அதிமுகவுடன் கூட்டணி என்றால் ராஜினாமா… அண்ணாமலை அறிவிப்பு!

அரசியல்

தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 17) சென்னை அமைந்தகரையில் உள்ள அய்யாவு மண்டபத்தில் நடைபெற்றது.

கமலாலயத்தில் உள்ள கூட்ட அரங்கில் புனரமைப்பு வேலைகள் செய்யப்பட்டு கொண்டிருப்பதால் இடமாற்றம் செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது இந்த முக்கிய கூட்டம்.

காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்தில் தொடக்க உரையாக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன் பூத் கமிட்டிகள் அமைப்பது பற்றியும் கட்சியின் நிதி நிலவரத்தை மேம்படுத்துவது பற்றியும் இரண்டு மணி நேரம் வகுப்பெடுப்பது போல பேசினார்.

12 மணிக்கு அரங்கத்துக்குள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்தார். சில நிமிடங்களில் பேசத் தொடங்கினார்.

“தமிழக பாஜகவை இதுவரை இல்லாத அளவுக்கு வளர்த்தெடுப்பது என்பது தான் எனது திட்டம். அதற்காகத்தான் நான் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கு எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் தேசிய கட்சியின் மேனேஜர் அல்ல, நான் ஒரு தலைவர் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தேன்.

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய, வெற்றி பெறுவதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. ஒருவேளை தேசிய தலைமை அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொன்னால் நான் என் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போய் விடுவேன். என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ஒரு தொண்டனாகவே இருந்துவிட்டு போய்விடுவேன்’ என்று பேசியதும் இதை எதிர்பார்க்காத, கரு நாகராஜன், அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்கள்… ’நீங்கள் அப்படி ஒரு முடிவு எடுக்கக் கூடாது’  என்று முழக்கமிட்டார்கள்.

அப்போது பாஜக மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் எழுந்து, ‘நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்… கொஞ்சம் வெளிப்படையாக சொல்லுங்கள்’ என்று கேட்டார்.

உடனே பின்பக்கம் அமர்ந்திருந்த நிர்வாகிகள், ‘தலைவரையே எதிர்த்து பேசுறியா?’ என்று குரல்களை எழுப்பி திருப்பதி நாராயணனுக்கு எதிராக சத்தமிட்டார்கள்.

அப்போது மேடையில் அமர்ந்திருந்த தேசிய மகளிர் அணி தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், “இன்று நடந்து கொண்டிருக்கும் இந்த கூட்டம் மாநில நிர்வாகிகளின் கூட்டம். நமது கட்சி ஒரு தேசிய கட்சி. தேர்தல் கூட்டணிகள் பற்றி தேசிய தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். அதை செயல்படுத்தும் பொறுப்பு தான் நமக்கு உரியது. 

மேலும் இந்தப் பிரச்சனை இங்கே பேசப்பட வேண்டிய சப்ஜெக்டே இல்லை. மாநில கோர் கமிட்டி (மையக் குழு) கூட்டம் நடக்கும்போது இது பற்றி பேசுவோம். இப்போது இது பற்றி விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று பேசி சலசலப்பை முடிவுக்கு கொண்டு வந்தார். 

பிறகு தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “நான் மே மாதம் வரை கர்நாடக தேர்தல் பணிகளுக்காக செல்கிறேன்”’ என்று கூறி பேச்சை முடித்து இருக்கிறார்.

தமிழக பாஜகவின் நிர்வாகிகள் கூட்டத்தில் இதுபோல இதுவரை நடந்ததில்லை என்கிறார்கள் நம்மிடம் பேசிய முக்கிய நிர்வாகிகள்.

“ஒரு மாநிலத் தலைவருக்கு ஆதரவாக சில நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் கோஷம் இடுவதும், கேள்வி கேட்பவர்களை கண்டித்து முழக்கம் இடுவதும் திராவிட கட்சிகளில் தான் இருக்கும். ஆனால் தேசிய கட்சியான பாஜகவிலும் இப்போது இது வந்திருப்பது வருத்தத்துக்குரியது.

கடந்த மார்ச் 15ஆம் தேதி டெல்லியில் தமாகா தலைவர் ஜி.கே. வாசன், அதிமுக மூத்த எம்பி தம்பிதுரை ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து பேசி இருக்கிறார்கள். அந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் பற்றியும் இவர்கள் இருவரும் மோடியிடம் எடுத்துரைத்துள்ளார்கள். இந்த சந்திப்புகள் நடந்த ஓரிரு தினங்களில் அண்ணாமலை தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வது வரை பேசியிருக்கிறார் என்றால் ஏதோ நடந்து கொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்” என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

ஆரா

குறைந்துக்கொண்டே வரும் தமிழகத்திற்கான நிதி: பி.டி.ஆர்

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது?: தேதி அறிவிப்பு!

டிஜிட்டல் திண்ணை: பன்னீர் அணி- பாஜக கூட்டணி… எடப்பாடிக்கு வந்த டெல்லி மெசேஜ்!

+1
0
+1
8
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.