பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்தின் சார்பாக இன்று (ஜூலை 19) மாலை நடைபெறும் அனைத்துக்கட்சி தலைவர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் மக்களவை தலைவராக கலந்துகொள்வதாக ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று(ஜூலை 18) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இருந்து சென்ற பாஜக கூட்டணி கட்சி சார்பில் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியின் அருகில் அமர்ந்து இருந்தார்.
இதையடுத்து தேசிய ஜனநாய கூட்டணியில் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துனர்.
இந்த நிலையில் நாளை தொடங்க இருக்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று மாலை அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில், தேனி எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் அதிமுக சார்பில் மக்களவை தலைவராக கலந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
“பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு இன்று (ஜூலை 19) மாலை 5. 30 மணியளவில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற இருக்கும் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் முக்கிய அம்சங்கள் மற்றும் மசோதாக்கள் குறித்து விவாதிப்பதற்காக,
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) சார்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அழைப்பு விடுத்ததின் பேரில்,
அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக மக்களவை தலைவராக கலந்து கொண்டு சிறப்பித்து ஆலோசனை வழங்க உள்ளேன்” என்று ஓ.பி.ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ரவீந்திரநாத்தை அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கி அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் இன்று(ஜூலை 19) நடைபெறும் கூட்டத்தில் அதிமுக சார்பாக கலந்துகொள்ள உள்ளதாக ஓ.பி.ரவீந்திரநாத் கூறியுள்ளது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ஜூலை 6 ஆம் தேதி ”2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது” என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் உத்தரவிட்டிருந்தார்.
எனினும் தீர்ப்பு தொடர்பாக ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்வதற்காக உத்தரவை 30 நாட்களுக்கு உயர் நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று ரவீந்திரநாத்தின் வழக்கறிஞர் ஏ.கே.ஸ்ரீராம் கோரிக்கை வைத்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி 30 நாட்களுக்குத் தனது தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மகளிர் உரிமைத் தொகை: ’வாட்சப் தகவலை நம்ப வேண்டாம்’- ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்தி வைப்பு!