விலகிய வேகத்தில் புதிய கட்சியில் சேர்ந்த அம்பத்தி ராயுடு : ஏன்?

அரசியல் விளையாட்டு

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 4 நாட்களுக்கு நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் அம்பத்தி ராயுடு இன்று (ஜனவரி 10) இணைந்தார்.

இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் மும்பை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி ஓய்வு பெற்றவர் அம்பத்தி ராயுடு. ஆந்திராவை சேர்ந்த அவர் சமீபத்தில் ஆளும் கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

ஆனால் வெறும் 8 நாட்களிலேயே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்க முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்தார்.

இந்த நிலையில் ஆந்திராவில் வளர்ந்து வரும் முக்கிய கட்சியான ஜன சேனா கட்சியில் நடிகர் பவன் கல்யாண் முன்னிலையில் அம்பத்தி ராயுடு இன்று இணைந்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தூய்மையான நோக்கத்துடனும், இதயத்துடனும் ஆந்திர மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

நான் பல கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு தனிப்பட்ட முறையில் அவற்றைத் தீர்க்க என்னால் இயன்ற பல சமூகப் பணிகளைச் செய்துள்ளேன்.

நான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த போது எனது நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்று நம்பினேன். ஆனால் சில காரணங்களால், அங்கு எனது கனவை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படவில்லை.

எனது சித்தாந்தமும் ஒய்.எஸ்.ஆர்.சி.பி-யின் சித்தாந்தங்களும் ஒன்றாக இணையவில்லை. அதனால் அந்த கட்சியில் இருந்து விலகினேன்.

பின்னர் எனது நலம் விரும்பிகள், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட பலரும் ஜன சேனா கட்சியின் நிறுவனர் பவன் கல்யாணை ஒருமுறை சந்திக்கும்படி கேட்டுக் கொண்டனர்.

அதன்படி நான் பவன் கல்யாணை சந்தித்து வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றி விவாதித்து அவரைப் புரிந்து கொள்ள நிறைய நேரம் செலவிட்டேன். அப்போது அவருடைய சித்தாந்தமும் பார்வையும் என்னுடையதைப் போலவே இருப்பதை உணர்ந்தேன். இதனை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்று அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.

Image

இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுடன் ஆந்திரா மாநிலம் சட்டமன்ற தேர்தலையும் சந்திக்கிறது. இந்த நிலையில் அம்பத்தி ராயுடு தற்போது பவன் கல்யாண் கட்சியில் இணைந்துள்ளது ஜெகன் மோகன் ரெட்டிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து பலர் விலகி வரும் நிலையில், இன்று கர்னூல் எம்.பி. சஞ்சீவ் குமார் விலகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அசோக் செல்வன், சாந்தனுவின் கிரிக்கெட் மோதல்: ப்ளூ ஸ்டார் ட்ரெய்லர் எப்படி?

ஸ்டிரைக்கை வாபஸ் பெற்ற போக்குவரத்து தொழிற்சங்கத்தினர்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

+1
2
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *