பாஜகவுடன் கூட்டணியா? : ஓ.பன்னீர் செல்வம் பதில்!

Published On:

| By Kavi

Alliance with BJP O. Panneer Selvam Answer

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று (செப்டம்பர் 28) மாலை ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் அனைவரும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “தமிழ்நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமை குறித்து விவாதித்தோம். புரட்சி பயணத்தை எங்கு எவ்வாறு நடத்துவது எனவும் தீர்மானித்தோம்.

சென்னை உயர் நீதிமன்றம் அளித்த பொதுக்குழு வழக்கு தீர்மானத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்தும் விவாதித்தோம்” என்றார்.

“நாங்கள் எப்போதும் சொல்லி வந்ததை போல பழனிசாமியை நம்பமுடியாது என்பதை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அரசியலில் நம்பகத்தன்மை என்பது அடிப்படை பண்பு. யாரையாவது கடைக்கு அனுப்பினால் கூட நம்பிக்குரியவரைத்தான் அனுப்புவோம்.

அதுபோன்று தமிழ்நாட்டு மக்கள் சார்பாக நாட்டை ஆளுகின்ற உரிமையை யாரிடம் தர வேண்டுமென்றால், நம்பிக்கைக்குரியவருக்குத் தான் தர வேண்டும். அந்த வகையில் அரசியலில் நம்பிக்கைக்குரியவர் ஓபிஎஸ். இது நிரூபிக்கப்பட்டது. நம்பிக்கைதன்மை அற்றவர் யார் என்று இந்த நாடறியும்” என்றார்.

அப்போது அவரிடம் பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறீர்களா என்ற கேள்விக்கு, “அதை பாஜகவிடம் தான் கேட்க வேண்டும். தேர்தல் வரட்டும் யாருக்கு ஆதரவு என தீர்மானிப்போம். பாஜக என்ன செய்ய போகிறது என்று எங்களுக்கு தெரியாது. அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பொறுத்து நாங்களும் முடிவெடுப்போம்” என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

பாஜக தரப்பில் இருந்து யாரேனும் தொடர்பு கொண்டார்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “பாஜக கட்சியில் இருந்து தினம் தோறும் எங்களுடன் பேசுக்கொண்டிருக்கிறார்கள். மத்திய தலைமைதான் பேசுகிறது” என்றார்.

அவரிடம் டெல்லி சென்று நட்டா உள்ளிட்டோரை சந்திக்க திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, “படிபடியாக நல்ல நிகழ்வுகள் நடைபெறும். வரக்கூடிய தேர்தல் நாடாளுமன்றத் தேர்தல். இந்தியாவை யார் ஆளப்போகிறார்கள் என்பதற்கான தேர்தல். இந்திய அளவில் இயக்கத்தை நடத்தி கொண்டிருப்பவர்கள் தான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் இருக்கிறது.

இரண்டு முறை பாஜக ஆண்டிருக்கிறது. மூன்றாவது முறையாக ஆள்வதற்கான தகுதியையும் பாஜக பெற்றிருக்கிறது. பாஜக தங்களது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகு எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்” என்றார்.

அதிமுக பாஜக கூட்டணி முறிவு நாடகம் என்கிறார்களே என்ற கேள்விக்கு, “நீங்களே சொல்கிறீர்கள் அது நாடகம் என்று. பாஜக 16 மாநிலங்களில் ஆண்டு கொண்டிருக்கிறது. தேஜ கூட்டணி கூட்டத்தில அவரை பிரதமர் பக்கத்தில் அமர வைத்துக்கொண்டு அறிவித்திருக்கிறார்கள்.

அப்படி அறிவித்த பாஜக தலைமைக்கு தொடர்ந்து யார் நம்பிக்கை துரோகம் செய்கிறார்கள் என்று மக்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். அங்கு மீட்டிங்கில் பேசிவிட்டு வந்து இங்கு நாங்களே தலைமை என்று  சொல்ல போய்தான் பிரச்சினையே ஆரம்பித்தது. கூட்டணியுடன் பேசும்போது மூளையை பயன்படுத்தி பேச வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், “பாஜகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று சொன்னால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?. தேசியக் கட்சியின் மாநில தலைவரை மாற்றுங்கள் என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது” என குறிப்பிட்ட அவரிடம்,

அண்ணா, ஜெயலலிதாவை பற்றி அண்ணாமலை விமர்சனம் செய்திருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது குறுக்கிட்டு பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், “அண்ணாமலை எடுத்த தகவல்கள் தவறானது. ஆனால் உள்நோக்கத்தோடு சொன்னார் என்று நான் சொல்ல தயாராக இல்லை. அண்ணா பற்றி அண்ணாமலை விமர்சித்து 4 நாட்கள் கழித்து இவர்கள் பிரச்சினையை கிளப்பினார்கள்.

2026 தேர்தலில் பாஜக ஆட்சிக்கு வரும் அதற்காக நான் பாடுபடுவேன் என்று அண்ணாமலை சொன்னார். அதனால் தான், நான் மாப்பிள்ளை இல்லையா என எடப்பாடி பழனிசாமி விழித்துக்கொண்டார்.

அண்ணாவை பற்றி பேசியதற்காகவோ, ஜெயலலிதாவை பற்றி பேசியதற்காகவோ எடப்பாடி பழனிசாமி கவலைப்படவில்லை. அவரை 2026ல் முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பிரச்சினை. தன்னை  முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் பிரச்சினை.

எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தாதீர்கள் என்று ஏற்கனவே சொன்னேன். அப்போது நடந்த செயற்குழு கூட்டத்தில் என்னை வெளியே போக சொன்னார்கள். இன்று என்ன ஆயிற்று?” என கேள்வி எழுப்பினார்.

பாஜகவின் அரசியல் நிலைப்பாட்டை பொறுத்துதான் கூட்டணி இருக்கும் என்று குறிப்பிட்டதுடன், நாங்களும், டிடிவியும் மூன்றுமாதமாக பாஜகவுடன் தொடர்பில் தான் இருக்கிறோம் என்றார் ஓபிஎஸ்.

கூட்டணி இல்லாமல் தனித்து செயல்படவும் எங்களால் உறுதியாக முடியும். நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டமன்றத் தேர்தல் வர வாய்ப்பில்லை. எனவும் குறிப்பிட்டார் ஓ.பன்னீர் செல்வம்.

பிரியா

பாஜக அதிமுக கூட்டணி முறிவு : அண்ணாமலை முக்கிய அறிவிப்பு!

சிறு துறைமுகங்கள் மேம்பாடு : சிங்கப்பூரில் எ.வ.வேலு