அனைத்துக்கட்சிக் கூட்டம்: நிறைவேறிய தீர்மானம் என்ன?

அரசியல்

10 சதவீத இட ஒதுக்கீடு சமூகநீதி தத்துவத்துக்கு முரணானது என்பதால் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்யப்படும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக இன்று(நவம்பர் 12) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், பாமக, மமக, தமிழக வாழ்வுரிமை உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. அதிமுக, பாஜக கட்சிகள் பங்கேற்கவில்லை.

கூட்டத்தின் இறுதியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ஆதரித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தில், “முன்னேறிய சாதி ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் 103 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் எனப்படுவது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்லும் சமூக நீதி தத்துவத்துக்கு முரணானது.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக இருப்பதாலும் ஏழைகளில் சாதி பிரிவினையை கற்பித்து பாகுபாடு காட்டுவதாக இருப்பதாலும் நாங்கள் அதனை நிராகரிக்கிறோம்.

இது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் போது தமிழ்நாடு அரசும் உரிய முறையில் சமூகநீதியினையும், சமத்துவத்தையும் நிலைநாட்டிடும் வகையில் தனது கருத்துக்களை வலுவாக பதிவு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

ஏழை, எளிய, நலிந்த மக்களுக்கு அவர்களது வறுமையை போக்கும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் அனைத்தையும் ஆதரிக்கும் நாங்கள் சமூகநீதி தத்துவத்தின் உண்மை விழுமியங்களை சிதைக்க அனுமதிக்க மாட்டோம்.

சமூக நீதி தத்துவத்தை காக்க தமிழ்நாட்டில் இருந்து முன்னெடுக்கப்படும் இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க உதவிகரமாக இருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை.ரா

10% இட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் இல்லை!

அமித்ஷாவின் வெற்றி மேல் வெற்றி:  சீனிவாசன் சொன்ன சீக்ரெட்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.