மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகையால் தமிழக பாஜகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை புதுப்பிக்கப்படும். அந்த வகையில் நாடு முழுவதும் பாஜக உட்கட்சி தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக கிளை, மண்டல, மாவட்ட தலைவர்கள் ஒவ்வொருவராக அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், தமிழக பாஜகவின் அடுத்த மாநிலத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் யார்?
கடந்த 2022ஆம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்து வருகிறார். தற்போது மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் பெயர்களும் அடிபடுகிறது.

எனினும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நெருக்கமாக இருக்கும் அண்ணாமலையே மீண்டும் தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கிடையே அமித் ஷா வரும் 31ஆம் தேதி சென்னைக்கு வர உள்ளதால், தமிழக பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவரது வருகை தமிழக பாஜக தலைவர் ரேஸில் அண்ணாமலைக்கு மேலும் வலு சேர்க்கும் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

அமித் ஷா வருகையின் காரணம்!
இதைப்பற்றி தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளிடம் விசாரித்தோம்.
”அமித் ஷா சென்னை வருவதற்கு முக்கியமான காரணம், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கையா நாயுடுவின் பேரன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் 31ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்ளதான் அவர் சென்னை வருகிறார். இந்த வருகையின்போது, அரசியல் சார்ந்த நிகழ்வுகள் எதுவும் இருக்காது” என்றார்கள்.