பாஜக அரசுக்கு அரசியல் சட்டத்தையும், அம்பேத்கர் செய்த பணியையும் அழிப்பதுதான் வேலை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையாகி நாடு முழுவதும் கண்டனத்தை பெற்று வருகிறது. நாடாளுமன்றத்திலும் இரு அவை எம்.பி.க்களும் அமளி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் மோடி எதிர்கட்சிகளுக்கு ட்விட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில், “ஒரே கட்சி, ஒரே குடும்பம் மீண்டும் மீண்டும் ஆட்சி செய்து மோசமாக செயல்பட்டு அம்பேத்கரின் பெருமைகளை அழிக்கவும், எஸ்சி / எஸ்டி சமூகத்தினரை அவமதிக்கவும் செயல்பட்டது என்பதை மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
அம்பேத்கரை காங்கிரஸ் இருமுறை தேர்தலில் தோற்கடித்தது. அம்பேத்கருக்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரை தோற்கடிக்க தீவிரமாக செயல்பட்டவர் நேரு. அம்பேத்கருக்கு பாரத ரத்னா மறுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அம்பேத்கர் புகைப்படத்தை வைக்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
காங்கிரஸ் ஆட்சியில் எஸ்சி/எஸ்டி சமூகங்களுக்கு எதிரான மிக மோசமான படுகொலைகள் நடந்தன என்பதை அவர்களால் மறுக்க முடியாது.
காங்கிரஸ் எப்படியெல்லாம் அம்பேத்கரை அவமதித்தது என்பதைத்தான் அமித்ஷா நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். அமித்ஷா சொன்ன உண்மைகளால் அவர்கள் ஆட்டம் கண்டுவிட்டனர். அதனால்தான் அவர்கள் இப்போது நாடகமாடி வருகிறார்கள்.
ஆனால் உண்மை என்னவென்று மக்களுக்குத் தெரியும்.
கடந்த 10 ஆண்டுகளாக அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்ற இந்த அரசு அயராது உழைத்து வருகிறது” என்று அடுத்தடுத்த ட்வீட்கள் மூலம் தெரிவித்துள்ளார் மோடி.
மோடி இவ்வாறு பதிவிட்ட சில நிமிடங்களில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர்.
பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம்.பிர்லா ஆகியோரும் உடன் இருந்தனர். இந்த சந்திப்பில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை பரிந்துரைப்பது தொடர்பாக ஆலோசனை நடந்ததாக டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அம்பேத்கர் குறித்த சர்ச்சை பேச்சு, காங்கிரஸுக்கு எதிரான மோடியின் பதிவுகள் ஆகியவற்றை தொடர்ந்து இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ”அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜக மற்றும் அதன் தலைவர்கள் ஆரம்பம் முதலே கூறி வந்தனர்.இவர்கள் அம்பேத்கர் மற்றும் அவரது சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள். அரசியல் சட்டத்தையும், அம்பேத்கர் செய்த பணியையும் அழிப்பது மட்டுமே இவர்களின் வேலை. இது முழு நாட்டுக்கும் தெரியும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பாஷா மரணம்: தேர்தல் முடிவுகளை மாற்றிய கோவை குண்டுவெடிப்பு!
”அம்பேத்கரை அவமதித்தது காங்கிரஸ் தான்” : அமித் ஷாவுக்கு ஆதரவாக பிரதமர் மோடி அறிக்கை!