கடந்த ஜூலை 30ஆம் தேதி மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இதில் கலந்துகொண்ட அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி கூறிய கருத்துகள் மற்றும் அதற்காக அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சர்ச்சையானது.
இதுதொடர்பாக இயக்குநர் அமீர் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
கேள்வி:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேடையில் பேசிய பேச்சு பரபரப்பாக பேசப்பட்டது, தொடர்ச்சியாக திமுகவையும் காங்கிரஸ் கட்சியையும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆதரிக்கின்றனர்.
அவர்கள் எல்லாம் சைத்தானின் பிள்ளைகள் ஆகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் அவர்கள் மீது நான் அன்பு வைத்திருக்கிறேன். அந்த பேரன்பின் வெளிப்பாடு தான் அது. அதை புரிந்து கொள்ளுங்கள் என்று சீமான் சொல்கிறார் இதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:
பொதுமேடைகளில் அவர் இப்படி உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வழக்கம் தான். மணிப்பூர் கலவரம் ஹரியானா கலவரம் , ரயிலில் வந்த மூன்று இஸ்லாமியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் இப்படி இந்த கொடூரங்களை எல்லாம் மறக்கடிக்கும் வேலையாக இது ஒரு பேசு பொருளாக மாறியிருக்கிறது என்பது எனக்குள் ஒரு பயத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
வாக்கு அரசியலை எதிர்நோக்கி இருக்கும் ஒரு அரசியல்வாதி இதுபோன்று பேசுவது தவறு.
கேள்வி:
ஓட்டுக்காக நான் நிற்கவில்லை நாட்டுக்காகத்தான் நிற்கிறேன் என்று சீமான் பல மேடைகளில் பேசியிருக்கிறாரே?
பதில்:
நாட்டுக்காக நிற்கவேண்டும் என்று நினைத்து விட்டால் நாம் தேர்தல் அரசியலில் பங்கு பெறவே கூடாது. பெரியாரைப்போல் ஒரு இயக்கமாக இருந்து விட வேண்டும்.
சீமான் உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கிறேன், என்று சொல்லி யிருந்தால் இந்த விவகாரம் முடிந்து இருக்கும். ஆனால் நான் பேசியது சரி என்று சொல்லும் போது தான் இது போன்ற பிரச்சினைகள் வருகிறது. அது சீமானின் வாக்கு வங்கியை பாதிக்கும். இது போன்ற பேச்சுக்கள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
கேள்வி:
இஸ்லாமியர்களை சிறுபான்மையினர் என்று சொல்லாதீர்கள் சொன்னால் செருப்பால் அடிப்பேன் என்று சீமான் சொல்கிறாரே?
பதில்:
இது கேட்பதற்குத் தான் நன்றாக இருக்கும். ஆனால், சீமான் பேசுவது தத்துவம். சிறுபான்மையினர் என்ற சொல் சட்டம். இங்கே சட்டம் பேச வேண்டுமா…இல்லை தத்துவம் பேச வேண்டுமா என்றால் நாம் சட்டத்தின் அடிப்படையில் தான் தத்துவம் பேச வேண்டும். சிறுபான்மை என்பது இந்தியாவில் மத அடிப்படையிலானது. ஆனால், சீமான் பேசுவது தத்துவம்.
சிறுபான்மையினர் என்று சொல்லாதீர்கள் என்று சீமான் சொல்கிறார் என்றால் அவர் ஒன்றிய அரசை தான் இதில் எதிர்க்க வேண்டும்.
பாஜகவின் கொள்கையே சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்க கூடாது என்பது தான். இது எப்படி ஆபத்தானதோ அதைப்போல் தான் சீமான் சிறுபான்மையினர் என்று சொல்லாதீர்கள் என்று சொல்வதும் ஆபத்தானது.
அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம் மைனாரிட்டி சமூகத்திற்கு ஆதரவாக உள்ளது. அதில் சிறுபான்மையினருக்கான சலுகைகள் அதிகம் உள்ளது. எனவே அதை ஒழிக்க வேண்டும் என்பது தானே பாஜகவின் கொள்கை.
கர்நாடகாவில் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது.
இப்படி உள்ள சூழலில் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று சொல்லாதீர்கள் என்று சொல்லும் இந்த பேச்சு பாஜகவின் கொள்கைகளுக்கு வலு சேர்ப்பதைப் போல் உள்ளது.
