டிஜிட்டல் திண்ணை: கூட்டணிப் பிரச்சினை… கோவாவில் இருந்த வேலு அவசரமாய் போன் போட்ட திருமா

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்… மது ஒழிப்பு மாநாட்டுக்கு அதிமுகவுக்கு அழைப்பு விடுத்த திருமா, அதற்கு மற்ற தலைவர்களின் ரியாக்ஷன்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப்  தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை  விசிக  தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் அக்டோபர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு விசிக மகளிர் அணி சார்பில் நடைபெறுகிறது என்று அறிவித்தார். அதில், அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்கலாம் என்றும் அழைப்பு விடுத்தார்.

அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், ’அதிமுகவும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாம், அவர்களும் மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவாளர்கள் தான். சாதி, மதவாத சக்திகள் தவிர அனைத்து ஜனநாயக சக்திகளையும் நாங்கள் அழைக்கிறோம். இதை தேர்தலோடு முடிச்சு போட வேண்டாம் தேர்தல் நிலைப்பாடு என்பது வேறு இது பொது நோக்கத்திற்கான மாநாடு’ என்று கூறினார்.

ஆனாலும் திருமாவின் இந்த அறிவிப்பு முழுக்க முழுக்க கூட்டணி அரசியல் மாற்றமாகவே ஊடகங்களில் வெளிப்பட்டது. ஏற்கனவே விசிக கட்சியில் பல மாவட்டச் செயலாளர்கள், ‘திமுக தங்களை மதிப்பதே இல்லை’ என்று திருமாவிடமே நேருக்கு நேராக முறையிட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள், ‘அண்ணன் சொன்னபடி நாம அதிமுகவோட கூட்டணி அமைச்சிடுவோமா?’ என்று கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

விசிகவின் மாநில நிர்வாகிகள் இதுபற்றி திருமாவிடம் பேசியிருக்கிறார்கள். ‘மது ஒழிப்பு என்ற நல்ல நோக்கத்தோடு நீங்கள் அந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினீர்கள். ஆனால் கூட்டணி மாற முயற்சிக்கிறோம் என்ற செய்திதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் போய் சேர்ந்திருக்கிறது. இப்போது வரைக்கும் அதிமுக -பாஜக கூட்டணி அமைய வாய்ப்பிருக்கிறது. வாசன் டெல்லியில் அதற்கான முயற்சியை தொடர்ந்துகொண்டிருக்கிறார். இந்த நிலையில் நாம் இவ்வளவு முன்கூட்டியே திமுகவோடு கசப்பு கொள்ள தேவையில்லை. இதுபற்றி திமுக தலைமையிடம் பேசி நம் தரப்பு நிலையை தெளிவுபடுத்திடுங்கள்’ என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள்,

திமுகவில் இருக்கும் திருமாவின் நண்பர்களும் அவரிடம் தனிப்பட்ட முறையில், ‘நீங்க பேசினது எல்லாருக்குமே வேறு மாதிரியாகத்தான் போய் சேர்ந்திருக்கிறது. அமெரிக்காவில் இருந்து முதல்வர் கூட உதயநிதியிடம் இதுபற்றி விசாரித்திருக்கிறார்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

இந்த சூழலில் இன்று (செப்டம்பர் 12) காலை திருமாவளவன் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு போன் செய்திருக்கிறார். திமுகவின் கூட்டணித் தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியவில்லை என்று வருத்தப்பட்டபோது, ‘இனி என்னிடம் சொல்ல வேண்டியதை அமைச்சர் வேலுவிடம் கூறுங்கள். அவர் பார்த்துக் கொள்வார்’ என்று ஏற்கனவே ஸ்டாலின் கூட்டணித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அதன்படி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தங்களின் கோரிக்கைகள், புகார்கள், வருத்தங்கள் ஆகியவற்றை வேலுவிடம்தான் தெரிவித்து வருகிறார்கள். அவ்வப்போது கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வேலுவை அவரது வீட்டில் சந்தித்து பேசுவது வழக்கம்,

இந்த பின்னணியில்தான் தன் தரப்பு விளக்கத்தை திமுகவுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் தெரிவிப்பதற்காக அமைச்சர் வேலுவுக்கு இன்று காலை போன் செய்திருக்கிறார் திருமா. ஆனால் அரசு நிகழ்ச்சிக்காக கோவா சென்றிருந்ததால் உடனடியாக அவரோடு பேச முடியவில்லை. பிறகு கொஞ்ச நேரம் கழித்து எ.வ.வேலுவுடன் அலைபேசியில் உரையாடியிருக்கிறார் திருமா.

அப்போது, செய்தியாளர் சந்திப்பில் தான் தெரிவித்தவற்றை அப்படியே திசை திருப்பிவிட்டனர் என்றும், கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்றும் விளக்கியிருக்கிறார். வேலுவும், ‘முதல்வர் என்னிடம் பேசும்போது இதை அவரிடம் தெரிவிக்கிறேன்’ என்று பதிலளித்துள்ளார்.

அமைச்சர் வேலு சென்னை திரும்பியதும் அவரை திருமா சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் விசிக மற்றும் திமுக வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

“சினிமாவில் இடைவேளை தேவையா?”: இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி!

ஆதார் கார்டு புதுப்பித்தல்…தேதி நீட்டிப்பு!

மீண்டும் அதிமுகவில் மைத்ரேயன்

 

+1
0
+1
3
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *