தமிழாக்கத்தில் அண்ணல் அம்பேத்கரின் படைப்புகள்: தமிழ்நாடு அரசாங்கத்தின் போற்றத்தக்க திட்டம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

எஸ்.வி.ராஜதுரை

2023-24ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் மிகவும் வரவேற்புக்குரிய, பொதுமக்கள் நலன்களைக் காக்கின்ற, பெண்களையும் மாணவர்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் ஊக்குவிக்கின்ற பல திட்ட அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் கொண்டுள்ளது.

அவற்றில் அண்ணல் அம்பேத்கரின் படைப்புகளைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்காக ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணலின் படைப்புகளை வெளியிடும் பொறுப்பு பல ஆண்டுகளுக்கு முன்பே மகாராஷ்டிர அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அந்த அரசாங்கமும், அவ்வப்போது தோன்றிய இடையூறுகளையும் மாற்றங்களையும் கடந்து வந்து அவருடைய ஆங்கில எழுத்துகளில் மிகப் பெரும் பகுதியை நூல் தொகுதிகளாக வெளியிட்டு வந்தது.

ஆனால், அங்கு பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. அண்ணல் அம்பேத்கர் மராத்தி மொழியில் மூன்று ஏடுகளை நடத்தியுள்ளார். அவற்றில் அவருடைய கட்டுரைகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. அவை இன்னும் ஆங்கிலத்திலும்கூட முழுமையாக மொழியாக்கம் செய்யப்படாமல் இருக்கின்றன.

இவை போக, அவருடைய நேர்காணல்கள், கட்டுரைகள், கடிதங்கள் ஆகியன இன்னும் முழுமையாகத் திரட்டப்படாமல் இருக்கின்றன.

அண்ணல் அம்பேத்கரையும் அவரது அடிப்படைக் குறிக்கோள்களையும் தமிழகத்துக்கு முதன்முதலில் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தவர் தந்தை பெரியார்தான். பெரியாரின் சுயமரியாதை ஏடுகளான ‘ரிவோல்ட்’, ‘குடி அரசு’ ஏடுகளில் அம்பேத்கர் பற்றிய முதல் பதிவுகள், எனக்குத் தெரிந்தவரை, 1929இல் காணப்படுகின்றன.

பிரிட்டிஷ் இந்தியக் குடிமக்களுக்கு வாக்குரிமை வழங்குவது தொடர்பாக 1919இல் அமைக்கப்பட்ட சவுத்பரோ குழுவிடம் தாழ்த்தப்பட்டோர் நிலைமைகளையும் உரிமைகளையும் குறித்து அம்பேத்கர் சாட்சியம் அளித்த  நிகழ்வுதான் அவரது தீவிரமான பொது வாழ்வின் தொடக்கமாக இருந்தது எனக் கொண்டால், அந்தப் பொதுவாழ்வு தொடங்கி பத்தாண்டுகளுக்குப் பின்னரே அவரைப் பற்றிய அறிமுகம் தமிழகத்துக்குக் கிடைத்தது எனக் கருதலாம்.

29.5.1929இல் ஜல்கவோன் என்னும் இடத்தில் மத்திய மாகாணங்கள் – பேரார் தாழ்த்தப்பட்டோர் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய உரையை ‘பம்பாயில் சுயமரியாதை முழக்கம்’ என்னும் தலைப்பில் ‘குடி அரசு’ (16.6.1929) வெளியிட்டது. அம்பேத்கர் நிறுவிய ‘சமாஜ் சமதா சங்’ (சமுதாய சமத்துவ சங்கம்) மராத்தியத்திலுள்ள சிட்டகெய்னில் நடத்திய முதல் மாநாட்டில் அம்பேத்கர் ஆற்றிய தலைமையுரையின் மிகச் செறிவான சுருக்கம் ஆங்கிலத்திலும் தமிழிலும் மேற்சொன்ன ஏடுகளில் வெளியிடப்பட்டது.

அந்த மாநாட்டை பெரியாரின் சுயமரியாதை இயக்கம், ‘முதல் மகாராஷ்டிர சுயமரியாதை மாநாடு’ என்று வர்ணித்தது. அதே ஆண்டுத் தொடக்கத்தில்தான் சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.

‘சமாஜ் சமதா சங்’கின் முதல் மாநாட்டுக்கு “தென்னிந்திய சுயமரியாதை இயக்கத்தின் பிரபல தலைவர் ஈ.வே.ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்கு படிக்கப்பட்டன” என்னும் செய்திக் குறிப்பிலிருந்து பெரியாரும் அம்பேத்கரும் அதற்கு முன்பே ஒருவரையொருவர் அறிந்திருந்தனர் என்றோ, இருவருக்கும் தொடர்பு இருந்ததோ என்றோ ஊகிக்கலாம் (Revolt – 29.9.1929).

பின்னர், புனே நகரில் அம்பேத்கர் நடத்திய ஆலய நுழைவுப் போராட்டம் பற்றி சித்தரஞ்சன் என்பவர் எழுதிய விரிவான கட்டுரையொன்றும் (இதில்தான் எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் மகாத்மா ஃபுலே பற்றிய முதல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது) வெளிவந்தது (Revolt – 10.11.1929).

அம்பேத்கரின் அரசியல், சமூக செயல்பாடுகள் பற்றிய செய்திகள் சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன. இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் நடந்த சொற்போர்கள் பற்றிய கட்டுரைகள், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதி ஏற்பாட்டை எதிர்த்து காந்தி நடத்திய உண்ணாநோன்பை கண்டனம் செய்த கட்டுரைகள், அம்பேத்கர் – ரெட்டைமலை சீனிவாசன் ஆகியோரை ஆதரித்தும் எம்.சி.ராஜாவின் நிலைப்பாட்டை விமர்சித்தும் எழுதப்பட்ட கட்டுரைகள், காந்தியின் ‘ஹரிஜன் சேவக் சங்’கின் நடவடிக்கைகள் குறித்து அம்பேத்கர் முன்வைத்த விமர்சனங்கள் ஆகியன சுயமரியாதை ஏடுகளில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.

Ambedkar Literatures in Tamil

பெரியாரால் ஆதரிக்கப்பட்டு வந்த நீதிக்கட்சியின் செல்வாக்கு ஒரேயடியாகச் சரிந்து வந்து கொண்டிருந்த 1936-1937ஆம் ஆண்டுகளில்தான், லாகூரிலிருந்த ஜாத் பட் தோடக் மண்டல் (சாதி ஒழிப்புச் சங்கம்) என்னும் அமைப்பின் மாநாட்டில் ஆற்றுவதற்காக அம்பேத்கர் எழுதியிருந்ததும் ‘தலித்துகளின் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ எனச் சொல்லப்படுவதுமான ‘The Annihilation  of Caste’ என்னும் ஆங்கில உரை தமிழாக்கம் செய்யப்பட்டு ‘குடி அரசு’ இதழில் ‘ஜாதியை ஒழிக்க வழி’ என்னும் தலைப்பில் ஓராண்டுக் காலம் தொடர் கட்டுரையாக வெளியிடப்பட்டது.

அது பின்னர் நூல் வடிவிலும் கொணரப்பட்டு பல பதிப்புகளைக் கண்டது. இந்திய மொழிகளில், அந்த உரை முதன் முதலில் மொழியாக்கம் செய்யப்பட்டது தமிழ்மொழியில்தான் என்று கூறலாம். “டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அந்த மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவுக்கு எழுதிய சொற்பொழிவுத் தொகுதியை நமக்கு அனுப்பியதில் அதைத் தமிழில் மொழிபெயர்த்து ‘ஜாதியை ஒழிக்கும் வழி’ என்னும் பெயரால் புத்தகம் ஒன்றுக்கு 0-4-0வுக்கு விற்று வருகிறோம்.

அதைப் பார்த்தால் இந்து மதம் ஒழியாமல் ஜாதியும் ஒழியாது, சுயராஜ்ஜியமும் வராது, பொது உடைமையும் ஏற்படாது என்பதெல்லாம் மடையனுக்கும் விளங்கும்” என்று ஏறத்தாழ எட்டாண்டுகளுக்குப் பிறகு எழுதினார் தந்தை பெரியார் (குடி அரசு, தலையங்கம், 13.1.1945).அதன் பிறகு இன்றுவரை அந்த உரை அதைவிடச் சிறப்பான பல தமிழாக்கங்களைக் கண்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர் தொடங்கியதும், பிரிட்டிஷாரிடமிருந்து முழு அரசியல் அதிகாரத்தையும் தங்கள் கைக்கு மாற்றிக்கொள்ள காங்கிரஸார் முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியபோது, 1940இல் பம்பாயில் அம்பேத்கர், ஜின்னா, பெரியார் ஆகிய மூவரும் சந்தித்துப் பேசினர்.

பிரிட்டிஷாரின் நாணயக் குறைவையும் காங்கிரஸாரின் சூழ்ச்சியையும் விமர்சித்து அவர்கள் விடுத்த கூட்டறிக்கையின் தமிழாக்கம் ‘குடி அரசு’ 28.11.1940 இதழில் காணப்படுகிறது. ஆனால், அதனுடைய ஆங்கில மூலம் இதுவரை நமது கண்ணுக்குப் படவில்லை. எனினும், அந்தச் சந்திப்பு குறித்து ‘தி பாம்பே குரோனிக்கிள்’ என்னும் ஆங்கில நாளேடு வெளியிட்ட விரிவான செய்தி மகாராஷ்டிர அரசாங்கத்தின் கல்வித் துறை 1982இல் வெளியிட்ட ‘Source Material on Dr.Babasaheb Ambedkar and the Movement of Untouchables’ என்னும் நூலில் காணப்படுகிறது (பக்கம் 210).

1940 ஜனவரி 8ஆம் தேதி மும்பை தாராவியிலிருந்த தமிழர் அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்துக்கு அண்ணல் அம்பேத்கர் தலைமை தாங்கிய செய்தியுடன் அக்கூட்டத்தில் பெரியார் ஆற்றிய உரையை விரிவாக வெளியிட்டது அந்த நாளேடு. இந்தச் செய்தியும் பெரியாரின் உரையும் மேற்சொன்ன நூலின் 208-210ஆம் பக்கங்களில் காணப்படுகின்றன.

வைசிராயின் நிர்வாகக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், சென்னைக்கு வருகை தந்த அம்பேத்கர், அப்போது நீதிக்கட்சித் தலைவராக இருந்த பெரியாரை சந்தித்து, பெரியார் கோரி வந்த ‘திராவிட நாட்டில்’, மகாராஷ்டிரத்தையும் வேறு சில மாகாணங்களையும் சேர்த்துக் கொள்ளும்படி கூறியதாகவும் ‘குடி அரசு’ தலையங்கம் ஒன்று (30.4.1944) குறிப்பிடுகிறது. அது குறித்து அம்பேத்கர் ஆங்கிலத்திலோ, மராத்தி மொழியிலோ எழுதியவையும் நமக்குக் கிடைக்கவில்லை.

மேலும், வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பாத்திரத்தை அம்பேத்கர் மிக உயர்வாக மதிப்பிட்டு எழுதியிருப்பதை தனஞ்சய் கீரின் புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்கிறோமேயன்றி, அம்பேத்கரின் எழுத்துகளிலிருந்து நேரடியாக அல்ல.

ஒருவேளை, ‘மூக்நாயக்’, ‘பகிஷ்கிருத் பாரத்’, ‘ஜனதா’ ஆகிய மராத்திய ஏடுகளில் அம்பேத்கர் எழுதியவை அனைத்தும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படும்போது, மேற்சொன்ன விஷயங்கள் குறித்த கூடுதலான தகவல்களும் அம்பேத்கரின் ஆளுமையிலிருந்த வேறு பரிமாணங்களும் நமக்குத் தெரியக்கூடும்.

சுயமரியாதை ஏடுகள், எப்போதுமே காங்கிரஸ் இந்து-தேசிய நீரோட்டத்துடன் கலந்துவிட்ட தமிழகத் தாழ்த்தப்பட்டோர் தலைவர்களை விமர்சித்தும் அம்பேத்கரை உயர்த்தியும் எழுதி வந்தன. அண்ணலுக்கும் பெரியாருக்குமிடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன என்றாலும், அவர்கள் இருவரையும் இணைக்கும் புள்ளிகளோ ஆயிரமாயிரம்.

அம்பேத்கருக்கும் பெரியாருக்கும் இருந்த பொதுவான பண்புகளிலொன்று அவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட அரசியல் தலைவர்கள்மீதுகூட அவர்கள் தனிப்பட்ட கசப்புணர்வை வளர்க்கவில்லை என்பதாகும். கருத்து வேறுபாடுகளைக் கடந்தும் இருவரது நட்பு தொடர்ந்தது என்பதுடன், இருவருக்குமிடையே ஒத்துழைப்புகளும் இருந்து வந்தன.

எடுத்துக்காட்டாக, பிற்பட்டோருக்குக் கல்வி நிலையங்களில் இருந்த இட ஒதுக்கீட்டு முறையை ‘இந்திய சுதந்திர’த்துக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றம் சட்ட விரோதமாக்கியதை எதிர்த்து பெரியார் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்தியதை அடுத்து, அரசியல் சட்டத்துக்கான முதல் திருத்தத்தை வரைந்து தந்து, ‘பிற்படுத்தப்பட்ட வர்க்கங்கள்’ என்பதற்கான வரையறையையும் வழங்கினார் அம்பேத்கர்.

1955இல் பர்மாவில் நடந்த உலக பெளத்த மாநாட்டில் அம்பேத்கருடன் சேர்ந்து கலந்து கொண்டார் பெரியார். புத்த மதத்தில் சேர்வது குறித்து இருவருக்கும் நடந்த உரையாடல்களை ‘விடுதலை’ ஏடு பதிவு செய்துள்ளது. புத்தர் பிறந்த நாளொன்றில்தான் விநாயகர் சிலை உடைப்பு நிகழ்ச்சியை திராவிடர் கழகம் நடத்தியது. இன்னொரு பிறந்த நாளன்றுதான் அண்ணல் அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவருமான ராஜ்போஜ் அவர்களால் ‘திராவிட விவசாயிகள் சங்கம்’ தொடக்கி வைக்கப்பட்டது.

ஈரோட்டில் தந்தை பெரியார் நடத்திய பெளத்த மாநாட்டில் இலங்கையைச் சேர்ந்த பெளத்தத் துறவி மல்லலசேகர கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.

Ambedkar Literatures in Tamil

அம்பேத்கரின் ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டாதோருக்குச் செய்தது என்ன?’, ‘இந்தியாவில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும்’ போன்ற நூல்களிலுள்ள கருத்துகள் பெரியார் இயக்க ஏடுகளில் பலமுறை எடுத்துச் சொல்லப்பட்டுள்ளன.

அம்பேத்கர் காலமானபோது பெரியார் எழுதிய இரங்கலுரை (தலையங்கம்) அம்பேத்கர் குறித்து பெரியார் இயக்கம் கொண்டிருந்த மிக உயர்ந்த மதிப்பீட்டைத் தொகுத்துக் கூறுகிறது. அதில் பெரியார், அண்ணலின் மறைவு இயற்கையானது அல்ல, அவரது இறப்புக்குப் பல சதிச்செயல்கள் காரணமாக இருக்கலாம் என்றும் எழுதியிருந்தார்.

பெரியார் உயிரோடு இருந்தபோது தொடங்கப்பட்ட ‘உண்மை’ மாத ஏடு அண்ணலுக்குத் தொடர்ந்து முக்கியத்துவமும் மரியாதையும் கொடுத்து வந்துள்ளது. அதேபோலதான் பிற திராவிட இயக்க ஏடுகளும்.

Ambedkar Literatures in Tamil

அம்பேத்கரின் சிந்தனையையும் பணியையும் தமிழகத்துக்கு அறிமுகம் செய்து வைத்த தலித் இயக்க செயல்வீரர்கள், அறிவாளிகளில் முன்னோடியாக இருந்தவர்கள் காலஞ்சென்ற முனுசாமிப் பறையர், அன்பு.பொன்னோவியம் என்பதை இங்கு நினைவுகூர்ந்தாக வேண்டும்.

அதேபோல எரிமலை ரத்தினம், எக்ஸ்ரே மாணிக்கம், பெளத்த பெருமாள் போன்றோரையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும் ‘புத்தமும் அவர் தம்மமும்’ நூலைச் சிறப்பாகத் தமிழாக்கம் செய்த பெரியார்தாசன், எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை இரத்தினம் ஆகியோரும் அந்த நூலைத் தமிழில் கொண்டுவரத் தேவையான பொருட்செலவில் பெரும்தொகையை ஏற்றுக்கொண்ட ஒய்.எம்.முத்து, திருமதி சந்தோஷம் முத்து ஆகியோரும் நமது வணக்கத்துக்குரியவர்கள்.

தியாகு மொழியாக்கம் செய்த ‘காந்தியும் காங்கிரஸும் தீண்டாதோருக்கு செய்தது என்ன?’ நூலை தலித் எழில்மலை வெளியிட்டார். அப்போது அவர் பாஜக தலைமையிலான கூட்டணி அமைச்சராக இருந்தார்.

அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதிலும் அவரது ஆக்கங்கள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்ததிலும் ‘தலித் முரசு’ புனிதபாண்டியனுக்கும் அவரது நண்பர்களுக்கும் சிறப்பான பங்கு இருக்கிறது. அதேபோல் அ.மார்க்ஸ், அலோய்ஷியஸ், பிரேம் போன்ற கல்விப்புல அறிஞர்களும், தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரபூர்வமான ஏடான ‘தாய் மண்’ணும், நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ரவிக்குமாரின் ‘தலித்’, ‘போதி’ ஏடுகளும், ‘நீலம்’ ஏடும், ஆய்வறிஞர்கள் ஸ்டாலின் ராஜாங்கம், ராஜ் கெளதமன் உள்ளிட்ட பலரும் அம்பேத்கர் சிந்தனையை விரிந்த தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இத்தகைய அறிஞர்களும் களப்பணியாளர்களும் இலங்கையிலும் வேறு சில வெளிநாடுகளிலும் உள்ளனர். இத்தகைய பணிகளைச் செய்துவருபவர்கள் அனைவரையும் உள்ளடக்கிய பட்டியலை என்னால் தர முடியவில்லை.

இந்திய மொழிகள் வேறெதிலும் நிகழ்ந்திராத வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பே, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம், மகாராஷ்டிர அரசாங்கம் இதுவரை வெளியிட்டுள்ள அண்ணலின் ஆங்கில ஆக்கங்களைத் தமிழாக்கம் செய்து 37 தொகுதிகளாக வெளியிட்டது. அத்தொகுதிகளும்கூட மூன்று, நான்கு பதிப்புகளைக் கண்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை என்று வாசகர்களாலும் களப்பணியாளர்களாலும் கருதப்படும் சில தொகுதிகள் மட்டும் உடனுக்குடன் விற்பனையாகிவிடுவதால் 37 தொகுதிகளையும் ஒரு சேர வாங்கிப் படிப்பதில் சில சிக்கல்கள் எழுந்துள்ளன.

அம்பேத்கர் ஃபவுண்டேஷனின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்ட இந்த 37 தொகுதிகளுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் என்று தனக்குத் தெரிந்த அளவில் விருப்புவெறுப்பின்றி பலரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் மொழியாக்கப் பணியை ஒப்படைத்திருந்தது அந்த நிறுவனம்.

பாடல் பெறாத அந்த மொழிபெயர்ப்பாளர்கள் நம் வணக்கத்துக்குரியவர்கள். அதேபோல அந்தத் தொகுதிகளை வெளியிடுவதற்கு பெரும் ஊக்கத்தைத் தந்த தோழர் ஆ.நல்லகண்ணுவும் நம் பாராட்டுக்குரியவர் என்றாலும், அவரது கட்சியைச் சேர்ந்த அல்லது அதன் ஆதரவாளர்களாக உள்ள சிறு குழுவினர் அம்பேத்கர் பற்றிய முற்றிலும் எதிர்மறையான கருத்துகளை, நாகரிகமற்ற வார்த்தைகளில் எழுதிவருவதைப் பற்றி அவரோ, அக்கட்சியின் மாநிலச் செயலாளரோ இதுவரை வாய் திறந்ததில்லை.

ஆனால், அக்கட்சியின் அனைத்திந்தியப் பொதுச் செயலாளர் டி.ராஜா, அம்பேத்கரை இடைவிடாது போற்றி வருகிறார்.

என்.சி.பி.எச். நிறுவனம் ஏற்கெனவே அண்ணலின் படைப்புகளின் தமிழாக்கங்கள் என 37 தொகுதிகளை வெளியிட்டிருக்கும்போது, தமிழ்நாடு அரசாங்கம், அண்ணலின் படைப்புகளைத் தமிழாக்கம் செய்யும் திட்டத்தில் அந்த நிறுவனத்தையும் இணைத்துக்கொள்வதோ அல்லது அந்த மொழியாக்கங்களை அந்த நிறுவனத்துடன் இணைந்து அழகிய வடிவத்தில் மலிவுப் பதிப்புகளாகக் கொண்டு வருவது, ஒரே வேலையை மீண்டும் செய்வதைத் தவிர்க்கவும் கால, பண விரயம் ஏற்படாமல் செய்யவும் உதவும் என்பதும், இதுவரை ஆங்கிலத்திலிருந்தோ, மராத்தியிலிருந்தோ தமிழாக்கம் செய்யப்படாத அண்ணலின் படைப்புகளுக்கு மட்டும் தமிழ்நாடு அரசாங்கம் தனிக்கவனம் செலுத்தினாலே போதும் என்பதும் என் போன்றோரின் கருத்துகள்.

அம்பேத்கரின் நூல்களைத் தமிழாக்கம் செய்வதற்காக இரண்டு அமைச்சர்களின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆ.இராசா, ரவிக்குமார் ஆகியோரையும், சுப.வீரபாண்டியன், புனிதபாண்டியன் ஆகிய எழுத்தாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் உயர்நிலைக் குழு தமிழ்நாடு அரசாங்கத்தால் சென்ற ஆண்டு டிசம்பரில் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்தக் குழு, அண்ணல் அம்பேத்கரின் நூல்களில் எவை எவற்றைத் தமிழாக்கம் செய்யலாம் என்பதைத் தேர்வு செய்யும். தமிழாக்கம் செய்வதற்காக ஒன்றிய அரசாங்கத்தின் ‘தேசிய மொழியாக்கப் பணியாளர் குழு’ (National Translation Mission) என்ற அமைப்புடன் தமிழ்நாடு அரசாங்கம் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்பியதும், ஆனால் மொழிபெயர்ப்பாளர்களை நேரில் அழைத்து அவர்களின் திறன் அறியாமல் ஒப்பந்தம் போடக்கூடாது என்று மேற்சொன்ன குழு உறுப்பினர்கள் கூறியுள்ளதும் தெரியவருகின்றன.

‘தேசிய மொழியாக்கப் பணிக் குழு’வின் வலைத்தளத்தைப் பார்த்தால் உலகிலுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்விப்புலம் சார்ந்த ஏராளமான அறிஞர்கள் அதன் ஆசிரியர் குழுவில் இருப்பது தெரியவருகிறது. ஆனால், அவர்கள் ஒருவர்கூட தமிழ்மொழியுடன் தொடர்புகொண்டவராகத் தெரியவில்லை.

மேலும், இந்த அமைப்பு இதுவரை தமிழாக்கம் செய்துள்ள நூல்களைப் பற்றிய விவரங்களும் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, அந்த அமைப்பை நாடுவதை விடுத்து, தமிழாக்கம் செய்வதில் தேர்ச்சி பெற்றுள்ள, தமிழ்நாட்டிலேயும் வெளிநாடுகளிலும் இருப்பவர்களை தமிழ்நாடு அரசாங்கம் ஏன் அணுகக்கூடாது?

கட்டுரையாளர் குறிப்பு:

Ambedkar Literatures in Tamil SV Rajadurai

எஸ்.வி.ராஜதுரை மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப்பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அச்சுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று தாக்கல்!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *