சிறையில் முறைகேடுகள் நடப்பதாக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார். Amar Prasad Reddy Interview about Jail Life
பனையூரில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லம் முன்பு கொடிக்கம்பம் நடப்பட்ட விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்டார். அவரை நிபந்தனை ஜாமினில் சென்னை உயர்நீதிமன்றம் விடுவித்தது.
இந்நிலையில் இன்று (நவம்பர் 15) நீதிமன்ற நிபந்தனைப்படி கானத்தூர் காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட்டார் அமர் பிரசாத் ரெட்டி.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , “பொய் வழக்குகள் போட்டு என்னை கைது செய்தனர். புழல் சிறையில் இருந்து ஐந்து பேருந்துகளில் என்னை அம்பாசமுத்திரம் அழைத்துச் சென்றனர்.
பாஜக பயிற்சி வகுப்பு சிறையும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அதற்கேற்ற மாதிரி தான் பயிற்சி கொடுப்பார்கள். ஆர்எஸ்எஸ் முதலாம் ஆண்டு கேம்ப்பும் இதை நடைமுறையில் தான் இருக்கும். இதையெல்லாம் பார்த்து பயப்படுகிற ஆட்கள் நாங்கள் கிடையாது.
திமுகவுக்கும் முதலமைச்சருக்கும் தோல்வி பயம் வந்துவிட்டது. இதை வெளிப்படையாகவே காட்டிக் கொள்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை எதிர்த்து நிற்கிற அத்தனை பேரையும் பொய் வழக்கு போட்டு கைது செய்கிறார்கள்.
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு போடப்பட்ட விவகாரத்தில் புகைப்படம் வெளியிட முடிந்த, முதலமைச்சரின் கீழ் இயங்கும் காவல்துறைக்கு ஏன் என்னுடைய விஷயத்தில் எதையும் காட்ட முடியவில்லை.
பொய் வழக்குகள் போட்டு டார்கெட் செய்வதன் மூலம் நாங்கள் ஒன்றும் பின்வாங்க போவதில்லை. தீபாவளிக்கு என்னை வெளியே விடாமல் இருப்பதற்கும் முயற்சித்தார்கள்.
சிறைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா?. சிறைக்குள் சென்ற பிறகு அவர்களுடைய பாதுகாப்பில் நான் இருக்க வேண்டும். ஆனால், போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டு பிடித்த ஒருவருடன் என்னை உட்கார வைத்தார்கள். இதன் மூலம் என்னை மிரட்ட நினைத்தார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.
சிறையில் மிகப்பெரிய மனித உரிமை மீறல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே தேசிய மனித உரிமை ஆணையத்தை புழல் சிறைக்கு கொண்டு வராமல் நான் விடப் போவது கிடையாது.
முதல்வர் ஸ்டாலினுக்கு நான் மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில விஷயங்கள் எல்லாம் எனக்கு தெரியாமல் இருந்தது. நான் சாஃப்ட்டு பாலிடிக்ஸ் செய்து கொண்டிருந்தேன். ஆனால் அதிலிருந்து வெளியே கொண்டு வந்து நான் தான் அவருடைய நேரடி எதிரி என்பதைப் போன்று எல்லாம் காட்டிவிட்டார்.
சிறையில் 100% ரேஷன் போட வேண்டும். ஆனால் 25 சதவிகிதம் தான் போடுகிறார்கள். காலையில் ஆறு மணிக்கு டீ என்ற பெயரில் ஒன்றை கொடுக்கிறார்கள். அதை குடித்தால் டீயை கண்டுபிடித்தவன் கூட எங்கேயாவது இருந்து குதித்து விடுவான்.
வெளியில் 30 ரூபாய்க்கு விற்கும் காஜா பீடி உள்ளே 300 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள். எப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறார்கள். தவறு செய்துவிட்டு உள்ளே சென்றவர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். ஒவ்வொரு அறையிலும் 50, 60 பேர் என நாய்கள், எருமைகள் போல அடைக்கிறார்கள்.
இதனால் எவ்வளவு தொற்றுகள் ஏற்படும். முதல்வரின் துறையே இப்படி இருந்தால் எப்படி?.
என் மீது போடப்பட்ட எஃப்ஐஆர்-இல் ஒன்று கூட உருப்படியானது கிடையாது. அம்பாசமுத்திரத்தில் 3ம் தேதி முடிந்த யாத்திரைக்காக 4ஆம் தேதி அனுமதி கொடுக்க மாட்டோம் என்று எஃப்ஐஆர் போடுகிறார்கள். இது செல்லுபடி ஆகுமா.
ஆனால் சிறையில் ஒருவருக்கு 2 ஏர் கண்டிஷனர், 3 ஃபேன் எல்லாம் கொடுக்கிறார்கள். நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் சிசிடிவி காட்சிகளை காட்டுங்கள் என்று கேட்டேன். இதுவரை காட்டினார்களா?
அம்பாசமுத்திரம் அழைத்து செல்வதற்கு முன்னால் என்னுடன் டீல் பேசினார்கள். என்னை கேட் வரை அழைத்து வந்துவிட்டு கண்காணிப்பாளரும், கூடுதல் கண்காணிப்பாளரும், ஜெயிலரும் டீல் பேசினார்கள். இதெல்லாம் சிசிடிவியில் கண்டிப்பாக இருக்கும்.
இதையெல்லாம் பாஜக தலைவரிடம் சொல்லி இருக்கிறேன். டெல்லி சென்று முக்கியமானவர்களை சந்திப்பேன். இவர்கள் போட்ட டீலுக்கு நான் ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் தான் என்னை பேருந்தில் அழைத்துச் சென்றார்கள். அதுவரை எனக்கு மகிழ்ச்சி தான். தனியாக அழைத்து சென்றிருந்தால் என்னை ஏதாவது செய்திருப்பார்கள்.
முதல்வர் ஸ்டாலினிடமும் உதயநிதியிடமும் மீடியாக்கள் சென்று கேட்க வேண்டும். பேப்பரை திருப்பினால் 10, 20 கொலை செய்திகள் இருக்கின்றன.
இதையெல்லாம் கட்டுப்படுத்த இவர்களுக்கு திறமை இல்லை ஆனால் பாஜக காரர்கள் மீது பொய் வழக்கு போட்டு தடுக்க முயற்சிக்கிறார்கள். இதைவிட கோமாளித்தனம் வேறு ஒன்றும் கிடையாது. Amar Prasad Reddy Interview about Jail Life
நாங்கள் இன்னும் அசுர வேகத்தில் வளரப் போகிறோம் 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெறுவோம்” என்றார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பாகிஸ்தான் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகல்!
விராட் கோலி சாதனை: சச்சின் ரியாக்ஷன்!
நாட்டையே விற்றுவிடுவார்கள் போல…சாலமன் பாப்பையா வேதனை!
பயிர் காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!