நம்பிக்கையை கெடுத்த எதிர்க்கட்சிகள்: குமுறிய மார்க்ரெட் ஆல்வா

அரசியல்

சில கூட்டணி கட்சிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜகவை தேர்ந்தெடுத்து தங்களுடைய நம்பகத்தன்மையை கெடுத்துக் கொண்டார்கள் என குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிட்ட காங்கிரசின் மார்க்ரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவருக்கான தேர்தல் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்காவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

திரெளபதி முர்மு ஒட்டுமொத்தமாக 6,76,803 வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற நிலையில்  அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 3,80,177 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நேற்று காலை (ஆகஸ்ட் 06) நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக ஜெகதீப் தங்கரும் எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவும் போட்டியிட்டனர்.

தேர்தலில் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக எம்பிக்கள் தங்களுடைய வாக்கை செலுத்திய நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் வாக்குப்பதிவை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மொத்தம் பதிவான 725 வாக்குகளில்  ஜெகதீப் தங்கர் 528 வாக்குகளும் மார்க்ரெட் ஆல்வா 182 வாக்குகளும் பெற்றார்.

346 வாக்குகள் வித்தியாசத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீப் தங்கர் வெற்றி பெற்றார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மார்க்ரெட் ஆல்வா,

குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு தங்கருக்கு வாழ்த்துக்கள்!

இந்தத் தேர்தலில் எனக்கு ஆதரவளித்த அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும், வாக்களித்த  அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவும், கடந்த காலத்தை விட்டுவிட்டு ஒருவருக்கொருவர் நம்பிக்கையை வளர்க்கவும் இந்தத் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில கூட்டணி கட்சிகள் கொள்கைகளை சிதைக்கும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாஜகவை ஆதரித்து தேர்ந்தெடுத்துள்ளன. இதன் மூலம் அந்த கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தங்களுடைய நம்பகத்தன்மையை கெடுத்துக் கொண்டார்கள்” என மார்க்ரெட் ஆல்வா தெரிவித்துள்ளார்.

  • க.சீனிவாசன்

குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தங்கர்: ராஜஸ்தான் தேர்தலில் பாஜகவுக்கு கை கொடுக்குமா?

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *