உங்களை சிறையில் வைக்கக் காரணமானவர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, இப்போது மோடி நல்லாட்சி தருகிறார் என்று சொல்கிறீர்களா என டிடிவி தினகரனிடம் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மதன் ஜெயபாலனை ஆதரித்து இன்று (ஏப்ரல் 1) பரப்புரை மேற்கொண்டார் சீமான்.
அப்போது அமமுக பொதுச்செயலாளரும் தேனி பாஜக கூட்டணி வேட்பாளருமான டிடிவி தினகரனை கடுமையாக விமர்சித்து பேசிய சீமான், “டிடிவி தினகரனை நான் கேட்கிறேன்… நீங்கள் சிறைக்கு போக யார் காரணம்? சசிகலாவை நான்கரை ஆண்டு காலம் சிறையில் வைத்தது யார்?.
சசிகலாவை முதல்வராக்க நீங்கள் முயற்சிக்கும் போது 22 நாட்கள் தாமதித்தது யார்? சசிகலா குடும்பம் கட்சியிலும் ஆட்சியிலும் இருக்கக் கூடாது, அவரைத் தவிர வேறு ஒருவர் என்ற திட்டத்தை வகுத்தது யார்?. இதே பிஜேபிதான்.
சசிகலா வழக்கை அவசர அவசரமாக விசாரித்து தண்டனை வழங்கியது யார்?. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு இரு தீர்ப்புகளை வழங்குவதாக இருந்தது. ஒரு நீதிபதி சசிகலாவை விடுதலை செய்யப் போகிறார், மற்றொருவர் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்போகிறார். இதுதான் அன்றைய நிலையாக இருந்தது.
இதனால் இந்த வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டிருக்கும். வழக்கு 4,5 ஆண்டுகள் காலம் நடந்திருக்கும்.
ஆனால் அப்போது இரு நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை வழங்கினார்கள். சசிகலாவும் உள்ளே சென்றுவிட்டார். பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு சசிகலா கூறியவுடன் இவ்வழக்கை அவசரமாக விசாரிக்கச் சொன்னது யார்? இதே பிஜேபிதான்…
உங்களைத் தூக்கி சிறையில் வைத்தபோது, குரல் கொடுத்தது நான்தான். இன்று டிடிவி தினகரனுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை உங்களுக்கும் வரும் என்று டிடிவிக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க ஸ்டாலினையும் அழைத்தேன். அவர் வரவில்லை.
இரட்டை இலை சின்னத்தை வாங்குவதற்காக ஒருவருக்குக் காசு கொடுத்தீர்களே, அவர் இன்னும் உள்ளேதான் இருக்கிறார். இரட்டை இலையைப் பறித்து எடப்பாடிக்குக் கொடுத்தது மோடிதான்.
ஆனால் இப்போது மோடி நல்லாட்சித் தருகிறார் என்று சொல்கிறீர்கள். பாஜகவுடன் எப்படி கூட்டணி வைத்தீர்கள். நீங்கள் சரணடைந்துவிட்டீர்கள்.
என்னை எவ்வளவு மிரட்டினார்கள். எவ்வளவு ஆசை வார்த்தை கூறினார்கள். என் காதில் டன் டனாக தேனை ஊற்றினார்கள். ஆனால் நான் சரணடையவில்லை” என கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வேலூரில் மும்முனை போட்டியா? : கதிர் ஆனந்த் பதில்!
Mrunal Thakur: தென்னிந்திய சென்ஷேசனலின் ‘சொத்து’ மதிப்பு இதுதான்!
என்னது சீமான் அண்ணாச்சி இப்படி எல்லா உண்மையையும் பேசிட்டிக? அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்தானே?