நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில்… பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் இன்று (பிப்ரவரி 1) சென்னை எழும்பூரில் நடந்தது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சிறப்புப் பொதுக் குழுவின் முக்கியத்தும் வாய்ந்த அரசியல் தீர்மானத்தை பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வாசித்தார்.
“பாட்டாளி மக்கள் கட்சிக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கும் இந்த தேர்தல் முக்கியமானது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுவதை உறுதி செய்கிறது.
இதை மத்திய, மாநில அரசுகள் புரிந்துகொண்டு செயல்படும் வரை யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால் கடந்த அரை நூற்றாண்டாக மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. நெருக்கடி காலத்தில் மாநில அரசின் வசம் இருந்த ஐந்து முக்கியமான ’பொருட்கள்’ மத்திய அரசுக்கு மாற்றப்பட்டன.
தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நீட் தேர்வு திணிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதற்கு காரணம் இந்த மாநில அதிகாரங்கள் பறிக்கப்பட்டதுதான்.
இந்த அநீதிக்கு எதிராக போராடுவது மாநில அரசுகளின் கடமை. பாமக மக்களவையில் வலிமையாக இருந்தால் தமிழ்நாட்டுக்கே நன்மை.
இந்த காரணத்தால் 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் பாமக வெற்றி பெற வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்து பாமக செயல்பட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக மாநில நலனிலும் தேசிய நலனிலும் அக்கறை கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைக்க இந்த பொதுக்குழு தீர்மானிக்கிறது
எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவெடுக்கும் அதிகாரத்தை நிறுவனர் தலைவர் மருத்துவர் அய்யா டாக்டர் ராமதாஸுக்கு வழங்கப்படுகிறது” என்று ஜி.கே.மணி தீர்மானத்தை வாசித்தார். இது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.
பொதுக்குழுவில் பேசிய டாக்டர் ராமதாஸ், “நாம் இந்தத் தேர்தலில் குறைந்தது ஏழு இடங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன்.
உங்கள் விருப்பம் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடக் கூடாது என்பதாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்” என்றார் ராமதாஸ்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி வீடுகள்!
இடைக்கால பட்ஜெட்: வேளாண் துறைக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?