“பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. அவர்களுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்ற அதிமுக நிலைப்பாட்டில் மாற்றமில்லை” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (நவம்பர் 11) தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிலையில், ’மக்களவை தேர்தல் மட்டுமல்ல, 2026 சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் நாங்கள் கூட்டணி அமைக்கப்போவதில்லை’ என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக தெரிவித்தார்.
இந்த நிலையில் ’பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி அமைக்குமா?’ என்று அவரிடம் நேற்று திருச்சியில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படும் என்றும், எங்களுடன் விருப்பப்பட்டு வருபவர்கள் எல்லாம் ஒத்த கருத்துடைய கட்சிகள் தான் என்றும் எடப்பாடி தெரிவித்தார்.
கடந்த சில மாதங்களாக பாஜகவுடனான கூட்டணிக்கு உறுதியாக மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், அவர் நேற்று கூறிய கருத்து அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 10 பேர் கொண்ட கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு!
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், “பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை, அவர்களுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்ற முடிவில் மாற்றமில்லை, 2026 தேர்தலிலும் இதுதான் அதிமுகவின் நிலைப்பாடு” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “அதிமுகவின் இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. இதில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் உறுதியாக உள்ளார். இந்தநிலையில் அவர் நேற்று அளித்த பேட்டியை திரித்து, பாஜகவுடன் மறைமுக கூட்டணியில் அதிமுக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி மக்களை திசை திருப்பும் வேலைகளில் ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. இது முற்றிலும் தவறானது” என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா