டிசம்பர் 22 ஆம் தேதி புதுச்சேரி மாநிலம் முழுவதும் முக்கியமான சாலைகளில் பெண்கள் சாலை மறியல் போராட்டங்களில் இறங்க, அந்த மாநிலமே கொஞ்ச நேரம் ஸ்தம்பித்துப் போனது.
அரியாங்குப்பம் சிக்னல், தவளக்குப்பம் -நல்லவேடு ஜங்ஷன், கன்னியாகோவில்-போகூர் ஜங்ஷன், போகூர் தூக்குப் பாலம், மதுக்கரை, திருக்கானூர் ஜங்ஷன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடக்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட புதுச்சேரி போலீஸாரும், ஆளுந்தரப்பினரும் டென்ஷன் ஆனார்கள்.
இது எதிர்க்கட்சியோ அல்லது வேறு ஏதேனும் சமூக அமைப்புகளோ நடத்தும் போராட்டம் அல்ல. புதுச்சேரியின் பெண்கள். குறிப்பாக, 100 நாள் வேலைத் திட்டத்தால் பலன் பெறும் பெண்கள் தன்னெழுச்சியாக இணைந்து நடத்திய போராட்டம் தான் இது.
எதற்காக இந்த போராட்டம்?
புதுவை மாநிலத்தில் சிறப்பாக செயல்படாமல் இருந்த 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தினை தான் பொறுப்பேற்றதிலிருந்து செம்மைப்படுத்தி சுமார் 600 கோடி ரூபாய் அளவு மத்திய நிதியினை மக்களிடம் கொண்டு சேர்த்த அதிகாரியான திட்ட இயக்குனர் சத்தியமூர்த்தியின் இட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வளவு போராட்டம். டெல்லி வரை எதிரொலித்துள்ள இந்த போராட்டத்தில் மக்கள் குறிப்பிடும் இந்த அதிகாரி சத்தியமூர்த்தி யார்?
சத்தியமூர்த்தி 2009 ஆம் ஆண்டு கேடர் ஐ.எஃப்.எஸ் ஆபீசர். ஏற்கனவே மணிப்பூரில் பணியாற்றிவிட்டு 2012 இல் புதுச்சேரிக்கு வருகிறார். அப்போது டெபுடி கன்சர்வேட்டராக இருக்கிறார். அதன் பின் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி இன்ஸ்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷனின் அதிகாரியாக மாற்றப்பட்டார். அங்கே பணியாற்றியபோது அரசுக்கு நல்ல பெயர் எடுத்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் புதுச்சேரி அரசே அவர் புதுச்சேரியிலேயே மேலும் ஐந்து வருடம் பணியாற்றுவதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வேண்டுகோள் வைத்து அவருக்கு எக்ஸ்டென்ஷன் வாங்கியது.
இதற்கிடையேதான் சமீபத்தில் அதிகாரி சத்தியமூர்த்தி ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டு புதுச்சேரி 100 நாள் வேலைத் திட்டத்தின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் வந்த பிறகு ஊரக வளர்ச்சித் துறையில் குறிப்பாக 100 நாள் வேலைத் திட்டத்தில் ஏற்பட்ட அதிரடியான மாற்றங்களே இன்று, இந்த அதிகாரியை மாற்றவேண்டாம் என்று மக்கள் போராட்டத்தில் இறங்கக் காரணம்.
அப்படி என்ன செய்தார் திட்ட அதிகாரி சத்தியமூர்த்தி?
காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டம் நடத்திய 100 நாள் வேலை பயனாளிகளிடமே பேசினோம்,
“புதுச்சேரியில நூறு நாள் வேலைத் திட்டம் ரொம்ப ரொம்ப சின்ன அளவுலதான் இருந்துச்சு. அதாவது 40 நாள்தான் எங்களுக்கு வேலை கெடைக்கும். ஆனா இந்த அதிகாரி சத்தியமூர்த்தி எங்களுக்கு திட்ட அதிகாரியா வந்த பிறகுதான் டெல்லி வரைக்கும் பேசி நிறைய நிதியை 100 நாள் வேலைக்காக வாங்கினாரு.
அதனால புதுச்சேரி ஃபுல்லா 100 நாள் வேலைத் திட்டம் சிறப்பா நடந்துச்சு. ஒரு அதிகாரி போல ரூம்ல உக்காந்துக்கிட்டு பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு போகாம நேரடியாக நாங்க வேலை செஞ்சுக்கிட்டிருக்குற இடத்துக்கே வருவாரு.
நாள் வேலை திட்டத்தை மக்களுக்கும் பயனுள்ளதா, அரசுக்கும் பயனுள்ளதா மாத்திக் காட்டினாரு. மத்திய அரசோட திட்டப்படி ஒவ்வொரு மாவட்டத்துல இருக்குற நீர் நிலைகளையும் மேம்படுத்துற திட்டத்தை புதுச்சேரியில நூறு நாள் வேலைத் திட்டத்துல சிறப்பா பண்ணினாரு. எங்க பிரச்சினை என்ன ஏதுனு கேட்பாரு. இப்படிப்பட்ட அதிகாரியை நாங்க பாத்ததே இல்லைனு சொல்லலாம். அதனால அரசியல்வாதி அமைச்சர்களை விட அவரை புதுச்சேரி கிராமம் வரைக்கும் எல்லாருக்கும் தெரியும்” என்றவர்களிடம்,‘அதிகாரி என்றால் ஒரு கட்டத்துல டிரான்ஸ்பர் ஆகிதானே போகணும்?” என்று கேட்டோம்.
”ரைட்டுதான். ஆனா இதுல அரசியலும் இருக்குனு சொல்லிக்குறாங்க. ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சாய் சரவணன் பாஜகவை சேர்ந்தவரு. அவர் அமைச்சராக இருக்கும் துறையில 100 நாள் வேலைத் திட்டம் சிறப்பா நடக்குது. இது பிஜேபிக்குதான் செல்வாக்கை அதிகரிக்க வைக்கும். அதனால அந்த சத்தியமூர்த்திய மாத்துங்கனு யாரோ சி.எம். ரங்கசாமிக்கு சொல்லிருக்காங்க. அதனாலதான் அந்த அதிகாரியை அந்தமானுக்கு தூக்கியடிச்சுட்டாங்க.
எங்களுக்கு அரசியல்லாம் வேணாம். 100 நாள் வேலைத் திட்டத்தை சிறப்பா செயல்படுத்துற எங்க சத்தியமூர்த்தியை மாத்திட்டு ஏதோ ஒரு இந்திக்கார அதிகாரியை போடுறதா சொல்றாங்க. எங்களுக்கு 100 நாள் வேலைத் திட்டம் சிறப்பா இருக்கணும்னா சத்தியமூர்த்தி வேணும்” என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
காரைக்காலில் கூட்டம் அதிகமானதால் போலீஸார் வரவழைக்கப்பட்டு பெண்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
நாம் விசாரித்தவரை, “ஊரக வளர்ச்சித் துறை நூறுநாள் வேலை திட்ட அதிகாரியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டதால் மக்கள் பெரும் பயன் பெற்றுள்ளனர். ஆனால் அந்த அதிகாரியை வைத்து பாஜக கிராம மக்களிடம் நல்ல பெயர் எடுத்துக் கொண்டிருப்பதாக முதல்வர் ரங்கசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. ஒருவேளை இது புதுச்சேரியில் கிராம அளவில் பாஜகவுக்கான வாக்கு வங்கியாக ஆகிவிடுமோ என்ற எச்சரிக்கையில்தான் சத்தியமூர்த்தியை மாற்றிவிட்டார்கள்” என்கிறார்கள்.
இந்த தகவல் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர் ராஜன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்களின் இந்த போராட்டம் குறித்து புதுச்சேரி ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் பாஜகவின் புதுச்சேரி மாநில துணைத் தலைவருமான சாய் சரவண குமாரிடம் மின்னம்பலம் சார்பில் பேசினோம்.