நான் ரவுடி என்று நீங்கள் கூறியதை நிரூபிக்க முடியுமா என்று பாஜக தலைவர் அண்ணாமலைக்கு, காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவியை நேற்று (ஜூலை 8) நேரில் சந்தித்து பாஜக தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் இந்த கொலையில் பாஜகவுக்கு தொடர்பு இருக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “முன்னாள் ரவுடியான செல்வப்பெருந்தகைக்கு யார் இதை செய்திருப்பார் என்று தெரிந்திருக்கலாம். செல்வப்பெருந்தகை எல்லா ரவுடிகளையும் கண்காணிக்கிறாரா?.
இல்லை டிஜிபியாக இருந்தவரா? முன்னாள் ரவுடி என்பதால் அவருக்கு இப்போது அந்த நெட்வொர்க் குறித்து தெரிந்திருக்கலாம்.
இவர்கள் இல்லை என்றால், வேறு யார் இந்தக் கொலையை செய்தார்கள் என்பதை செல்வப்பெருந்தகையிடமே காவல்துறையினர் விசாரித்து தெரிந்துகொள்ளலாம்” என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (ஜூலை 9) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “சாவு வீட்டில் அண்ணாமலை அரசியல் பேசுகிறார். இது என்ன நாகரீகம்.
அவருடைய கட்சியில் எஸ்.வி.சேகர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை, காயத்ரி ரகுராம் பதிவுக்கு பதில் சொல்ல முடியவில்லை. திருச்சி சூர்யாவுக்கு பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்.
முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நான் தலைவராக இருந்தவரை பாஜகவில் சமூக விரோதிகளுக்கு இடமில்லை என்கிறார். அதற்கும் பதில் இல்லை.
பாஜக ஐடி விங்கில் இருந்த நிர்மல் குமார் பதிவுக்கு, இந்த ஹனிட்ராப் அண்ணாமலை ஏன் வாய் திறப்பதில்லை.
அதிகாரத்தை நோக்கிய பயணம் செய்கிறவர் மக்கள் தலைவராக மாற முடியாது.
இந்த கொலையில் ஆருத்ரா நிறுவனத்தை குறிப்பிட்டு பேசுகிறார்கள். இது என்னவென்று பாருங்கள் தான் சொன்னேன்.இவர்தான் குற்றவாளி என்று நாங்கள் யாரையும் சொல்ல வில்லை.
காவல்துறை புலன் விசாரணை செய்து வருகிறது. பாஜகவை சார்ந்த ஒருவர் சரணடைந்திருக்கிறார். இதை அவரே சொல்லியிருக்கிறார். இதுபற்றி அண்ணாமலை வாய் திறக்கவில்லை.
எப்போதும் அண்ணாமலை தன் வாயால் தான் கெட்டுப்போகிறார் என்பார்கள்… அப்போதெல்லாம் ஐபிஎஸ் படித்த ஒருவர் இப்படியெல்லாம் பேசுவாரா என நான் நம்பவில்லை.
என்னை ரவுடி லிஸ்ட்டில் இருப்பவர்கள் என்று சொல்கிறார். நான் அண்ணாமலையிடம் கேட்கிறேன், நீங்கள் என்ன ஐபிஎஸ் படித்திருக்கிறீர்கள்.
உண்மைக்கு புறம்பாக பேசினால், ஆதாரம் இல்லாமல் பேசினால், யாருடைய மனமாவது புண்படும்படி பேசினால் என்ன சட்டம் பாயும் என்று தெரியுமா…
காந்தியைக் கொலை செய்தீர்கள்… அவர் வழி வந்த எங்கள் கேரக்டரை கொலை செய்கிறீர்கள்.
எல்லா குற்றவாளி மற்றும் ரவுடிகளை கட்சியில் சேர்த்துக்கொண்டு சட்டம் ஒழுங்கு பற்றி அண்ணாமலை பேசிக்கொண்டிருக்கிறார். எனது பெயர் குற்றப்பதிவேடு பட்டியலிலும் ரவுடிகள் பட்டியலிலும் இருப்பதாக சொல்லும் அண்ணாமலை இதை நிரூபிக்க முடியுமா?
முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை மூலமாக பெற்ற 32 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில் அந்தக் கட்சியில் சேர்ந்த 261 குற்றவாளிகள் மீது 1977 வழக்குகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை கர்நாடகாவில் என்ன செய்துகொண்டிருந்தார். அவர் ஏன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என ஆய்வு செய்ய வேண்டும்.
இப்போது அவருடைய அரசியல் வாழ்க்கை காங்கிரஸிடம் உள்ளது. அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும். இதுதான் அவருக்கு கடைசி எச்சரிக்கை. அவர் மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்.
அவர் மீது அவதூறு வழக்கும் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் தொடரப்படும்.
அண்ணாமலை போல், நாங்கள் கோழைகள் அல்ல” என்று காட்டமாக தெரிவித்தார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்!
புதிய குற்றவியல் சட்டங்களில் திருத்தம்
அது என்னடா ஆணா ஊணான்ணா SC , ST வன்கொடுமை?