டிஜிட்டல் திண்ணை: அமித்ஷா அப்பாயின்ட்மென்ட் யாருக்கு? செந்தில்பாலாஜியை காக்க ஸ்டாலின் வியூகம்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் ஜூன் 10ஆம் தேதி அமித்ஷா சென்னை வரும் செய்தி இன்பாக்ஸில் வந்து விழுந்தது.

அதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 10ஆம் தேதி இரவு சென்னை வருகிறார். ஜூன் 11ஆம் தேதி வேலூரில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஒன்பதாவது ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதற்காக சென்னை வரும் அமித்ஷா விமான நிலையம் அருகில் தென்சென்னை நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியின் பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

ஒவ்வொரு முறை அமித்ஷா சென்னை வரும் போதும் தமிழகத்தில் உள்ள பாஜகவின் கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு கிளம்பி விடும். அதேபோல இந்த முறையும் விவாதம் தொடங்கிவிட்டது. இதில் குறிப்பிடத்தகுந்தது என்னவென்றால் தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடியை அங்கீகரித்த பின் அமித் ஷா முதன்முறையாக சென்னை வருகிறார்.  

பன்னீர்செல்வம் தன்னை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று கூறிவரும் நிலையில்…  சென்னை வரும் அமித்ஷாவை சந்திப்பதற்கு பல்வேறு வகைகளிலும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார். இன்று மாலை வரை எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தான் இருக்கிறார். சமீபத்தில் தான் அவர் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்ததால் தற்போது அவர் சந்திப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Amit Shah appointment ops Stalin's strategy

அதே நேரம் பன்னீர்செல்வம் எப்படியாவது அமித்ஷாவை சந்தித்து விட வேண்டும் என்றும்…  சந்திப்பின்போது தானும் டிடிவி தினகரனும் வெளிப்படையாக இணைந்திருப்பதை அமித்ஷாவிடம் நேரடியாகத் தெரிவித்து,  அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்ற அமித்ஷாவின் பழைய கோரிக்கையை  மீண்டும் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.  ஆனால் சென்னை வரும் அமித்ஷா பாஜக நிர்வாகிகளை தவிர கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறாரா என்பது பற்றி பாஜக வட்டாரங்களிலேயே இன்னும் தெளிவு செய்யப்படவில்லை.

எடப்பாடியை லேட்டஸ்டாக டெல்லியில் சந்தித்தபோது, அதிமுகவின் அனைத்து அணிகளும் ஒருங்கிணைவதில் உங்களுக்கு என்ன சிக்கல் என்று கேட்டிருந்தார் அமித் ஷா.  அதற்கு எடப்பாடி பழனிசாமி,  99 சதவீத அதிமுக தனது தலைமையில் இருப்பதாகவும் மீதி ஒரு சதவீத கட்சி தான் சில பிரிவுகளாக இயங்குவதாகவும் அதனால் தேர்தல் பாதிப்பு எதுவும் இருக்காது என்றும் அமித்ஷாவை சமாதானப்படுத்தினார்.

ஆனால் பன்னீர்செல்வமோ… ’நானும் டிடிவி தினகரனும் இணைந்து செயல்படுவதால் டெல்டாவிலும் தென் மாவட்டங்களிலும் அதிமுகவுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படும். தன் சுயநலத்திற்காக இதை எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பாஜகவிடம் மறைக்கிறார். இதுதான் யதார்த்தம்’ என்று அமித்ஷாவிடம் கூற திட்டமிட்டுள்ளார். இதற்காகவே அமித்ஷாவை சந்திப்பதற்கு அவர் கடுமையாக முயற்சித்து வருகிறார்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்த வாட்ஸ் அப் அடுத்த செய்தியை டைப் செய்யத் தொடங்கியது.

”டெல்டாவில் தூர்வாரும் பணிகளை பார்வையிடுவதற்காக சென்ற தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இன்று ஜூன் 9ஆம் தேதி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Amit Shah appointment ops Stalin's strategy

அப்போது சட்ட மசோதாக்களை ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பதற்கு எதிராக தெலுங்கானா மாநில அரசு நீதிமன்றம் சென்றது போல தமிழ்நாடு அரசு செல்லுமா என்ற கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ‘இதுகுறித்து சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்தார்.

இந்த பதில் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில்… இதே ஆளுநர் தொடர்பான இன்னொரு விவகாரத்திலும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ஆலோசனை நடத்திக் கொண்டிருப்பதாக கோட்டை வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.

ஜூன் 6ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளுநர் நடத்தும் ஆலோசனை என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

கேரளா ஆளுநர் ஆரிப் முகமது கான் கேரள மாநில அரசின் நிதியமைச்சர் பாலகோபாலை அமைச்சரவையில் இருந்து அகற்ற கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு 2022 இல் கடிதம் எழுதினார். அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் தமிழகத்திலும் ஆளுநர் ஒரு காய் நகர்த்தி வருகிறார். 

உச்சநீதிமன்றத்தால் செந்தில் பாலாஜி மீது போலீஸ் விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ள நிலையில்…. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்தால் அந்த விசாரணை சுதந்திரமாக நடக்காது என்று ஆளுநரிடம் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அரசியல் அமைப்பு ரீதியாக நடவடிக்கை எடுக்கும்படி  முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் கடிதம் அனுப்ப ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் அப்படி ஒரு கடிதத்தை தமிழக அரசுக்கு ஆளுநர் மாளிகை அனுப்பி இருப்பதாக இப்போது தகவல்கள் கிடைக்கின்றன. இதன் அடிப்படையிலும்… முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநருக்கு பதில் அளிப்பது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்துக் கொண்டிருப்பதாகவும் கோட்டை வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள். கேரள முதல்வர் போல பதில் கடிதம் எழுதலாமா அல்லது ஆளுநருக்கு பதில் அனுப்பாமல் விட்டுவிடலாமா என்பது பற்றிய ஆலோசனையும் முதல்வர் வட்டாரத்தில் நடந்து வருகிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

தென்னிந்திய ரசிகர்களுக்கு ஷாகித் கபூரின் கோரிக்கை!

பைக் டாக்சிக்கு அனுமதியா? அமைச்சர் சிவசங்கர் பதில்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
2
+1
0
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *