சாதியச் சமூக ஒழுங்கை உடைக்க அம்பேத்கர் கண்ட வழி!

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

அமைச்சர் உதயநிதியின் சனாதன ஒழிப்புப் பேச்சை பாஜக திரித்து மத அரசியலாக மாற்றி பிரதமர் மோடி “சனாதனிகளே ஒன்றுசேருங்கள்” என்று அழைத்தபோது அந்த மதவெறி அரசியலுக்கு மாற்றாக ஒற்றுமை அரசியல் செய்து அவரின் நாற்காலியைப் பிடிக்கும் கனவில் இருக்கும் இந்தியா கூட்டணியின் தலைவர்கள் எல்லாம் வளையில் பதுங்கும் எலிகளைப்போல மௌனம் காத்தார்கள் அல்லது எதிர்நிலைப்பாடு எடுத்தார்கள்.

சாதிய சனாதன தர்மத்தைப் பற்றி பேசாமல் விலைவாசி, வேலைவாய்ப்பின்மை பிரச்சனைகளைப் பேசு என்றார்கள்.

சமூகத்தை மாற்றாத அரசியல்

பாஜக வெளிப்படையாக நால்வர்ண சனாதன சாதிய ஒழுங்கு உடையாமல் நிலைநாட்டி கடுங்கோட்பாட்டுவாத இந்துத்துவ அரசியலைச் செய்கிறார்கள் என்றால் அதற்கு எதிரான இந்தியா கூட்டணியின் ராகுல், மம்தா, நிதிஷ், அரவிந்த், சரத் பவார் போன்றவர்கள் மறைமுகமாக அந்தச் சாதிய ஒழுங்கைக் கேள்விக்குட்படுத்தாத மென்மையான இந்துத்துவ அரசியலைச் செய்கிறார்கள் என்பதுதான் இவர்களுக்குள் இருக்கும் வேறுபாடு. அவர்கள் சூத்திர பஞ்சம மக்களைப் புழுக்களைப்போல நசுக்கி தொழிற்துறை, நிர்வாகத்தில் மூவர்ணத்தின் மேலாதிக்கத்தை மூர்க்கமாக முன்னெடுக்கிறார்கள்.

மூவர்ண இந்துக்களின் ஆதரவை இழந்துவிட்ட இவர்களோ தங்களை அரியணையில் அமர்த்த ஒடுக்கப்பட்டவர்களுக்கு சில நலத்திட்டங்களை அறிவித்து கொஞ்சம் எச்சில் கையால் காக்கைகளை விரட்டுகிறார்கள். இந்திய விடுதலைக்கால தொடக்கம் முதலே அரசியல் அதிகார ஆவல் கொண்ட இந்துக்களிடம் வெளிப்படும் இந்தப் போக்கைத் தனது சாதியொழிப்பு நூலில் தோலுரிக்கும் அம்பேத்கர் இந்தச் “சாதிய சமூக ஒழுங்கை” உடைக்காத இந்த மென்னையான அரசியல் மூலம் எந்த முன்னேற்றத்தையும் சாதிக்கமுடியாது என்று வாதிடுகிறார்.

சாதியச் சமூக ஒழுங்கை உடைப்பதுதான் வழி

ஏனெனில் சாதி எப்போதும் தன்னிருப்பை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மற்ற சாதிகளிடம் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு தனித்துவமானதாக நிறுவிக் கொள்வதில் முனைப்பாய் இருக்கிறது.

ஆதலால் இந்தச் சாதிகள் ஒன்றிணைந்து ஒத்த உணர்வும் வாழ்வும் கொண்ட ஒரு சமூகமாகத் திரளவே முடியாது. சாதியின் இந்தச் சுயநலப்பண்பு இச்சாதிகளைச் சேர்ந்த மனிதர்களைத் தன்னலத்தையும் தனது சாதியின் நலனையுமே நோக்கமாகக் கொண்டு தங்களது சாதியினரைச் சமமாக, சகோதரத்துவ உணர்வுடன் நடத்தி, உதவி செய்து பரிவுடன் நடந்துகொள்ளும் அதேசமயம் மற்றவர்களைத் தாழ்வானவர்களாகவும் தூய்மையற்றவர்களாகவும் கருதி இழிவுசெய்யும் நாகரீகமற்ற ஆதிவாசிகளை ஒத்த மோசமான தனிமனித அறமதிப்பீடுகளைக் கொண்டவர்களாக ஆக்கியிருக்கிறது.

இது பொதுவான பிரச்சனைகளுக்குக்கூட சமமாக சகோதரத்துவ உணர்வுடன் மற்றவர்களுடன் இணைந்து நீதிக்காகப் போராட விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல எந்தவொரு வளமான தொழிலையும் மேன்மையானதாகக் கட்டமைத்து அதற்கான வாய்ப்பைத் தனக்கும் தன் சாதிக்காரர்களுக்குமானதாக மாற்றி மற்றவர்களை அதற்குள் நுழையாமல் தடுப்பதோடு தொழிலாளர்கள் தாங்கள் விரும்பிய தொழிலைச் செய்து திறன்மிக்கவர்களாக உயர்வதையும் தடுக்கும் இந்த சாதியச் சமூக சிந்தனைதான் தொழிற்துறை வளர்ச்சிக்கு மாபெரும் தடை என்கிறார்.

அம்பேத்கரின் இலட்சியச் சமூகம்

இப்படிச் சமூகமாக ஒன்றிணையவும் மேம்பட்ட தனிமனித அறவொழுக்கத்துடன் போராடவும் பொருளாதார வளர்ச்சியை எட்டவும் தடையாக நிற்கும் இந்த சாதியச் சமூக ஒழுங்கை உடைப்பதுதான் எல்லாவற்றுக்கும் முதல்படி என நிறுவுகிறார். சாதி மறுப்புத் திருமணம்தான் இந்தச் சாதியை ஒழிக்க சரியான வழி;

அப்படிச் செய்யவிடாமல் கருத்தியல் ரீதியாக மக்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் இந்து சமய சாஸ்திரங்களைத் தாக்குங்கள் என்கிறார். இந்தக் கேடான சாதிய சமூக ஒழுங்கை உடைத்து நீங்கள் உருவாக்க விரும்பும் இலட்சிய சமூகம் எப்படிப்பட்டது? என்று கேட்டால் விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் நிலவும் சமூகம் என்கிறார்.

எப்படிப்பட்ட விடுதலை, சமத்துவம், சகோதரத்துவம் என்றால் ஒருவரோடு ஒருவர் பேசி உறவாடி தனது விருப்பம் நலன் சார்ந்து இணைந்து இடம்பெயரும் சகமனிதரின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட சகோதர(ரி)த்துவமும் ஒருவர் தன் உடல்நலனைப் பேணிவாழத் தேவையான சொத்துக்களை, பொருட்களை, கருவிகளைக் கைக்கொள்ளும் உரிமைகளைக் கொண்ட சமத்துவமும் சுதந்திரமும் என்கிறார்.

(பக்கம் 57) சாரத்தில் இது மேலைநாடுகளில் நிலவும் தொழிற்துறை உற்பத்தியும் அதற்கு ஏற்ற சமமான விடுதலை சமத்துவம் சகோதர(ரி)த்துவ மதிப்பீடுகளையும் கொண்ட தேசிய முதலாளித்துவ சமூகத்தை நோக்கமாகக் கொண்டது.

அவர்கால இந்தியா

ஆனால் அன்றைய (1936) இந்தியாவோ சூத்திர-பஞ்சம திராவிட ஆதிக்குடிகளிடம் இருந்து நிலம், வணிகம், நிர்வாகம், கல்வியைப் பிடுங்கி முதல் மூவர்ணத்துக்கானதாகவும் தொல்குடிகளை பண்ணையாட்களாகவும் சேவகர்களாகவும் மாற்றி உருவான நிலத்தில் தனியுடைமையற்ற ஆசியபாணி விவசாய உற்பத்தி முறை ஆங்கிலேயர்களின் விவசாய மூலப்பொருட்களின் தேவையின் பொருட்டு மாற்றப்பட்டிருந்தது; வளர்ந்திருக்கவில்லை.

அதனால் பசியும் பட்டினியும் சமூகத்தில் சாதாரணம். ஆங்கிலேயர்கள் அறிமுகம் செய்த தொழிற்துறை தொழில்நுட்ப இயந்திரங்கள் சாதிக்கேற்ற தொழில்களைச் செய்யும் சாதிய இனக்குழு சமூக ஒழுங்கில் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது; முற்றிலுமாக உடைக்கவில்லை. இந்த தொழிற்துறை உற்பத்தி மாற்றத்திற்கு ஏற்ப ஜனநாயக சட்டநெறிமுறைகள் நடைமுறைக்கு வந்து முந்தைய பார்ப்பனிய விவசாய உற்பத்திக்கான மனுநீதி சட்ட நெறிமுறைகள் திரும்பப் பெறப்பட்டிருந்தது; தடைசெய்யப்படவில்லை. சுருக்கமாக பழைய வளராத விவசாய உற்பத்தியும் அது சார்ந்த சாதியச் சமூக ஒழுங்கும் புதிதாக அறிமுகமான தொழிற்துறை உற்பத்தியும் அதற்கான ஜனநாயக ஒழுங்கும் என்பதாக இரண்டும் கலந்து இருந்திருக்கிறது.

யாருடைய விடுதலை?

இன்றைய அமெரிக்கா உற்பத்தியை சீனாவுக்கு மாற்றி அப்பொருட்களை சந்தைப்படுத்தி விற்கும் வர்த்தக-நிதிய மையமாக மாறியிருப்பதைப்போல அன்றைய இங்கிலாந்து உற்பத்தியை இந்தியாவுக்கு மாற்றி உலக வர்த்தக மையமாக மாறியிருந்தது. அதில் பங்கெடுத்து பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்த இந்தியத் தரகு முதலாளிகளுக்கு மதிப்புமிக்க உண்மையான பணமான தங்கத்தைக் கொடுக்காமல் அப்போதைய மலிவான பணமான வெள்ளியையும் கடன்பத்திரங்களையும் கொடுத்து இலாபத்தைப் பெருக்கிவந்தது.

இன்றுபோலவே அன்றும் இங்கிலாந்தின் தொழிற்துறை முற்றோருமை உடைந்து உலக நாடுகள் சந்தைக்குப் போட்டியிட்டன. முதல் உலகப்போர் உண்டானது.  அந்த நெருக்கடியான சூழலைப் பயன்படுத்தி முதன்முதலாக தங்களது ஏற்றுமதி பொருட்களுக்குத் தங்கத்தைப் பெறுகிறார்கள் இந்தியத் தரகு முதலாளிகள். (The problem of the Rupee) உற்பத்திக்கான மூலதனத்தையும் தொழில்நுட்பங்களையும் ஓரளவு கைக்கொண்ட இந்திய முதலாளிகளும் ஆங்கிலேயர்களிடம் வருமானத்தை இழந்திருந்த நிலவுடைமைகளும் அந்த உற்பத்தியையும் சந்தையையும் தனதாக்கிக்கொள்ள அவர்களிடம் இருந்து விடுதலை வேண்டி நின்றிருக்கிறார்கள்.

முரணான அம்பேத்கர்-காந்தியின் தேசியங்கள்

இந்த விடுதலைப் போராட்ட அரசியலுக்கு ஆதரவாகத் திரண்ட முதல் மூவர்ணத்துக்கு இந்தச் செல்வத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான சமமான ஜனநாயகம், சூத்திர-பஞ்சமர்கள் இதில் போட்டிக்கு வருவதைத் தடுக்க அவர்களுக்கு சாதிக்கேற்ற தொழில் செய்யும் சனாதன ஒழுங்கு, இதனை வென்றெடுக்க காந்தியும் காங்கிரசும், எல்லோருக்கும் பொதுவான அந்நிய ஆங்கிலேய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல், அதன்மூலம் இந்த உற்பத்திக்கான பார்ப்பனிய தேசியச் சந்தை உருவாக்கம் என்பதாக அவர்கள் இயங்கியிருக்கிறார்கள். 

சூத்திர-பஞ்சம சாதிகளின்மீது மூவர்ணத்தின் ஏகபோகத்தை நிலைநாட்டும் இந்தப் பார்ப்பனிய தேசியம் அதற்கான ஜனநாயகமும் சாதியமும் கலந்த சமூக ஒழுங்கு என்பதற்குப் பதிலாக எல்லோரும் சமமாகப் பங்கெடுத்து போட்டியிட்டு திறமைக்கும் பங்களிப்புக்கும் ஏற்ற பலனை அடையும் போட்டி முதலாளித்துவ தேசியமும் அதற்கு ஏற்ற எல்லோருக்கும் பொதுவான ஜனநாயக ஒழுங்கும் விடுதலை, சமத்துவம் சகோத(ரி)ரத்துவ மதிப்பீடுகளையும் கொண்ட இந்திய தேசியத்தை முன்வைத்திருக்கிறார் அம்பேத்கர்.

