான பாராளுமன்றக் குழுவில் மக்களவையைச் சேர்ந்த 20 எம்.பிக்களும், மாநிலங்களவையைச் சேர்ந்த 10 எம்.பிக்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள்.
இந்தியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அந்தக் குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள் யாரும் இடம்பெறுவதில்லை. இப்போதும்கூட பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் எம்.பிக்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக உள்ளனர்.
அலுவல் மொழிக்கான பாராளுமன்றக் குழுவின் முதல் அறிக்கை 1987 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது 11ஆவது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
குடியரசுத் தலைவரிடம் அளிக்கப்பட்ட இந்த அறிக்கையின் விவரங்கள் உள்துறை அமைச்சகத்திலிருந்து தான் கசிய விடப்பட்டது எனக் கூறப்படுகிறது. அவ்வாறெனில், அதற்குப் பொறுப்பேற்று பாராளுமன்ற குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து உள்துறை அமைச்சர் விலக வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
பாஜக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு எல்லா நிலைகளிலும் இந்தியைத் திணிப்பதற்கு முயற்சி செய்யப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தின் இடத்தை இந்தியைக் கொண்டு பதிலீடு செய்வது என்று திட்டமிட்டு அவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
மாநில மொழிகளின் உரிமைகளை மறுத்து அவற்றை அழிக்கப் பார்க்கிறார்கள். இத்தகைய இந்தி ஏகாதிபத்திய அணுகுமுறையின் மூலம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம்.
அலுவல் மொழி குழு பரிந்துரைகளை அளிப்பது வழக்கம் தான் என்றாலும் இந்த பரிந்துரைகள் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மக்களைத் திருப்திப்படுத்தி அவர்களுடைய வாக்குகளை வாங்குவதற்கான பாஜகவின் தந்திரம் என்பதாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
அமித்ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்குச் சென்று ’மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் குஜராத்தில் இந்தியைப் பயிற்று மொழி ஆக்குவோம்’ என்று பேசத் தயாரா? அப்படி அவர் பேசி குஜராத்தில் வாக்கு கேட்க முடியுமா?
நாட்டின் பொருளாதார நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் சூழலில் அதைப் பற்றி கொஞ்சமும் சிந்திக்காமல் பட்டினியால் வாடுவோர் அதிகம் உள்ள நாடு என்னும் அவப்பெயரை இந்தியாவுக்கு உருவாக்கி இருக்கும் பாஜக அரசு, மொழி அடிப்படையிலான இத்தகைய பிரிவினைவாத நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
137 ஆண்டுகளில் 6ஆவது முறையாக காங்கிரஸ் தேர்தல்: இதுவரை வெற்றி பெற்றவர்கள் யார் யார்?
பாகுபலி – கே ஜி எஃப் கலவையாக ‘சலார்’!