தமிழ் மொழியைக் கற்றுவருகிறேன் என்றும் தமிழ் செய்தித்தாளை தன்னால் சுயமாகப் படிக்க முடிகிறது என்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
தமிழகம் – தமிழ்நாடு
தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி “தமிழ்நாடு என்று சொல்வதற்குப் பதிலாகத் தமிழகம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்” என்று பேசியதில் இருந்தே அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கிய ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர், பெரியார், திராவிட மாடல், தமிழ்நாடு அமைதி பூங்கா போன்ற வார்த்தைகளைத் தவிர்த்து ஆளுநர் உரையை வாசித்தார்.
அதுமட்டுமின்றி தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார்.
இதனால் ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயலுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிற்கு ஆளுநர் விவகாரம் தொடர்பாகக் கடிதம் எழுதி அனுப்பினார்.
தமிழக ஆளுநர்
இதனையடுத்து ஆளுநர் மாளிகை பொங்கல் விழா கொண்டாட்ட அழைப்பிதழில் ’தமிழக ஆளுநர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவைப் புறக்கணித்தனர். ஆனால் பொங்கல் வாழ்த்து செய்திக் குறிப்பில் ‘தமிழ்நாடு ஆளுநர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் தமிழ்நாடு சர்ச்சைக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளுநரின் விளக்கத்தோடு அறிக்கை ஒன்று சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
அந்த அறிக்கையில், “காசி மற்றும் தமிழ்நாட்டுக்கும் இடையே உள்ள தொடர்பை குறிக்க, ‘தமிழகம்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன்.
எனது கண்ணோட்டத்தை ‘தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல’ பொருள் கொள்வது தவறானது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த விளக்க அறிக்கை ஏற்புடையது அல்ல என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பதில் அறிக்கைகளையும் வெளியிட்டனர்.
தமிழ் மொழியை கற்கிறேன்
இந்நிலையில் நேற்று (ஜனவரி 21) ஆளுநர் மாளிகையில், ஐ.ஏ.எஸ் பயிற்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார் ஆர்.என்.ரவி.
அப்போது பேசிய ஆளுநர், “தமிழ்நாட்டுக்கு நான் ஆளுநராக வந்தபோது, இங்குள்ள மொழி, மக்கள் அடிப்படையில் வேறு என்பதை அறிந்தேன்.
இங்கு பணியாற்றுவது எனக்கு ஒரு கற்றல் அனுபவமாக இருந்தது. நான் அறியாத பல விஷயங்களைத் தெரிந்துகொண்டேன்.
நான் இப்போது தமிழ் மொழியைக் கற்றுவருகிறேன். தமிழ் செய்தித்தாளை என்னால் சுயமாகப் படிக்கமுடிகிறது. இது ஓர் அற்புதமான இடம். தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள். தமிழ் கலாச்சாரம் மிகவும் ஆழமானது, வளமானது.
தமிழ் மொழி ஏழாயிரம் ஆண்டுகளைக் கடந்து பழமையானது. தமிழ் இலக்கியம் மிகவும் பழமையானது. ஆனால், நம் நாட்டின் பிற பகுதிகள், தமிழின் சிறப்பைப் போதுமான அளவு அறியாதது வருத்தமளிக்கிறது” என்று பேசியுள்ளார்.
மோனிஷா
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு கூட்டம்: அழகிரி ஆப்சென்ட் ஏன்?
ஈரோடு கிழக்கு: களமிறங்கும் ‘நாம் தமிழர்’!