கேள்வி:
எல்லோரையும் தமிழன் என்று ஒன்று சேர்க்கும் எண்ணமாக அதை பார்க்கலாமா?
பதில்:
மொழி அடிப்படையில் தான் உலகத்தில் நாடுகள் பிரிந்து இருக்கிறது. அது மற்ற நாடுகளுக்கு பொருந்தும் ஆனால் இந்தியாவில் அது பொருந்தாது. காரணம் மற்ற நாடுகளில் பெரும்பான்மையாக ஒரு மொழியை பேசுகின்றனர். ஆனால் , இந்தியாவில் ஒரு மொழியா பேசுகிறோம்? இங்கு சிறுபான்மையினர் என்பது மத அடிப்படையில் தான் பிரிக்கப்பட்டு இருக்கிறது. அதைத்தான் இப்போது பயன்படுத்துகின்றனர்.
இதன் அடிப்படையில் தான் சிறுபான்மையினருக்கு என்று ஒரு அமைச்சகம், சலுகைகள், கல்லூரிகள் செயல்படுகின்றன.
இப்படி இருக்கையில் சிறுபான்மையினர் என்று சொல்லாதே என்று சொன்னால்… இளைய தலைமுறை இதை நம்பி வெளியே வந்தால் எதில் சேர முடியும்?
பட்டியல் இனத்தவரை தலித் என்று சொல்லாதே இட ஒதுக்கீட்டை வேண்டாம் என்று சொல் என்று தூண்டிவிடுவது போலத்தான் சீமானின் இந்த பேச்சுகள் இருக்கிறது.
பாஜகவின் கொள்கைக்கு இது போன்ற உரிமைச் சொல்லாடல் பயன் தந்து விடுமோ என்பது தான் இங்கு மிக முக்கியமானது.
கேள்வி:
பாஜகவின் அரசியலுக்கு சீமான் துணை போகிறாரா? மணிப்பூரில் நடக்கும் கலவரத்தை நிறுத்த வேண்டும் என்று பாஜக அரசை கண்டித்து தானே அவர் ஆர்ப்பாட்டமே செய்தார்.
பதில்:
சீமானுக்கு பாஜக தான் இன்றைக்கு பிரதான எதிரியாக இருக்கும் என்று சொன்னால் எதற்காக காங்கிரஸ் கட்சியையும் திமுகவையும் திட்ட வேண்டும்.
மணிப்பூரில் நடைபெற்ற வன்முறைக்கு காங்கிரஸ் கட்சியும், திமுக வும் காரணம் இல்லை.
மணிப்பூரில் பாஜக ஆட்சியமைத்தால் அங்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்க்கப்படும் என்று சொல்லித்தான் அந்தக் கட்சி அங்கு ஆட்சிக்கு வந்தது.
ஆனால் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தான் மணிப்பூரில் குறி வைத்து சிறுபான்மைச் சமூகம் தாக்கப்படுகின்றனர். சூழலில் இப்படி இருக்க நாம் யாரை இந்த நேரத்தில் கண்டிக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் பாஜகவை விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பது இந்த கலவரத்தை கண்டிக்காமல் மடைமாற்றும் செயலாக நான் பார்க்கிறேன்.
கேள்வி:
2009 ஆம் ஆண்டில் ஈழத்தில் தமிழர்கள் கொல்லப்பட்ட போது அதற்கு காங்கிரஸ் கட்சியும் துணைபோகிறது என்று சீமானுடன் இணைந்து போராட்டம் நடத்தி சிறை சென்றவர் நீங்கள்?
காங்கிரஸ் அப்போது செய்ததைத்தான் பாஜக இப்போது செய்கிறது என்று சீமான் சொல்கிறாரே?
பதில்:
இப்போது பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்பதா அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர்களை விமர்சிப்பதா?. அப்படி இருக்கையில், நாம் தவறு செய்தவர்களை கண்டிக்காமல் இருப்பது அவர்கள் அடுத்த தவறை செய்வதற்கு தூண்டுதலாக இருக்கும். அதன் எடுத்துக்காட்டு தான் ஹரியானா கலவரம்.
கலவரத்தை வைத்துத்தான் பாஜக ஒரு மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்பது தான் அவர்களின் வரலாறு. தேர்தல் அரசியலில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவது இல்லை என்றால் தேசபக்தி என்று சொல்வது.
கர்நாடக தேர்தலில் நாட்டின் பிரதமர் அம்மாநில பிரச்சனைகள் பற்றி பேசாமல் கேரள ஸ்டோரி படத்தை பற்றி பேசுகிறார். அப்படி என்றால் அவர்கள் எதுமாதிரியான அரசியலை முன்னெடுக்கிறார்கள் என்பது புரியும் அது தான் மத அரசியல். கர்நாடகவில் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று சொல்கிறவர்கள் மத அரசியலைத் தான் செய்வார்கள்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது. ஆனால், அதை பற்றி எந்த விசாரணையும் செய்யாமல் பாஜக அதை வைத்து அந்த தேர்தலை சந்தித்தது.
இந்த தேர்தலை எப்படி சந்திக்கலாம் என்று அவர்கள் நினைக்கின்றனர். எங்கெல்லாம் மக்கள் பலவீனமானவர்களாக இருக்கின்றனரோ அங்கெல்லாம் பிரச்சினைகளை உருவாக்குகின்றனர்.
மணிப்பூர் கலவரத்தை மோடியால் நிறுத்த முடியவில்லை ஆனால் உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவும் என்று சொல்கிறார்.
தன் சொந்த நாட்டில் நடைபெறும் கலவரத்தை நிறுத்த முடியாமல் உக்ரைன் போரை நிறுத்த இந்தியா உதவும் என்று எப்படிச் சொல்கிறார்.
இவற்றை பற்றித்தான் சீமான் பேச வேண்டும். நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனையை பற்றித்தான் தற்போது பேச வேண்டும்.
சீமான் காங்கிரஸ் , திமுக இனத்தின் எதிரி…பாஜக மனிதகுலத்தின் விரோதி என்று சொல்கிறார்.
நாம் இப்போது மனித குலத்தின் விரோதியை எதிர்க்க வேண்டுமா? இல்லை இனத்தின் எதிரியை எதிர்க்க வேண்டுமா?
கேள்வி:
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு காரணமே இந்த அமைப்பு தான் என்று சீமான் சொல்கிறாரே?
பதில்:
சிறுபான்மையினராக இருக்கக்கூடிய இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஓட்டை நம்பியா பாஜக இருக்கிறது. பெரும்பான்மை சமூக ஓட்டுகளைத் தான் பாஜக நம்பியிருக்கிறது. அப்படி என்றால் இந்த நாட்டில் நடக்கும் அநீதிகளுக்கும் ,
பிரச்சனைகளுக்கு காரணம் யார் என்று அவர்களைத்தானே கேட்க வேண்டும்.
மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டில் தேர்தல் நடக்குமா என்று பயம் அனைவரிடமும் இருக்கிறது. அப்படி பாஜக ஆட்சிக்கு வந்து அவரசரநிலை பிரகடனத்தை கொண்டுவந்தால் அதை எதிர்க்கக் கூடிய சக்தி இங்கு உள்ள ஊடகங்கள், நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஆகியவற்றிற்கு இருக்கிறதா? அப்படி எதுவும் இல்லை.
மணிப்பூரில் கலவரம் நடந்து பல நாட்களுக்கு பிறகு தான் உச்சநீதிமன்ற நீதிபதி அதை பற்றி பேசுகிறார். இந்த சூழாலில் தான் நாம் 2024 ஆம் ஆண்டு யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. இங்கு இருக்கக் கூடிய இஸ்லாமியர்களுக்கும் மனதிற்குள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற குழப்பம் இருக்கிறது.
கேள்வி:
நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விடுதலை செய்வோம் என்று ஸ்டாலின் சொன்னாரே?
பதில்:
திமுக சொன்னதைப்போல் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வில்லை. அதற்காக என்ன செய்ய முடியும்?
கேள்வி:
அதைத்தானே சீமான் வாக்குக்காக திமுக இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறது மீண்டும் ஏன் அவர்களுக்கே வாக்களிக்கிறீரகள் என்று கேட்கிறார்?
பதில்:
நாம் தமிழர் கட்சிக்கு ஏற்கனவே வாக்களித்துள்ளனர். நாம் தமிழர் இந்த நாட்டில் உள்ள எல்லா பிரச்சனைகளையும் சரி செய்துவிடுமா?
நெறியாளர்: பெலிக்ஸ் இன்பஒளி
தொகுப்பு: மு.வா.ஜெகதீஸ் குமார்
வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம்: வீராங்கனைகளை பாராட்டிய மோடி
ஆந்திராவில் கலவரம்: பேருந்து சேவைகள் நிறுத்தம்!