வைஃபை ஆன் செய்ததும் பாரதிய ஜனதா கட்சியின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கைது செய்யப்பட்ட பிளாஷ் நியூஸ் இன்பாக்ஸில் வந்து விழுந்தது.
அதை பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“நேற்று அக்டோபர் 20ஆம் தேதி இரவு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் இருக்கும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டுக்கு எதிரே, பாஜக கட்சியின் கொடிக்கம்பத்தை நடுவதற்கு லோக்கல் நிர்வாகிகள் வந்திருக்கிறார்கள். இன்று காலை அந்த கொடிக்கம்பத்தில் அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் கொடியேற்றுவதாக திட்டமிடப்பட்டிருந்தது
இதற்கிடையில் நேற்று இரவு அந்த கொடிக்கம்பம் அமைப்பதற்கு அப்பகுதியில் உள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. தகவல் கிடைத்து போலீஸ் அங்கே சென்றது. அப்போது மாநகராட்சி அனுமதி பெறாமல் பாஜக கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருப்பதாகவும்… மேலும் உயர் மின்னழுத்த கம்பிகளுக்கு அருகே இந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள தகவலும் தெரியவந்தது.
மாநகராட்சி அதிகாரிகளும் போலீசாரும் நேற்று இரவு அங்கே சென்று, கொடிக்கம்பத்தை அகற்றுமாறு கூற அதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது மாநகராட்சி அதிகாரிகளின் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடிகள் பாஜகவினரால் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த நிலையில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கில் இன்று அக்டோபர் 21 மாலை சென்னையில் உள்ள அமர் பிரசாத் வீட்டுக்குச் சென்று அவரை கைது செய்தனர். தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அமர் பிரசாத், நவம்பர் 3 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்த செய்தி தமிழக பாஜகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அமர் பிரசாத் தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை பதவி ஏற்ற பிறகு தான் லைம் லைட்டுக்கு வந்தார். கட்சிக்குள் அவருக்கு முக்கியத்துவம் வேகமாக அதிகரிக்கப்பட்டது. சமீபத்தில் அவர் தமிழக பாஜகவின் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் தற்போது அண்ணாமலை நடத்திவரும் நடை பயணத்தின் இணை பொறுப்பாளராகவும் அவர் செயல்பட்டு வருகிறார். இணை பொறுப்பாளர் பெயரில் நடை பயணத்தை முழுக்க முழுக்க நிர்வகித்து வருபவர் அமர் பிரசாத் தான்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
இது மட்டுமல்ல அமர் பிரசாத் மீது ஆருத்ரா கோல்டு விவகாரம் உட்பட பல்வேறு பொருளாதார விவகாரங்களில் புகார்கள் எழுந்தன. பாஜகவை சேர்ந்த சிலரே அமர் பிரசாத் மீது வசூல் குற்றச்சாட்டுகளை வாரி இறைத்தனர். இந்த நிலையில் தற்போது கொடிக்கம்ப வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமர் பிரசாத் மீது மேலும் சில வழக்குகள் பதியப்படலாம் என்ற எதிர்பார்ப்பு திமுக வட்டாரத்தில் இருந்து வெளிப்படுகிறது.
ஏற்கனவே ஆருத்ரா கோல்டு விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றம் செய்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி உட்பட பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி இருந்தனர். இந்த பின்னணியில் அமர் பிரசாத் மீது ஆருத்ரா உள்ளிட்ட விவகாரங்கள் தூசு தட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அது அண்ணாமலை வரைக்கும் பாய வாய்ப்பு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்திலேயே சொல்கிறார்கள்.
தற்போது பாரதிய ஜனதா கட்சி அதிமுகவுடனான கூட்டணியில் இல்லை. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் அமர் பிரசாத், அண்ணாமலை உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இதுவே தக்க தருணம் என்ற விவாதங்களும் காவல்துறைக்குள் நடந்து வருகின்றன. இதற்காக ஆட்சி மேலிடத்தின் சிக்னலுக்காக காத்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறுகிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ODI World Cup 2023: முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி!
பிரதமர் தேர்தலில் அணிலாக இருப்போம்: டிடிவி தினகரன் பேட்டி!
அமர் பிரசாத் ரெட்டி கைது – நவம்பர் 3 வரை காவல்!