2026ல் பாஜகவுடன் கூட்டணி?: ஜெயக்குமார் பளீச் பதில்!

Published On:

| By Kavi

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 108ஆவது பிறந்தநாள் இன்று (ஜனவரி 17) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து செய்தியாளார்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாது என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக அறிவித்துவிட்டார். பண அதிகாரம், சர்வாதிகாரம், அடக்குமுறை என இந்த தேர்தலில் ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்கள் எல்லாம் அரங்கேறும். போலியான வெற்றியை பெறுவதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்வார்கள்.
தேர்தலை கண்டு நாங்கள் அஞ்சவில்லை. திமுகவும் தேர்தலை புறக்கணித்திருக்கிறது. 2026ல் ஸ்டாலின் பாட்சா பலிக்காது.
சட்டமன்றத் தேர்தல் எப்போது வரும்… திமுகவை எப்படி ஒழித்துக்கட்டலாம் என்று மக்கள் காத்திருக்கிறார்கள்” என்று கூறினார்.

அதிமுக – பாஜக கூட்டணி அமைய வேண்டும் என்று துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறியது குறித்த கேள்விக்கு, “குருமூர்த்தி ஏற்கனவே என்னிடம் பல தடவை வாங்கிக் கட்டிக் கொண்டார். அவர் வாயை அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது கட்சியால் எடுக்கப்பட்ட முடிவு.

சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை, தெளிவாக கூறுகிறோம். இது கட்சி எடுத்த முடிவுதான்” என்று பதிலளித்தார்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மகன் இன்பநிதி ஸ்டாலின் கலந்துகொண்டது, ஆட்சியர் சங்கீதா எழுந்து நின்றது தொடர்பான கேள்விக்கு, “இன்பநிதியும் அவருடைய நண்பர்களும் உட்கார வேண்டும் என்பதற்காக ஆட்சியரை நிற்கவைத்து நியாயமா? ஆட்சியர் பேட்டி கொடுத்தார். ஆனால் அவரால் எதிர்த்து கொடுக்க முடியுமா? இல்லையென்றால் கலெக்டர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு வேறு போஸ்டிங் கொடுத்துவிடுவார்கள்” என்று கூறி இன்பநிதிக்கு அமைச்சர் மூர்த்தி சால்வை அணிவித்ததையும் கடுமையாக விமர்சித்தார் ஜெயக்குமார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

‘மெஸ்ஸி பி.எஸ்.ஜியில் சேர்ந்ததும் எம்பாப்பே பொறாமைப்பட்டார்’- போட்டு உடைத்த நெய்மர்

ஹெல்த் டிப்ஸ்: வொர்க் அவுட்டில் உடல்வலி … உடற்பயிற்சியை தொடரலாமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share