சமூகநீதியை நிலைநாட்ட தேவை அரசியல் அதிகாரம்

இந்த இரண்டு வகையான தேசியக் கோரிக்கைகளும் இம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அம்பேத்கரையும் பெரியாரையும் காந்திக்கு நேரெதிராக நிறுத்தி இருக்கிறது. பஞ்சம சாதிகளின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கு வலுவான இரட்டை வாக்குரிமை வடிவிலான அரசியல் உரிமையைக் கோரிப்பெறுவதில் வெற்றி பெறுகிறார் அம்பேத்கர்.

காந்தியை முதன்முறையாக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கவைத்து அம்பேத்கரின் அந்த அரசியலை அவர்கள் வீழ்த்துகிறார்கள். சமரசமாக அரசியலில் தனித்தொகுதியும் நிர்வாகம், வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடும் என்பதாக அது சட்டவடிவம் கண்டு விடுதலை பெற்ற இந்தியாவில் சமூகநீதி அரசியல் நடைமுறைக்கு வருகிறது. சட்டமாக மாறிவிட்டதாலயே இந்தச் சமூகநீதி நடைமுறைக்கு வந்துவிடாது என்று நம்மைவிட அம்பேத்கருக்கு நன்றாகவே தெரியும்.

முந்தைய பார்ப்பனிய நிலவுடைமை உற்பத்திக்கான மனுநீதி சட்டநெறிமுறையை உருவாக்கி கோயிலை மையமாகக் கொண்ட நிர்வாக முறையின் மூலம் அதனை நடைமுறைபடுத்திய பார்ப்பனர்கள் விடுதலை பெற்ற இந்தியாவிலும் சட்டம், நீதி, நிர்வாகம், கல்வி உள்ளிட்ட முக்கிய துறைகளில் அமர்ந்து கொண்டு இவற்றில் மற்றவர்கள் சமூகநீதியின் வழியாக உள்ளே வந்துவிடாமல் இன்றுவரை பார்த்துக் கொள்கிறார்கள். எனவே அனைத்து பஞ்சம சாதிகளும் ஒன்றிணைந்து போராடி அரசியல் அதிகாரத்தை அடைந்து அம்பேத்கர் பெற்ற சட்ட உரிமைகளை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை. ஆனால் பஞ்சம சாதி மக்களுக்குள்ளும் வேரோடியிருக்கும் ஏற்றத்தாழ்வான பார்ப்பனிய சிந்தனை அதற்குத் தடையாக நிற்கிறது.

மதவழி திரட்சிக்கு முயன்ற அம்பேத்கர்

அதற்குப் பகுத்தறிவு, நல்லொழுக்கம், நீதிநெறியைப் போதிக்கும் பெளத்த மதமாற்றத்தைத் தீர்வாகக் காண்கிறார் அம்பேத்கர். 1956இல் மதமாற்ற நாளன்று மனிதனாக நடத்தப்பட மதம் மாறுங்கள்; மதம்மாறி ஒன்றுதிரண்டு விடுதலையையும் சமத்துவத்தையும் வென்றெடுங்கள் என்று பேசுகிறார். இதனை சமூக விடுதலைக்கு சமூகநீதி அரசியலும் அதனை ஒன்றாகச் சேர்ந்து வென்றெடுக்கவும் அதற்கேற்ற தனிமனித ஒழுக்கத்தைக் கட்டமைக்கவும் பெளத்த மதமாற்றம் என்பதாகப் புரிந்துகொள்ளலாம். அதேசமயம் (1953) பிபிசி நேர்காணலில் அமெரிக்காவுக்கு நாடாளுமன்ற ஜனநாயகம் பொருத்தமானது; இந்தியாவில் அது வேலைசெய்யாது; மக்கள் தேர்தலை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை; அவர்களுக்கு உணவும் வாழ்வதற்கான பொருட்தேவைகளும் நிறைவடையவேண்டும்; எனவே ஒரு வகையான கம்யூனிசத்தை இதற்கு மாற்றாகக் கருதுகிறேன் என்றும் சொல்கிறார்.

பெளத்த மதமாற்றம் சமூகத்தில் பெறும் வரவேற்பையும் ஏற்படுத்தும் விளைவுகளையும் காண்பதற்கு முன்பாகவே அடுத்த இரண்டு மாதங்களில் இறந்து போகிறார். இன்றும் அரசியல் திரட்சிக்கான தீர்வாக பெளதத மதமாற்றம் முன்வைக்கப்படும் நிலையில் பஞ்சம சாதிகளை இந்துத்துவத்தில் இருந்து விடுவித்து ஒருங்கிணைக்க முன்வைத்த மதமாற்றம் தொடர்பாகத் தோழமை உணர்வோடும் அவரின் வர்க்கம்தான் சாதியின் தோற்றுவாய்; சாதியச் சமூக ஒழுங்கை உடைப்பதுதான் சமூக மாற்றத்திற்கான முதல்படி; கலப்புத் திருமணம்தான் சாதியை ஒழிக்கும் ஆகிய ஆய்வு முடிவுகளை ஏற்று அதனை மேலும் வளர்த்தெடுக்க விரும்பும் சமூகவியல் ஆய்வு மாணவனாகவும் அந்தப் பேராசிரிய பெருந்தகையிடம் கேட்க சில கேள்விகள் இருக்கிறது.

சில கேள்விகள்

பஞ்சம சாதிகள் ஒத்த சமமான சமூகமாகத் திரள்வதற்கு அவர்களுக்குள் பொதுவாகப் பகிர்ந்து கொள்ளும் ஒன்றாக பௌத்த மதத்தை முன்வைக்கிறீர்கள் என்றும் இதன் வழியான திரட்சி அரசியல் அதிகாரத்திற்கானது என்றும் புரிந்துகொள்கிறேன். சொத்து, மதம், சமூகப் படிநிலை ஆகிய மூன்றுமே அதிகாரம் சார்ந்தது என்று உங்கள் நூலில் ஒப்புக்கொள்கிறீர்கள். ஆனால் இந்த மதவழி சமூகப் படிநிலை மாற்ற அரசியல் திரட்சியின் வழியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் சொத்து இடம்பெறவில்லையே ஏன்? சமூக வளர்ச்சிக் கட்டத்தைப் பொறுத்து சொத்து, மதம், சமூகப் படிநிலை ஆகியவற்றின் அதிகாரம் (power) மாறுபடும் என்று கூறியிருக்கிறீர்கள்.

 

இந்தக் காலத்தில் (1956) மதம்தான் அதிகாரம் செலுத்துவதில் முதன்மையானது என்று கருதுகிறீர்களா? பலதெய்வ வழிபாட்டில் இருக்கும் பஞ்சம மக்களை பௌத்த ஒருதெய்வ வழிபாட்டு முறையின் மூலம் ஒரு சமூகமாகத் திரட்டும் உங்களின் முன்னெடுப்பை மேற்கு ஆசியாவின் பலதெய்வ வழிபாட்டு இனக்குழு மக்களை இசுலாம் என்னும் ஒற்றைத்தெய்வ வழிபாட்டின் மூலம் நபிகள் ஒரு சமூகமாக இணைத்ததுடன் ஒப்பிடலாம். அந்த மதவழி அரசியல் அதிகார திரட்சியின் வழியாக நிலத்தைப் கைப்பற்றி நிலவுடைமை ஏற்பட்டதை வரலாறு பதிவு செய்கிறது. உங்களின் நோக்கமோ முதலாளித்துவ தொழிலாளர் விடுதலையாக இருக்கிறது.

ஏன் இந்தக் காலப்பொறுத்தமற்ற முரண்பாடு?  பல தேசிய இனக்குழு மக்களைக் கொண்ட ஈரானில் இசுலாமிய மதவழி புரட்சியின் மூலம் அனைத்து மக்களுக்குமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை கொமெய்னி ஏற்படுத்தி இருக்கிறார். அவரைப்போல என்னால் இந்தியாவில் செய்யமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் புரட்சியின் வழியாக நிலத்தையும் அதன்கீழ் இருக்கும் இன்றைய முதலாளித்துவ உற்பத்திக்கான எண்ணெயையும் அரசுடைமையாக்கி பொதுவாகப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மூவர்ண சாதிகள்கூட இந்துமத இணைவின் மூலம் நிலம், தொழிற்துறை, நிர்வாகவழி செல்வத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பஞ்சமர்கள் எதைப் பகிர்ந்துகொள்ள போகிறார்கள்?   தொழிற்துறை, நிர்வாக வாய்ப்புகளை உங்களின் இடஒதுக்கீட்டு உரிமையின் மூலம் போராடி பகிர்ந்து கொள்ளலாம்தான். அதற்கு படிக்கவும் விடிந்தால் சோற்றுக்கு இந்துக்களின் வாசலில் நிற்பதும் மாறவேண்டுமே! இதையும்மீறி சென்றாலும் இந்திய உற்பத்தியில் விவசாயம், தொழிற்துறை, சேவைத்துறையின் பங்கு முறையே 53, 17, 22 ஆக (1931-32) இருக்கும்போது கிடைக்கும் வாய்ப்புகள் மிக சொற்பமாகத்தானே இருக்கும்?

கூடுதலாக ஈரானிய தேசிய இனக்குழுக்களுக்கு இடையில் ஏற்றத்தாழ்வு இல்லை. எனவே அவர்கள் ஒற்றை இசுலாமிய அடையாளத்தில் கூட்டாக நேரடியாக இணைத்துக் கொள்வதில் பிரச்சனையில்லை. பஞ்சம சாதிய இனக்குழுக்களிடம் ஏற்றத்தாழ்வு ஆழமாக வேரூன்றி இருக்கிறது. உங்களின் 22 கட்டளைகளில் ஒன்றான சமத்துவ உறுதிமொழி மூலம் இந்தச் சிந்தனை மாற்றத்தை அடைந்துவிட முடியும் என்று கருத்துகிறீர்களா?  அப்படியான மனமாற்றத்திக்கு அவர்களின் தற்போதைய “உயர்வு-தாழ்வு” மதிப்பீட்டைக் கேள்விக்குட்படுத்தி அதன்வழியாக புதிய மதிப்பீட்டை ஏற்படுத்தும் ஒரு கூடுதல் இணைப்புப்படியின் (bridging step) தேவை இருக்கிறதே! அதை எப்படிப் பூர்த்தி செய்வது?

இறுதியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மூவர்ண, பஞ்சம சாதிகளின் அளவு ஏறத்தாழ 5 முதல் 25 விழுக்காடாக இருக்கிறது. இந்நிலையில் இடைநிலை சாதிகள் இவ்விருவரில் யார் பக்கம் நிற்கிறார்களோ அவர்களின் அரசியல்தான் வெற்றிபெறும். எதிரணியின் நிற்கும் சூத்திர சாதிகளை “பஞ்சமர்கள் உங்களில் இருந்து பிரித்து ஒதுக்கப்பட்ட உங்களின் சகோதரர்கள்தான்” என்ற உங்களின் ஆய்வு முடிவை ஏற்கவைத்து ஒன்றிணைக்காமல் அரசியல் அதிகாரம் எப்படி சாத்தியம்?  இந்தக் கேள்விகளுக்கு விடைகாண்பதோடு இன்னும் உடையாமல் இருக்கும் இந்தச் சாதிய சமூக ஒழுங்கை உடைப்பது குறித்து விடாமல் விவாதிக்கவேண்டி இருக்கிறது. அடுத்து அம்பேத்கரின் சாதியொழிப்பு நூலை முதல் ஆளாக தமிழில் வெளியிட்ட பெரியார் சாதிய சமூக ஒழுங்கை உடைக்கக் கண்ட வழியென்ன? இன்றைய தமிழக வளர்ச்சியில் அதன் பங்கென்ன? அதன் போதாமை என்ன?

அடுத்த கட்டுரையில் காணலாம்.

கட்டுரையாளர் குறிப்பு

Ambedkar found a way to Abolishing Cast Discrimination by Baskar Selvaraj

பாஸ்கர் செல்வராஜ் தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர். அவற்றை நல்ல தமிழில் கட்டுரைகளாக வடித்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசியல் மாற்றமா? சமூக மாற்றமா? அம்பேத்கர் முன்வைக்கும் வாதம்! 

ரூ.1 லட்சம் வங்கி மோசடி…. நிர்மலா சீதாராமனுக்கு தயாநிதிமாறன் கேள்வி!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

1 thought on “சாதியச் சமூக ஒழுங்கை உடைக்க அம்பேத்கர் கண்ட வழி!

  1. அப்பேத்கரை கேள்வி கேட்கும் பாங்கு அழகாகவும் அறிவுப்பூர்வமாகவும் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *