கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆகியிருக்கும் நிலையில் இன்னும் அடுத்த முதல்வர் யார் என்று அறிவிக்கப்படாமலே இருக்கிறது.
காங்கிரஸ் மாநில தலைவர்கள் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாருக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக டெல்லியில் கார்கே ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நேற்று சித்தராமையா டெல்லி சென்றார். அங்கு கார்கே மற்றும் ராகுல் காந்தியுடன் முதல்வர் பதவி குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. நேற்று டி.கே.சிவக்குமார் டெல்லி செல்லவில்லை. வயிறு வலி காரணமாக செல்லவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தலைமை அழைப்பின் பேரில் இன்று (மே 16) டெல்லி புறப்பட்டுச் சென்றார் டி.கே.சிவக்குமார். இதனிடையே கர்நாடகாவின் முதல்வர் பதவியை யார் வகிப்பது என்பதில் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையாவுடன் ஏற்பட்ட கடும் மோதலால், டி.கே.சிவக்குமார் மாநிலக் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகின.
இதை நிராகரித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், நான் காங்கிரஸில் இருந்து விலகுகிறேன் என்று எந்த சேனலாவது செய்தி வெளியிட்டால் அந்த நிறுவனம் மீது அவதூறு வழக்குத் தொடருவேன் எனது கட்சிதான் எனது அம்மா என தெரிவித்துள்ளார்.
இதனிடையே டெல்லியில் கார்கே இல்லத்தில், கே.சி.வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
அடுத்ததாக டி.கே.சிவக்குமாரையும், சித்தராமையாவையும் கார்கே சந்திக்கவுள்ளார். இந்நிலையில் டி.கே.சிவக்குமார் 5 மணியளவில் கார்கே இல்லத்துக்கு சென்றடைந்துள்ளார். அவரைத் தொடர்ந்து 6 மணிக்கு சித்தராமையா சந்திப்பார் எனவும், இரவுக்குள் யார் முதல்வர் என்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
பிரியா
அது கள்ளச்சாராயம் அல்ல… : தடய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
அது கள்ளச்சாராயம் அல்ல… : தடய ஆய்வில் அதிர்ச்சி தகவல்!