நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளிவந்த நிலையில்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வெளிப்படையாகவும், திரை மறைவாகவும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.
டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டமும், இந்தியா கூட்டணி கூட்டமும் ஜூன் 5 ஆம் தேதி நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இப்போது இடம் பெற்றிருக்கும் சந்திரபாபு நாயுடுவையும் நிதிஷ்குமாரையும் எப்படியாவது இந்தியா கூட்டணிக்கு அழைத்து வர வேண்டும் என்று பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதேநேரம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்த முறை தாங்கள் பெற்ற வெற்றி, மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வெற்றி என்பதை உணர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
இது குறித்து டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்த பாஜக நிர்வாகிகள் சிலர் மின்னம்பலத்திடம் பேசியபோது,
”2019 தேர்தலைப் போல அசுர பலத்துடன் இந்த முறை பாஜக ஆட்சியைப் பிடிக்கவில்லை. அதற்கு மாறாக கடிவாளம் போடப்பட்ட ஒரு நிலை தான் இருக்கிறது. இந்த நிலையில்தான் ஜூன் 4-ம் தேதி மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினை தொடர்பு கொண்டு தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையான வெற்றி பெற்றிருப்பதற்கு தனது வாழ்த்துக்களை தனிப்பட்ட முறையில் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஸ்டாலினும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் கீப் இன் டச் என்றும் ஸ்டாலினிடம் அமித் ஷா சொல்லியிருக்கிறார்” என்கிறார்கள்.
மீண்டும் பாஜக ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்று ஸ்டாலின் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார், இதற்காக சந்திரபாபு நாயுடுவிடம் கூட ஸ்டாலின் தரப்பில் பேசப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அமித் ஷா தனிப்பட்ட முறையில் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாரா என்று ஆச்சரியமாக நாம் கேட்டதற்கு,
”தேசிய ஜனநாயக கூட்டணியிலே இடம்பெற்றிருக்கிற சந்திரபாபு நாயுடுவின் வெற்றியை திமுக தலைவர் ஸ்டாலின் வெளிப்படையாகவே வாழ்த்தினார். ஆனால் அதுபோல அமித்ஷா வெளிப்படையாக வாழ்த்தாமல் தனிப்பட்ட முறையில் வாழ்த்தியிருக்கிறார்.
இந்த முறை எல்லா மாநிலக் கட்சிகளோடும் சுமுக உறவில் இருக்க வேண்டும் என்று பாஜக தலைமை திட்டமிட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் கூட்டணி எல்லைகளையும் சித்தாந்த எல்லைகளையும் தாண்டி வெற்றி பெற்றவர்களுக்கு அமித்ஷா தனிப்பட்ட முறையில் வாழ்த்து சொல்லி இருக்கிறார்” என்கிறார்கள் டெல்லி அமித் ஷா இல்லத்தில் நடப்பவற்றை அறிந்த பாஜக பிரமுகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
தென்னை மரத்துல ஒரு குத்து பனை மரத்துல ஒரு குத்து: அப்டேட் குமாரு
தயங்கிய மோடி… சம்மதிக்க வைக்க அமித் ஷா சொன்ன பகீர் காரணம்!