அமர் பிரசாத் மீது குண்டாஸ்: மனைவி நீதிமன்றத்தில் மனு!
தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
பனையூர் அருகே உள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் இல்லத்தில் வைக்கப்பட்ட கொடி கம்பத்தை அகற்றிய விவகாரத்தில் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர செஸ் ஒலிம்பியாட்டின் போது கோட்டூர்புரத்தில் முதல்வர் புகைப்படத்துக்கு மேல் பிரதமர் மோடி படத்தை ஒட்டிய விவகாரத்தில் பதியப்பட்ட வழக்கிலும்,
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த பாஜக போராட்டத்தின் போது ஏற்பட்ட தகராறு தொடர்பாக பதியப்பட்ட வழக்கிலும் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதில், முதல்வர் படம் மீது பிரதமர் படம் ஒட்டிய வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றம் அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கியது.
மற்றொரு வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் நவம்பர் 10 ஆம் தேதி வ்ரை அமர் பிரசாத் ரெட்டிக்கு நீதிமன்ற காவல் விதித்தது.
அவர் மீது குண்டாஸ் போடவும் போலீசார் தயாராகி வருகின்றனர். இதுகுறித்து மின்னம்பலத்தில் சிக்னல் கொடுத்த ஸ்டாலின்… அமர் பிரசாத் மீது பாயும் குண்டாஸ்! என்ற தலைப்பில் வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில் தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில் தனது கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்கக் கோரி அவரது மனைவி நிரோஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், “அண்ணாமலை வீடு முன்பு பாஜக கொடி கம்பம் நட்ட விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையின் போது ஜேசிபி இயந்திரம் உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது சம்பவம் நடந்த இடத்தில் தனது கணவர் இல்லாத நிலையில், பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆளும் கட்சியான திமுகவின் சமூகவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதால், தனது கணவர் மீது பொய் வழக்கு பதியப்படுகிறது.
போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரத்தில் உளவுத்துறை முன்னாள் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்திற்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படும் புகார் சம்பந்தப்பட்டு கூறியதால்,
அவரது நண்பரான தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிடம் சொல்லி பொய் வழக்கு பதிவு செய்து தனது கணவரை குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்” என்றும் மனுவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தாம்பரம் காவல் ஆணையருக்கு மனு அளித்தும் அதுகுறித்து பதிலளிக்கவில்லை. அமர் பிரசாத் ரெட்டியை, குண்டர் சட்டத்தில் அடைக்க தாம்பரம் காவல் ஆணையருக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தேவரின் கொள்கைகள் காலத்தால் அழியாதது: பிரதமர் புகழஞ்சலி!
“ஆவின் கவரில் ஸ்டாலின் – விளம்பர வெறி” : அதிமுக!
கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!