தெலுங்கானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை நேற்று இரவு (ஆகஸ்ட் 21) ஹைதராபாத்தில் சந்தித்தார்.
தெலுங்கானாவில் முனுகோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ் கோபால் ரெட்டி சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து முனுகோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையடுத்து இடைத்தேர்தலுக்கு முன்னதாக முனுகோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஷா ஒரு நாள் பயணமாக நேற்று தெலுங்கானாவுக்கு சென்றிருந்தார்.
அதன்படி நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ் கோபால் ரெட்டி, அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அமித் ஷா கடும் விமர்சனம்!
அப்போது பேசிய அமித் ஷா தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசை கடுமையாக விமர்சித்தார்.
அவர், “ராஜகோபால் ரெட்டி பா.ஜ.க. வில் இணைந்தது தெலுங்கானாவில் கே.சி.ஆர் அரசாங்கத்தை வேரோடு பிடுங்குவதற்கான ஆரம்பம். கேசிஆர் அரசு விவசாயிகளுக்கு எதிரானது.
மாநில விவசாயிகளுக்கு பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தை கே.சி.ஆர் மறுத்து வருகிறார். முன்பு தாங்கள் ஆட்சி அமைந்தால் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்குவோம் என்று கேசிஆர் உறுதியளித்தார்.
ஆனால் அவர் இதுவரை அதை செய்யவில்லை. நீங்கள் அவரை மீண்டும் தேர்ந்தெடுத்தால், கே.சி.ஆருக்குப் பதிலாக கே.டி.ஆர் வருவார், ஆனால் தலித் வரமாட்டார்” என்று ஷா கூறினார்.
அமித் ஷா – ஜூனியர் என்டிஆர் சந்திப்பு!
அதனை தொடர்ந்து இரவு 10.30 மணியளவில் ஷம்ஷாபாத்தில் உள்ள நோவோடெல் ஹோட்டலில் அமித்ஷாவை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் சந்தித்தார். அமித் ஷாவுக்கு சால்வை அணிவித்து ஜூனியர் என்டிஆர் மரியாதை செய்தார்.
45 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பில், 20 நிமிடங்கள் இருவரும் தனியாக உரையாடினர். அப்போது, சமீபத்தில் வெளிவந்த RRR திரைப்படத்தின் வெற்றிக்காக ஜூனியர் என்டிஆருக்கு அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சீனியர் என்.டி. ஆரை புகழ்ந்த அமித் ஷா!
மேலும் அப்போது அவரது தாத்தாவான சீனியர் என்டிஆர்-ஐ அமித் ஷா குறிப்பிட்டு பேசியதாக பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அப்போது, என்டிஆரின் விஸ்வாமித்ரா, தனவீரசுர கர்ணா ஆகிய திரைப்படங்களை தான் கண்டுள்ளதாக ஜூனியர் என்டிஆரிடம் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
என்டிஆர் ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது அதிகாரிகள் சிறப்பாக பணியாற்றியதாக அவர் பாராட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித் ஷா இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில்,”திறமைவாய்ந்த நடிகரும், தெலுங்கு சினிமாவின் தனித்துவமானவருமான ஜூனியர் என்டிஆர்-ஐ ஹைதராபாத்தில் சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தலுக்கு குறிவைக்கும் பாஜக!
அமித்ஷா – ஜூனியர் என் டி ஆர் இடையிலான இந்த சந்திப்பு தெலுங்கானாவில் 2023ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு பாஜக இட்டுள்ள அடித்தளமாக பார்க்கப்படுகிறது. ஜூனியர் என்டிஆர், தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவின் பேரன்.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜகவை கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில் தற்போது அமித் ஷா, தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு நடிகர் ஜூனியர் என்டிஆரை சந்தித்துள்ளது தெலுங்கானா அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: தமிழ்நாட்டு பக்கம் தலைவைத்து படுக்கமாட்டேன்- அமித் ஷா கோபம்!