அமர்பிரசாத் ரெட்டியின் ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 7) உத்தரவிட்டுள்ளது.
அக்டோபர் 20-ஆம் தேதி பனையூரில் உள்ள பாஜக தலைவர் அண்ணாமலை வீடு முன்பாக நடப்பட்ட கொடிக்கம்பத்தை காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனம் மூலம் அகற்ற முயன்றபோது பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் பாஜக மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்ககோரி செங்கல்பட்டு மாவட்ட கோர்ட்டில் அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதனை செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அமர்பிரசாத் ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார்.
அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், “புழல் சிறையில் கைதிகளுக்கான அடிப்படை வசதிகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் பங்கேற்க கூடாது என்பதற்காகவே காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை நவம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் அம்பாசமுத்திரம் நீதிமன்றமும், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது முதல்வர் ஸ்டாலின் புகைப்படத்தை அகற்றி பிரதமர் மோடி புகைப்படத்தை ஒட்டிய வழக்கில் சைதாப்பேட்டை நீதிமன்றமும் அமர்பிரசாத் ரெட்டிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிறந்தநாளில் அரசுக்கு கமல் வைத்த கோரிக்கை!
ஹைட்ரோகார்பன் கிணறுகள்… ராமநாதபுரமே பாலைவனமாக மாறும்: வேல்முருகன்