தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் வருகின்ற நவம்பர் 30-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனையொட்டி வருகின்ற நவம்பர் 28-ம் தேதி மாலை 5 மணியுடன் அங்கு தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இதனால் தற்போது மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தற்போது அங்கு தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 119 வேட்பாளர்களும், அருகில் உள்ள பெரிய கோயில்களுக்கு சென்று உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
கார்த்திகை தீபத்திருநாளான நவம்பர் 26-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடும் 119 வேட்பாளர்களும், தங்களது தொகுதியில் உள்ள பெரிய சிவன் கோயிலுக்கு உள்ளூர் செய்தியாளர்களுடன் செல்ல வேண்டும். அங்கு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நாங்கள் தேர்தலில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும், உத்தரவாதங்களையும் நிறைவேற்றுவோம் என தெலுங்கு மொழியிலும், ஆங்கில மொழியிலும் கடவுள் மீது உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.
இதன்படி ஒவ்வொரு காங்கிரஸ் வேட்பாளருக்கும் அவரவர் பெயரோடு உறுதிமொழிப் படிவத்தையும் தயாரித்து தலைமையே அனுப்பி வைத்திருக்கிறது. இஸ்லாமியர், கிறிஸ்துவர் வேட்பாளர்களும் இதை பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் 6 முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள்:-
- மாதம் தோறும் மகளிருக்கு ரூபாய் 2500 வழங்கப்படும். சமையல் எரிவாயு ரூபாய் 500-க்கு வழங்கப்படும். பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்.
- விவசாயிகளுக்கு வருடம் தோறும் ரூபாய் 15000 வழங்கப்படும். ஆண்டு தோறும் விவசாய தொழிலாளர்களுக்கு ரூபாய் 12 ஆயிரம் வழங்கப்படும்.
- அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் மாதாமாதம் இலவசமாக வழங்கப்படும்.
- வீடில்லாத ஏழைகளுக்கு வீடு கட்ட நிலமும் அதற்கு 5 லட்ச ரூபாய் பணமும் வழங்கப்படும். தெலங்கானா போராளிகளுக்கு 250 சதுர அடி பிளாட் வழங்கப்படும்.
- யுவ விகாசம் திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்விக்காக ரூ.5 லட்சம் மதிப்பிலான வித்யா பரோசா அட்டை வழங்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும் சர்வதேச தரத்தில் பள்ளிகள் அமைக்கப்படும்.
- முதியோர்களுக்கு மாதம் ரூபாய் 4000 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்படும். ராஜீவ் ஆரோக்கியஸ்ரீ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும்.
தெலங்கானாவில் பாஜக, பிஆர் எஸ் கட்சிகள் காங்கிரஸ் இந்து விரோதி என்று பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது காங்கிரஸ் தலைமை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–மஞ்சுளா
IPL2024: ஐபிஎல் ஏலத்தில் தோனி தட்டி தூக்கப்போகும் வீரர்கள்?
அரசியலமைப்பு சட்டம் முழுமையடையவில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி