17 நாட்கள் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு, முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 13) அமெரிக்காவில் இருந்து சென்னை புறப்பட்டார்.
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார். ஆகஸ்ட் 29-ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் சென்றடைந்தார்.
அமெரிக்கவாழ் தமிழர்கள் ஆரத்தி எடுத்து விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, ‘ஸ்டாலின் தான் வராரு’ செம்மொழியான தமிழ் மொழியாம்’ உள்ளிட்ட பாடல்களுக்கு நடனமாடினர். அவர்கள் ‘தமிழ் வெல்லும்’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
இந்த பயணத்தின் போது அமெரிக்காவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து 18 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிகாகோவில், சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
17 நாட்கள் அரசு முறை பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து ஸ்டாலின் இன்று சென்னை புறப்பட்டார். சிகாகோ விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா ஆகியோரை அமெரிக்க வாழ் தமிழர்கள், திமுக நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்தும், ‘நன்றி மீண்டும் வருக’ என்ற போஸ்டர் மற்றும் பதாகைகளை கையில் ஏந்தியவாறு வழியனுப்பி வைத்தனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜிஎஸ்டி குறித்து பேச்சு: நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா சீனிவாசன்