சபாநாயகர் மீது குற்றச்சாட்டு: எடப்பாடிக்கு அமைச்சர் பதிலடி!

Published On:

| By Jegadeesh

சபாநாயகர் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்த நிலையில், அதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமாரை அங்கீகரிக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுக சார்பில் சென்னையில் இன்று (அக்டோபர் 19 ) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.

அப்போது, சபாநாயகருக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

“எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்து அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் அளித்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.

எதிர்கட்சி துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சபாநாயகர் நடுநிலையுடன் செயல்படவில்லை” என்று குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ( அக்டோபர் 19 ) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் பேரவையில் தொடர் கூச்சல் குழப்பமிட்டு விரும்பத்தகாத நிகழ்வுகளில் ஈடுபட்டார்கள்.

பேரவையின் செயல்பாடுகளுக்கு குந்தகம் ஏற்படுத்தியதன் விளைவாக பேரவைத்தலைவர் அதிமுகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார்.

வெளியில் வந்த எடப்பாடி பழனிசாமி இந்த அரசு குறித்தும் பேரவைத்தலைவர் செயல்பாடு குறித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஏராளமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

அவர் கூறிய கருத்துக்களுக்கு நேற்றே அதற்கு பொருத்தமான பதில்கள் சட்டமன்றத்தில் கூறப்பட்டது.

அவர் இருக்கைக்கு பக்கத்தில் ஓ.பன்னீர் செல்வம் உட்காருவதை அவரால் தாங்கி கொள்ள முடியவில்லை என்பதால் அவர் புகார் கூறிவருகிறார்.

பேரவை தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து அப்பாவு நல்ல முறையில் செயல்பட்டு வருகிறார் என்றும் மக்களின் பாராட்டுக்களை பெற்றுவருகிறார் என்றும் கூறினார்.

மேலும், ஆளுங்கட்சியை காட்டிலும் எதிர்க்கட்சியினருக்கு தான் ஜனநாயகம் என்ற பெயரில் அதிக முக்கியத்துவம் தருகிறார் சபாநாயகர் என்று ஆளுங்கட்சியினரே சொல்கின்றனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள முடியாமல் அதிமுகவினர் பேரவையில் கலவரம் செய்ய முயன்றனர். முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கேள்வி நேரம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நேரலையில் கொடுக்கப்படுகிறது

துப்பாக்கிச் சூட்டை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி பொய் கூறியது அம்பலமாகியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் அவர் அலட்சியமாக செயல்பட்டார் என்று குறிப்பிட்டார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

துப்பாக்கிச் சூடு: பொய் சொல்லியிருக்கிறார் எடப்பாடி-ஸ்டாலின்

500 கோடியில் 1,000 புதிய பேருந்துகள்: ஸ்டாலின்