Ambedkar's argument was Political Change or Social Change

அரசியல் மாற்றமா? சமூக மாற்றமா? அம்பேத்கர் முன்வைக்கும் வாதம்! 

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சைத் திரித்து இந்துக்களை ஒழிக்கக் கோருகிறார் என வடஇந்தியா முழுக்க பாஜக பரப்பி பெரும் பேசுபொருளாக்கியது. அதன் நோக்கம் “இந்தியா கூட்டணி இந்துக்களுக்கு எதிரான கூட்டணி” என்ற கருத்தைக் கட்டமைத்து இந்துக்களைத் தங்களுடன் இறுக்கமாகப் பிணைக்கும் அதேவேளை இந்தியா கூட்டணிக்குள் உடைப்பை ஏற்படுத்துவது.

தலைவர்களின் அரசியல் அதிகாரப் பேராவல்

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ, சிபிஎம், ஆர்ஜெடி, விசிக போன்ற கட்சிகள் சனாதனத்தின் சாதியம், ஆணாதிக்கம், சமத்துவமின்மை, பெண்ணடிமைத்தன முகத்தை அம்பலப்படுத்தி உதயநிதியை ஆதரித்துப் பேசின. காங்கிரஸ் கட்சித் தலைவரின் மகன் பிரியாங்க் ட்விட்டரில் அம்பேத்கரின் சொற்களை ஆதாரமாகக் கொண்டு வாதாடி பொதுவெளியில் தன் ஆதரவைத் தெரிவித்தார். ஆனால் அவரது காங்கிரஸ் கட்சி பட்டும்படாமலும் பேசி தள்ளி நின்றுகொண்டது. அக்கட்சியின் ராகுல்காந்தி இந்தச் சர்ச்சையில் ஈடுபடாமல் ஏழைகளின் மீது கவனம் செலுத்தச் சொன்னார். அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ்குமார், சரத் பவார் போன்றோர் கள்ளமௌனம் காத்தனர். மேற்குவங்க முதலமைச்சர் மம்தா சனாதனத்தை மதிப்பதாகவும் இந்துக்கள் மனதைப் புண்படுத்துமாறு பேசவேண்டாம் என எதிர் நிலைப்பாடு எடுத்தார். இந்த ராகுல், நிதிஷ், மம்தா, அரவிந்த், சரத் பவார் எல்லாம் பிரதமர் பதவியில் அமர்ந்து இந்திய மக்களை ஆளும் கனவில் இருப்பவர்கள். இவர்களுக்குத் தங்களை அரியணையில் அமர்த்தும் அரசியல் மாற்றம் மட்டும் வேண்டும். ஆனால் நாம் அனுதினமும் அனுபவிக்கும் சாதியச் சமூகக் கொடுமைகள் பற்றி இவர்களுக்கு எந்தக் கவலையுமில்லை.

அதற்கான தகுதி இருக்கிறதா?

ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் வேண்டும் ஆனால் அவர்களைப் பாதிக்கும் சாதியை நிலைத்திருக்கச் செய்யும் சனாதனத்தைப் பற்றி பேசமாட்டேன் என்று சொன்னால் அம்பேத்கர் கேட்டதைப்போல இதையெல்லாம் பேசாமல் அரசியல் பேராவலுடன் எங்களை ஆளத் துடிக்கும் உங்களுக்கு அதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்றுதான் நாம் அவர்களை நோக்கிக் கேட்கவேண்டி இருக்கிறது. சாதியைப் பற்றிப் பேசினால்தான் எங்களுக்கு ஆளும் அரசியல் தகுதி வருமா? என்று இவர்கள் நம்மைத் திருப்பிக் கேட்கலாம். அப்படிக் கேட்டால் அது முதன்முறையன்று. இவர்களின் மூதாதையர்கள் இப்படியான கேள்வியை ஏற்கனவே கேட்டதாக தனது சாதியொழிப்பு நூலில் (annihilation of caste) பதிவு செய்கிறார் அம்பேத்கர்.

இந்திய விடுதலைக்கு முன்பு காங்கிரசில் அரசியல் சீர்திருத்தமா? சமூக சீர்திருத்தமா? என விவாதம் நடந்திருக்கிறது. 1892இல் காங்கிரஸ் கூட்டத்தில் பொன்னர்ஜி என்பவர் சமூக சீர்திருத்தம் ஏற்படாதவரை அரசியல் சீர்திருத்தம் கூடாதா? மேலைநாடுகளைப்போல நமது விதவைகள் மறுமணம் செய்துகொண்டு, பெண்கள் நம்முடன் வெளியில் சென்று, நாம் அவர்களை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கு படிக்க அனுப்பும்போதுதான் நாம் அதற்குத் தகுதியுடையவர்கள் ஆவோமா? என்று நக்கலாகக் கேட்டிருக்கிறார். (பக்கம் 39) அதற்கு அம்பேத்கர் தீண்டாமை குறித்த செய்திகளைப் பட்டியலிட்டுவிட்டு இந்நாட்டில் பெரும் எண்ணிக்கையில் வாழும் சகமனிதர்களான தாழ்த்தப்பட்டவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காத, பொதுக்கிணற்றில் நீர் எடுக்க, பொதுவீதிகளில் நடக்க, அவர்கள் விரும்பும் ஆடை அணிகலன்களை அணிய, விரும்பிய உணவை உண்ண அனுமதிக்காத அரசியல் ஆர்வம் கொண்ட இந்துக்களான உங்களுக்கு அரசியல் அதிகாரம் பெற என்ன அருகதை இருக்கிறது? என்று திருப்பிக் கேட்கிறார். (பக்கம் 41)

அம்பேத்கரின் அழுத்தமான வாதம்

அரசியல் அதிகாரப் பேராவல் கொண்ட அந்தப் பொன்னர்ஜிக்களும் சரி இந்தப் பார்ப்பன, சாதி இந்துக்களும் சரி எப்போதும் இந்தக் கேள்வியை எதிர்கொண்டு பதில்சொல்லப் போவதில்லை. அந்தப் புத்தகத்தில் அம்பேத்கர் அந்தக் கேள்வியோடு நிற்கவில்லை. இந்தியாவில் அரசியல் பொருளாதார மாற்றத்தை இந்த இந்துச் சாதிய சமூகத்தை உடைப்பதன் மூலமே சாதிக்கமுடியும் என்பதை ஆணித்தரமாக நிறுவும் அனல்தெறிக்கும் தனது வாதங்களை முன்வைக்கிறார். அதனைப் படிக்கும் எவரையும் பற்றிக் கொள்ளும் அனலது.

Ambedkar's argument was Political Change or Social Change

இந்து! இந்து! என்கிறார்கள். ஆனால் அந்தச் சொல்லே வெளியில் இருந்து வந்தது. முகமதியர்கள் வருவதற்குமுன் சமஸ்கிருதத்தில் அந்தச்சொல்லே இல்லை. “இந்துச் சமூகம்” என்ற ஒன்று நடைமுறையில் இல்லை. அது கற்பனை. உண்மையில் அது வெறும் சாதிகளின் கூட்டு என தடாலடியாக அவர்களைத் தாக்குகிறார். (பக்கம் 50) இந்தச் சாதிகள் ஒவ்வொன்றும் தனது இருத்தலை (existence) மட்டுமே நோக்கமாகக் கொண்டது. ஒரு சாதி எப்போதும் மற்ற சாதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் தனித்துவமானதாகக் காட்டிக் கொள்ளவுமே விழைகிறது. இவர்களிடம் ஒத்த பழக்கவழக்கம் பண்பாடு இருக்கிறது. ஆனால் அதனாலேயே இவர்களை ஒரே சமூகமாக எண்ணவியலாது என்கிறார்.

சமூகமாகத் திரள்வதைத் தடுக்கும் சாதி

ஏனெனில் உலகிலுள்ள பழங்குடிகளிடம் எல்லாம் ஒத்தத்தன்மை காணப்படுவதாலேயே அவர்கள் எல்லோரும் ஒன்றென்று கொள்வதில்லையே! மாறாக ஒரு சமூகம் என்றால் அவர்கள் தங்களுக்குள் (நிலம், காடு, நீர்நிலை, மதம்) ஏதேனும் ஒன்றைப் பொதுவாகப் பகிர்ந்துகொள்வார்கள். அதன்பொருட்டு அவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். அதனால் தங்களுக்குள் பங்காளர்களாகத் தோழர்களாக உணர்வார்கள்.

ஆனால் இந்துக்களோ தங்களை இசுலாமியர், சீக்கியர்களைப்போல நாமெல்லாம் இந்துக்கள் என்பதாக அல்லாமல் தனித்தனிச் சாதிகளாகத்தான் உணர்கிறார்கள் (caste consciousness). ஒரே மாதிரியான திருவிழா என்றாலும்கூட தனித்தனியாகத்தான் கொண்டாடுகிறார்கள். இப்படி ஒன்றாக ஒருவரோடு ஒருவர் உறவாடும் பொதுவான செயல்பாடுகளின்றி தனிமைப்படுத்திக் கொண்டு வாழும் இவர்கள் ஒருபோதும் ஒத்த வாழ்வும் உணர்வும் கொண்ட ஒரு சமூகமாகவோ தேசியமாகவோ உருவாகமுடியாது என இந்து தேசியத்தைக் கட்டமைக்க முயலும் இந்துத்துவவாதிகளின் இதயத்தில் இடியாய் இறங்குகிறார். (பக்கம் 50)

தனிமனித அறவொழுக்கத்தைக் கெடுக்கும் சாதி

சரி! ஒரு சமூகமாக தேசியமாக உருவாகத்தான் அதில் இருக்கும் சாதியச் சிந்தனை தடையாக இருக்கிறது. உயர்வான தனிமனித ஒழுக்கத்தையாவது இந்த சனாதன சாதிய இந்துமதம் உருவாக்குகிறதா என்றால் அதுவும் இல்லை என்கிறார். இவர்கள் எல்லாவற்றையும் உயர்வு-தாழ்வு (high and low), தூய்மை-தூய்மையற்றது (clean and unclean) என்ற முன்முடிவுடனே வேறுபடுத்திப் பார்க்கிறார்கள். பொதுமனப்பான்மை, ஒருவருக்கொருவர் உதவுதல், பொதுக்கருத்தை உருவாக்குதல் என அனைத்தையும் இந்தச் சாதி சிதைத்துக் கொன்றுவிட்டது. இந்துக்களைப் பொறுத்தவரை பொதுமக்கள் என்றால் அது அவர்களின் சாதி மட்டும்தான். தனது சாதிக்கு மட்டும்தான் அவன் கடமைப்பட்டவன். அவனுடைய விசுவாசம் அவனுடைய சாதியின் வரம்புக்குட்பட்டது.

இரங்குவது, உதவுவது, பரிவு காட்டுவது எல்லாம் அவனுடைய சாதிக்காரனுக்கு மட்டும்தான். மற்ற சாதிக்காரனுக்குக் கிடையாது. அறிவாளி என்றால்கூட அதுவும் அவன் சாதிக்காரனாக இருந்தால்தான் அங்கீகரிப்பான். தலைமை என்றாலும் அவன் சாதிக்காரனாக இருந்தால்தான் ஏற்பான். மற்றவரை ஒருபோதும் ஏற்கமாட்டான். சரியோ தவறோ நல்லதோ கேட்டதோ எதுவாக இருந்தாலும் இவனுக்கு அவன் தன் சாதிக்காரன்.  இதனால் அறிவு, திறமை, நல்லொழுக்கம் சார்ந்து மற்றவரை இவர்கள் அங்கீகரித்து ஏற்பது அரிது. மொத்தமாக இவர்களின் ஒழுக்கம் ஆதிவாசிகளை ஒத்த மோசமான (tribal morality) அறவொழுக்கம் என்று இந்திய சமூக மக்களின் சிந்தனையில் சாதி உருவாக்கி இருக்கும் அநாகரீக மதிப்பீடுகளைத் துல்லியமாக எடுத்துரைத்து நம் முகத்தில் அறைகிறார்.(பக்கம் 57)

பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கும் சாதி

Ambedkar's argument was Political Change or Social Change

சரி! இந்து சமூகமாக ஒருங்கிணையவும், தனிமனித ஒழுக்கத்தை வளர்க்கத்தான் இந்தச் சாதி தடையாக இருக்கிறது. இதனை வைத்துக்கொண்டு பொருளாதார முன்னேற்றத்தையாவது எட்டமுடியுமா என்றால் அதுவும் முடியாது என்கிறார். தொழிற்துறையானது நிலைத்து நிற்காமல் எப்போதும் இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டும் இருப்பது.  அதற்கேற்ப மனிதர்களும் தமது தொழிலை மாற்றிக்கொள்ளும் வெளி இருக்கவேண்டும். அப்படியான மாற்றத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளவில்லை என்றால் ஒருவனால் பிழைத்திருக்க முடியாது. ஆனால் இந்துக்களின் சாதியமைப்போ ஒருவரின் பிறப்பின் அடிப்படையிலான தொழிலை மாற்ற அனுமதிப்பதில்லை. (அப்போது முதல் இப்போதுவரை)  இந்தப் பிரிவினையை சிலர் வேலைப் பிரிவினை என்பதாக நியாயப்படுத்துகின்றனர்.

இது தொழிற்பிரிவினையல்ல (division of labor); இது தொழிலாளர்களை ஒருவரின்கீழ் ஒருவராக அடுக்கும் தொழிலாளர் பிரிவினை (division of laborers ). தனிநபர்கள் ஒன்றில் பயிற்சி பெற்று தகுதியடைந்து அதனடிப்படையில் தனது பணியைத் தெரிவு செய்யும்போதுதான் அவரும் சமூகமும் செயல்திறன் (efficient) மிக்கதாக விளங்க முடியும்.  ஆனால் இந்தியாவில் ஒருவரின் பெற்றோரின் சமூக நிலைசார்ந்து அவரின் தொழில் முன்னேமே தீர்மானிக்கபடுகிறது.

அதிலும் இந்துமதம் தொழில்களில்கூட மதிப்பானது இழிவானது என்பதான சமூகப்பார்வையை கட்டமைத்திருக்கும் நிலையில் அந்தத் தொழிலைச் செய்பவரின் எண்ணமும் மனமும் எப்படி அதில் ஒன்றும்? அந்த இழிவிலிருந்து எப்போது விடுபட்டு ஓடலாம் என்றிருக்கும்போது அந்தத் தொழிலைச் செய்பவரிடம் இருந்து எப்படி முழுதிறனும் வெளிப்படும்?  இப்படித் தொழிலாளர்கள் தனது விருப்பம்போல தொழிலை மாற்றிக்கொள்ள அனுமதிக்காத அவர்களின் முழுத்திறனும் வெளிப்பட இடமளிக்காத இந்தச் சாதிதான் நம் நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பின்மைக்கு நேரடிக் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். (பக்கம் 48)

இடதுசாரிகளின் பொருளாதார (வரட்டு)வாதம்

இப்படிச் சமூக ஒற்றுமை, தனிமனித அறமதிப்பீடுகள், பொருளாதார வளர்ச்சி என எந்தப் பக்கம் திரும்பினாலும் எல்லாவற்றுக்கும் தடையாக நிற்கும் இந்தச் சாதி எனும் கொடுமிருகத்தை அதனாலான சனாதன சாதியச் சமூக ஒழுங்கை (social order) உடைக்காமல் எள்ளளவும் முன்னேறமுடியாது என்கிறார்.  இவ்வளவு அவசியமான சமூக சீர்திருத்தத்தை அரசியல் பேராவல் கொண்ட இந்துக்கள்தான் புறம்தள்ளுகிறார்கள்; முற்போக்கான இந்திய இடதுசாரிகளாவது இதனை ஆதரிக்கிறார்களா என்று கேட்டால் அதுவும் இல்லை என்கிறார் அம்பேத்கர்.

இந்திய சோசலிஸ்டுகள் அவர்களின் ஐரோப்பியத் தோழர்களைப் பின்பற்றி மனிதர்களின் வாழ்வு பொருட்களால் ஆனது; மனிதர்களின் செயல்கள் அதனை அடைவதை நோக்கியதாக இருக்கிறது; அதுதான் அதிகாரத்தின் மையம்; எனவே மற்ற சீர்திருத்தங்களுக்கு முன்னதாக பொருளாதார சீர்திருத்தமும் அதில் சமத்துவத்தை எட்டுவதும்தான் முதன்மையானது; மற்ற அரசியல் சமூக சீர்திருத்தங்கள் எல்லாம் மாபெரும் மாயை (gigantic illusions) என்று கருதுவதாகப் பதிவு செய்கிறார். (பக்கம் 44)

இந்தச் சோசலிஸ்டுகள் இன்றைய ஐரோப்பிய சமூக வளர்ச்சி நிலையில் சொத்து முதன்மையான அதிகாரமையமாக இருப்பதைக் கொண்டு அதுவே இந்தியாவுக்கும் கடந்தகால ஐரோப்பாவுக்கும் பொருந்தும் என்று நினைப்பதுதான் அவர்களின் வாதத்தில் இருக்கும் பிழை (fallacy).  மதம், சொத்து, சமூகத்தில் ஒருவரின் படிநிலை ஆகிய மூன்றுமே ஒரு மனிதன் மற்றவரின் தனிமனித விடுதலையைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் அதிகாரத்தையும் வழங்குகிறது. ஒவ்வொரு சமூகத்தின் வளர்ச்சிக் கட்டத்தைப் பொறுத்தும் இது மாறுபடுவதுதான் இதில் இருக்கும் வேறுபாடு.  ஒருவர் மற்றவரை ஒடுக்கி ஆதிக்கம் செய்வதை ஒழிப்பதுதான் நோக்கம் என்றால் இந்திய சமூகத்தில் மதத்தின் பெயரால் நடக்கும் ஒடுக்குமுறையை ஒழிக்கும் சமூக மத சீர்திருத்தத்தைச் சோசலிஸ்டுகள் ஏற்பதுதான் சரி என்று வாதிடுகிறார் அம்பேத்கர். 

எப்போது போராடுவான்?

அதுமட்டுமல்ல புரட்சி செய்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றாமல் நீங்கள் கூறும் பொருளாதார சீர்திருத்தத்தை அடையமுடியாது. அதனை இழப்பதற்கு ஏதுமற்ற இந்தியப் பாட்டாளிகள்தான் செய்யவேண்டும். இவர்கள் அப்படியான புரட்சிக்கு ஒன்றிணைவார்களா? இவர்கள் ஏழை-பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வைத் தவிர வேறு பாகுபாடு இல்லையென உணர்கிறார்களா?  இவர்களுக்குள் சாதி, பேராசை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இல்லையென்று சொல்லமுடியுமா? அப்படி இருக்க இவர்கள் எப்படி ஒற்றுமையாக இணைந்து பணக்காரர்களுக்கு எதிராகப் போராடுவார்கள்? அப்படியான ஒற்றுமை சாத்தியமில்லாதபோது இங்கே புரட்சி எப்படி சாத்தியம்? இவர்களை அப்படியான செயல்பாட்டை நோக்கி எது நகர்த்தும்?   வெறும் பொருளாதார சமத்துவத்திற்காக எவரும் தங்களைப் புரட்சியில் ஈடுபடுத்திக்கொள்ள மாட்டார்கள்.

எப்போது ஒருவன் போராடும் சக மனிதனை சமமாகவும், சகோதர உணர்வோடும் இது எல்லாவற்றுக்கும் மேலாக நீதிக்காகப் போராடுகிறோம் என்று உணர்கிறானோ அப்போதுதானே இப்படியான செயல்பாடுகளில் இறங்குவான்.  புரட்சிக்குப் பின்பு தாங்கள் சமமாக சகோதரத்துவ உணர்வுடன் நடத்தப்படுவோம் என்று உறுதிப்படுத்தாதவரை இந்தியாவில் புரட்சிக்கு சாத்தியமில்லை. அப்படியான உணர்வை இந்தச் சாதியச் சமூக ஒழுங்கை உடைக்காமல் எப்படி உண்டாக்கமுடியும்? என்று அம்பேத்கர் அடுக்கடுக்கான கேள்விகளை சோசலிஸ்டுகளை நோக்கிக் கேட்கிறார்.  அப்போதும் இப்போதும் இந்த அடிப்படையான கேள்விகளுக்கு எந்த இடதுசாரியும் நேர்மையாக பதில் சொன்னதாகத் தெரியவில்லை. அவர் இப்படிக் கேட்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது சாதியை ஒரு பிரச்சனையாக ஏற்று சனாதனத்துக்கு எதிராக இடதுசாரிகள் குரல் கொடுக்கத் தொடங்கியிருப்பது சற்று ஆறுதல் தருகிறது. 

இப்படிச் சமூக ஒற்றுமைக்கும் தேசியமாகத் திரள்வதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் அதில் சமத்துவத்தை எட்ட பாட்டாளிகளாய் திரண்டு புரட்சி செய்வதற்கும் தடையாக நிற்கும் இந்தச் சாதியச் சமூக ஒழுங்கையும் மோசமான ஆதிவாசிகளை ஒத்த தனிமனித அறமதிப்பீடுகளையும் எப்படி உடைப்பது? அதனிடத்தில் எதை வைத்துப் பதிலீடு செய்வது? அம்பேத்கரும் பெரியாரும் முன்வைக்கும் மாற்றுகள் என்ன?.

அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

கட்டுரையாளர் குறிப்பு

Ambedkar's argument was Political Change or Social Change by baskar selvaraj

பாஸ்கர் செல்வராஜ், தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

501 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை: தேர்தல் வருவதால் குறையுமா?

32 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி – அமிதாப் கூட்டணி..! 

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *