டிஜிட்டல் திண்ணை: அதிமுகவோடு கூட்டணி… ராமதாஸ் போடும் 3 கணக்குகள்!- திமுக கூட்டணியில் திருமா, வைகோ அதிருப்தியா?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணிகளிலும் நடக்கும் சந்திப்புகள் பற்றிய புகைப்படங்கள் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்தபடி வாட்ஸ் அப் தனது மெசேஜ் டைப் செய்ய தொடங்கியது. “நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில தினங்களில் தலைமை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படக் கூடும் என்ற நிலையில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் பணியில் தீவிரமாகியுள்ளன.

நேற்று பிப்ரவரி 24 அன்று திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும் ஒதுக்கப்பட்டு உடன்பாடு கையெழுத்து ஆகிவிட்டது.

நேற்றைய தினமே மதிமுகவையும் பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடு செய்து கொள்ள அழைத்திருந்தார்கள். ஆனால் திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரே ஒரு தொகுதி தான் என்று நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் இதை ஒப்புக் கொள்ளாமல் நேற்று மதிமுகவினர் பேச்சுவார்த்தை முடிந்து சென்றுவிட்டனர். ஒற்றை இடத்தில் நிற்கும் கட்சிகளுக்கான உடன்பாட்டை நேற்று முழுமை செய்வதாக திமுக முடிவு செய்திருந்தது. அந்த வகையில் மதிமுகவுக்கும் ஒரு தொகுதி தான் என்று திமுக கூறிய நிலையில் அது இழுபறியானது. வைகோ அதிருப்தியாக உள்ளார் என்பதுதான் இன்று பகல் நிலைமை.

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகள் கேட்கிறது, நான்கு தொகுதிகள் கேட்கிறது என்றெல்லாம் வெளியே பேச்சு இருக்கிறது. ஆனால் உள்ளபடியே விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் மக்களவைத் தொகுதியையும் இன்னொரு பொது தொகுதியையும் திமுக இறுதிச் செய்திருப்பதாக அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிதம்பரத்தில் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். கள்ளக்குறிச்சி பொதுத் தொகுதியில் சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து துணைப் பொதுச் செயலாளராக பதவி அளிக்கப்பட்ட ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். தற்போது விழுப்புரம் தொகுதியில் எம்பியாக இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரை இந்த முறை போட்டியிட வேண்டாம் என்றும், அவர் வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் விசிக தரப்பில் கூறுகிறார்கள். அதே நேரம் பானை சின்னம் தான் என்பதில் விடுதலைச் சிறுத்தைகள் உறுதியாக இருக்கிறார்கள்.

Image

கள்ளக்குறிச்சி தொகுதியில் தற்போது கௌதம சிகாமணி எம்.பி.யாக இருக்கிறார். அவரை சட்டமன்றத்தில் நிறுத்தலாம் என்று திமுக தலைமை கூறியிருக்கிறது. ஆனால், கள்ளக்குறிச்சியை மீண்டும் தன் மகனுக்கே கேட்கிறார் பொன்முடி. தான் தண்டனை விதிக்கப்பட்ட வழக்கில் இருந்து விடுதலையாகி வந்து மீண்டும் அமைச்சராவேன் என்று திமுக தலைமையிடம் கூறிவருகிறார். ஆனால் ஆதவ் அர்ஜுனாவோ உதயநிதி, சபரீசன் ஆகியோரின் அறிதலோடும் புரிதலோடும்தான் கள்ளக்குறிச்சியை குறிவைத்திருக்கிறார் என்கிறார்கள் சிறுத்தைகள். இது திமுக நிலவரம்.

அதிமுகவில் பாட்டாளி மக்கள் கட்சியோடு கிட்டத்தட்ட உடன்பாடு நிலையில் தான் இருக்கிறார்கள். ஏற்கனவே தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸை முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் சந்தித்த நிலையில் மீண்டும் இப்போது சந்தித்துள்ளார்.

9 மக்களவைத் தொகுதிகள் ஒரு ராஜ்யசபா என்று பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் அதிமுகவோ ஏழு மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபாவுக்கு தயார் என்று தெரிவித்துள்ளது. மற்ற விஷயங்களும் இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளன.

CV Shanmugam meets Ramadoss for Alliance

பாட்டாளி மக்கள் கட்சி தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தேசிய அளவில் மோடி வெற்றி பெற்று மூன்றாவது முறை பிரதமராக வருவார் என்று தனது டெல்லி நண்பர்கள் கூறியதன் அடிப்படையில்… தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணையலாம் என்ற கருத்தை கொண்டிருந்தார். அதனால்தான் பாமக பொதுக்குழுவில் கூட, மோடியாலேயே பாராட்டப்பெற்ற டாக்டர் அய்யா என்று ஒரு வார்த்தையை கூறினார்.  மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது அன்புமணியின் எதிர்பார்ப்பு நம்பிக்கை.

ஆனால் டாக்டர் ராமதாஸோ தனது மகன் அன்புமணி மத்திய அமைச்சர் ஆவதை விரும்பினாலும்… பாஜகவோடு வைக்கும் கூட்டணிக்கும், அதிமுகவோடு வைக்கும் கூட்டணிக்கும் பல வித்தியாசங்கள் இருப்பதை தனக்கு நெருக்கமான நிர்வாகிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிமுக அணியில் சேர்ந்தால் வருகிற மக்களவை தேர்தலில் குறைந்தபட்சம் மூன்று எம்பி தொகுதிகளை கைப்பற்றலாம் என்று கணக்கு போடுகிறார் ராமதாஸ். அது மட்டுமல்ல வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் தொடர்கிற நிலையில் முப்பது முதல் 40 இடங்களை பெற்று அதில் பல இடங்களில் வெற்றி பெறவும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வாய்ப்பு இருக்கிறது. அதை தொடர்ந்து தமிழகத்தில் நடக்க இருக்கிற உள்ளாட்சி தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சி வடதமிழ்நாட்டில் கணிசமான இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது என்று மூன்று கணக்குகளை போட்டுக் கொண்டிருக்கிறார் ராமதாஸ்.

4 பேர், மேடை, கோவில் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

அன்புமணி மத்திய அமைச்சராவது என்ற ஒற்றைக் கணக்கா அல்லது வருகிற மக்களவைத் தேர்தல், அடுத்த சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து வருகிற உள்ளாட்சித் தேர்தல் என்ற மூன்று தேர்தல்களில் கட்சியினர் வெற்றி பெற்று கட்சியினர் பலரும் பதவிகளுக்கு வருவதா என்றால் அதிமுகவோடு அணிசேர்வதையே விரும்புகிறார் டாக்டர் ராமதாஸ். பாமக கௌரவ தலைவர் ஜி. கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகளும் இதுதான் சரி என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு டாக்டர் அன்புமணி, ஜி.கே. மணியோடு ஒரு நிகழ்வில் பத்திரிகையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோது, ’எனக்கு சட்டமன்றத்துக்கு செல்ல நேரமாகிவிட்டது’ என்று அன்புமணியிடம் ஜி.கே. மணி தெரிவித்தார். அப்போது அன்புமணி சற்று டென்ஷனாக பேசினார். இந்த சம்பவத்துக்கு பின்னணியில் பாமக நிறுவன டாக்டர் ராமதாஸ் போட்ட மூன்று கணக்குகள் தான் இருக்கின்றன என்கிறார்கள் பாமக நிர்வாகிகள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”விஜயதரணி போன்று கோவையிலும் விக்கெட் விழப்போகிறது” : அண்ணாமலை

Ranji Trophy : 7 ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதியில் தமிழ்நாடு அணி

+1
0
+1
4
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *