பாஸ்கர் செல்வராஜ்
அரசியல் பொதுக்கூட்ட மேடையில் டிரம்பைச் சுட்டுக் கொலை செய்ய நடந்த முயற்சி, பைடன் தேர்தலில் இருந்து இப்போது விலகியிருப்பது என அடுத்தடுத்து வானிலையைப்போல அமெரிக்க அரசியல் மாறிக்கொண்டிருப்பது அந்நாட்டில் நிலவும் அரசியல் குழப்பத்தை எடுத்துரைக்கப் போதுமானவை. டிரம்பினுடனான பைடனின் விவாத வீழ்ச்சிக்குப் பின்னான இந்நிகழ்வுகள் டிரம்ப், அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலையை மாற்றி நிச்சயமாக வெற்றி பெறுவார் என்ற நிலையை எட்டியிருக்கிறது. அது உலகெங்கும் அதிர்வலைகளையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
டிரம்பின் வெற்றி ஏன் இவ்வளவு அதிர்ச்சியையும் அச்சத்தையும் தர வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால்…
1. டிரம்ப் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க அவரைக் கொல்ல முயலும் அளவுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன?
2. அவரின் அரசியல் அமெரிக்காவிலும் உலக நாடுகளிலும் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்? ஆகிய இரு கேள்விகளுக்கு விடை காண வேண்டும். அதன்மூலம் இந்தியாவில் அது என்ன மாற்றத்தை ஏற்படுத்தி, தமிழகத்துக்கு எந்தவிதமான பாதிப்பையும் வாய்ப்பையும் வழங்கும் என்பதை ஓரளவு ஊகிக்கலாம்.
கொலை முயற்சியின் தன்மை என்ன?
அடுத்து இந்தக் கொலை முயற்சி தனிநபர் தீவிரவாத முயற்சியா? எதிர்க்கட்சியின் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்பின் செயலா? உறையுள் அரசின் (Deep state) முக்கிய அங்கமான மத்தியப் புலனாய்வு அமைப்பின் (CIA) சதி வேலையா? என்பது குறித்த எந்தத் தெளிவும் இல்லை. கொலை முயற்சிக்கு உள்ளான டிரம்பும் சரி… அதிபர் பைடனும் சரி… அமெரிக்க ஒற்றுமையைப் பேசி இக்கொலைக்குக் காரணமானவர்கள் குறித்துப் பேசாமல் தவிர்ப்பது வியப்பளித்தாலும் புரிந்துகொள்வது கடினமல்ல.
கொலை முயற்சியில் ஈடுபட்ட இளைஞர் யூத இனமதப் பிரிவைச் சேர்ந்தவர். அந்தத் தனிநபரின் கொலை முயற்சி என்றால் அது வெள்ளையின மக்களிடம் உறைந்துள்ள யூத வெறுப்பைக் (Antisemitic) கிளறிவிடும். அது, இந்த அரசியல்வாதிகளைப் பின்னிருந்து இயக்கும் யூதக் குழுக்களின் கோபத்துக்கு உள்ளாக்கி இவர்களின் அரசியல் வாழ்வை முடித்துவிடும்.
ஜனநாயகக் கட்சியின் மீது டிரம்ப் பழி சுமத்தினால் இவரால் உசுப்பிவிட்டு வளர்ந்திருக்கும் குடியரசுக் கட்சியின் தீவிரவாத அமைப்புகள் அவர்களின் மீது தாக்குதல் நடத்தி உள்நாட்டு ஆயுத மோதல் ஏற்படுவதில் போய் முடியலாம். மத்தியப் புலனாய்வு அமைப்பின் சதியென்றால் உலக அரசியல் தலைவர்களை இப்படிக் கொன்றது பேசுபொருளாகி உலகின் முன் அமெரிக்காவின் முகத்திரை கிழியும். எனவே திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக அமெரிக்க ஒற்றுமையைப் பேசி மூடி மறைக்கிறார்கள்.
கொலைக்கான அவசியத்தைப் புரிந்துகொள்வது எப்படி?
இந்த ஒற்றுமை அரசியலைப்போல கொலை முயற்சிக்கான அவசியத்தைப் போதுமான சான்றுகள் வெளிவராத நிலையில் நேரடியாக இப்படிப் புரிந்து கொள்ள இடமில்லை. இக்கேள்வியை அமெரிக்க சமூக அரசியல் பொருளாதார வரலாற்று வளர்ச்சியையும் அதன் இன்றைய நிலையையும் சுருக்கமாக வரையறுத்து அதன் தேவையில் இருந்தே விடையறுக்க இயலும்.
அமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களைத் தவிர்த்துப் பார்த்தால் அங்கு பெரும்பான்மையாக வாழ்பவர்கள் அனைவரும் குடியேறிகளும் அவர்களின் வழிவந்தவர்களும். அவர்களால் கட்டமைக்கப்பட்ட அமெரிக்கா எனும் நாடு ஒரு குடியேறிகளின் நாடு. உலகினர் அனைவரும் இப்படியான குடியேறிகள்தான் என்றாலும் இந்திய, சீன நாட்டு மக்களைப் போன்று ஓரிடத்தில் குடியேறி ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து வாழ்ந்த நாகரிக வரலாற்று வளர்ச்சி கொண்டவர்கள் அல்லர்; மாறாக வெறும் ஐந்நூறு ஆண்டு வரலாறு கொண்டவர்கள் மட்டுமே.
இந்தக் குடியேற்றமும் ஒரே கட்டத்தில் நடந்து முடிந்தது அல்ல; இன்று வரையும் நடந்து கொண்டிருப்பது. குடியேறுபவர்களும் ஓரின, மொழி, பண்பாடு கொண்டவர்களும் அல்லர். இந்தச் சிக்கலானப் பின்புலத்தைக் கொண்ட அந்த நாட்டின் வரலாற்றுக் குடியேற்றத்தையும் மக்களையும் எப்படிப் பகுத்துப் புரிந்து கொள்வது? இவர்கள் குடியேறக் காரணமான போட்டி முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்திய காலகட்டம் என்ற சட்டகத்தில் வைத்து நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்.
அமெரிக்காவின் ஆரம்பகால அரசியல் பொருளாதாரம் என்ன?
மேற்குலகில் தொழிற்புரட்சி ஏற்பட்டு அது கோரிய மூலப்பொருள்களின் தேவைக்கும் சந்தைக்கும் உலக நாடுகளை நோக்கி ஐரோப்பியர்கள் படையெடுத்தார்கள். அப்படிப் படையெடுத்துச் சென்று அமெரிக்காவில் தங்கிய ஐரோப்பிய வெள்ளையினம் அங்கிருந்த பூர்வகுடிகளை வேட்டையாடி இனவழிப்புச் செய்து சிறுபான்மை ஆக்கினார்கள். தொழில்மயமாக்கத் தேவையின் பொருட்டு கறுப்பின அடிமைகளைக் கொண்டுவந்தார்கள்.
மாபெரும் இயற்கை வளமும் திறன்மிக்க தொழிலாளர் வளமும் அங்கே தொழிற்துறை வளர்ச்சிக்கு வித்திட்டு வெள்ளையின முதலாளிகள், திறன்மிக்க வெள்ளையின நடுத்தர வர்க்க தொழிலாளிகள், உடல் உழைப்புக்கும் சேவைக்கும் கறுப்பின அடிமைகள் என்ற நிலையை எட்டியதும் ஐரோப்பிய முதலாளிகளின் ஆதிக்கத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்ட அமெரிக்க வெள்ளையின முதலாளிகள் தங்களுக்கான அமெரிக்க தேசியத்தைக் கட்டமைத்துக் கொண்டார்கள்.
போட்டி முதலாளித்துவம் உலகம் முழுக்க சென்றதில் தொழில்நுட்பத்திறன் ஒரு குறிப்பிட்ட நாட்டிலோ, இனத்திலோ செறிந்திராமல் எல்லா பகுதிகளுக்கும் இன மக்களுக்கும் கிடைக்கப் பெற்று சமூகமயமானது. போட்டிப் போட்டுக்கொண்டு பொருளை உற்பத்தி செய்து விற்றதில் சேர்த்த தொழிற்துறை மூலதன (Industrial Capital) செல்வமும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வணிகம் செய்ய உற்றதுணையாக உருவாகி வளர்ந்து பணத்தைக் குவித்த வங்கி மூலதனமும் (Bank Capital) ஒன்றாகக் கைகோத்துக்கொண்டு உற்பத்தியைக் கைப்பற்றி உலகை ஆள முற்படும் நிதி மூலதனம் (Finance Capital) ஆனது.
அதன் ஆதிக்கத்தில் உற்பத்திக் காரணிகளான நிலம், தொழில்நுட்பம், தரவுகள், தொழிலாளர்களைக் கொண்டுவந்து முதலாளித்துவ உற்பத்தியைக் கட்டுப்படுத்தி உலகை நிர்வகிக்கும் வலிமை வாய்ந்த ஏகாதிபத்தியமாக போட்டி முதலாளித்துவம் மாற்றம் கண்டது. முன்பு இயற்கை வளத்தையும் சந்தையையும் தேடிச்செல்லும் நிலையை மாற்றி உலகுக்கான உற்பத்தியை நடத்தும் நிதி மூலதனத்தை நோக்கி உலக திறன்மிக்க தொழிலாளர்கள் செல்லும் நிலை ஏற்பட்டது. (லெனினின் ஏகாதிபத்திய வரையறை)
பின்பான ஏகாதிபத்திய கால அரசியல் பொருளாதாரம் என்ன?
இந்த நிதி மூலதன ஏற்றுமதி தேவைக்கு உலகைப் பங்கிட்டுக் கொள்ள ஏகாதிபத்தியங்கள் முற்பட்டதில் ஏற்பட்ட போட்டியில் இந்த மூலதனத்தை வைத்திருந்தவர்களின் மத்தியில் உள்முரணை ஏற்படுத்தி உலகப்போர்கள் வெடித்தன. அதன் விளைவாக அன்று ஐரோப்பிய வங்கித்துறையில் ஆதிக்கம் செலுத்திய யூதர்களின் மீதான இனவெறியாக ஐரோப்பிய முதலாளிகள் மாற்றியதில் யூத முதலாளிகள் அங்கிருந்து வெளியேறி அமெரிக்க தொழிற்துறை மூலதனத்துடன் கைகோத்தார்கள். அவர்களுடன் ஐரோப்பிய, ஆசிய திறன்மிக்க அறிவுஜீவிகளைக் கொண்டுவந்து தொழில்நுட்ப வலிமையைப் பெருக்கி உலகை ஆளும் வல்லரசாக அமெரிக்காவை மாற்றினார்கள். அவர்களின் ஆதிக்கத்தின்கீழ் ஐரோப்பாவையும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களையும் ஆதிக்கம் செய்து வருகிறார்கள்.
ஆக, அமெரிக்கக் குடியேற்றத்தைப் போட்டி முதலாளித்துவ கால குடியேற்றம், ஏகாதிபத்திய கால குடியேற்றம் என இரண்டாகவும் அங்கு ஆதிக்கம் செலுத்தும் நிதி மூலதனத்தை வெள்ளையின முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தும் தொழிற்துறை மூலதனம் மற்றும் யூதயின முதலாளிகள் ஆதிக்கம் செலுத்தும் வங்கி மூலதனம் என்றும், அங்கு வாழும் மக்களைப் போட்டி முதலாளித்துவ காலத்தில் குடியேறிய வெள்ளை, கறுப்பின மக்கள், ஏகாதிபத்திய காலத்தில் குடியேறிய பல்லின மக்கள் என்பதாகவும் பகுத்துப் புரிந்து கொள்ளலாம்.
இந்த சமூகப் பொருளாதார பின்னணியில் அமெரிக்க அரசியல் எப்படி வளர்ச்சி கண்டது… இன்று இந்தளவு முரண்பட்டு மோதிக் கொள்ள காரணம் என்ன?
அடுத்த கட்டுரையில் காணலாம்…
கட்டுரையாளர் குறிப்பு
பாஸ்கர் செல்வராஜ் – தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஈரானின் இஸ்ரேலியத் தாக்குதல் அமெரிக்காவின் சூயஸ் தருணமா?
ஈரான்-இஸ்ரேலிய மோதல் மற்றுமொரு சூயஸ் கால்வாய் நெருக்கடியா?
அவிங்களுக்கு என்ன அவசரமோ? : அப்டேட் குமாரு
ஆணவப் படுகொலையை ஆதரித்து பேசிய ரஞ்சித் : விசிக புகார்!
சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!