மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் இன்றும் நாளையும் நான்கு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்குமாறு முதல்வர் ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல்வர் ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும் கேட்டுக் கொண்டார்.
உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் மத்திய அரசிடம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எனக்காக என் நண்பர்கள் செய்த உதவி: லோகேஷ் கனகராஜ்
மின்சாரம் எப்போது வரும்? – அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!