காவிரி: அனைத்துக் கட்சிக் கூட்டமா? -அமைச்சர் துரைமுருகன் பதில்!

Published On:

| By Monisha

all party meeting on cauvery water

காவிரி நீர் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது குறித்து  யோசிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்து விட கர்நாடக அரசு மறுப்பதும், இதற்காக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் நேற்று (செப்டம்பர் 12) நடைபெற்ற கூட்டத்தில், தமிழகத்திற்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்தது.

இதனையடுத்து காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு இன்று அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “காவிரி நீர் ஒழுங்காற்று கூட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு என்ன செய்கிறது என்பதை நாம் பார்த்து தான் செயல்பட வேண்டும். மேலும் கர்நாடகா, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் முடிவிற்கு என்ன பதில் சொல்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.

பார்த்த பிறகு எங்களுக்கு இருக்கும் ஒரே முடிவு உச்சநீதிமன்றத்தை நாடுவது தான். வரும் 21 ஆம் தேதி வழக்கு உச்சநீதிமன்றத்தில் வருகிறது. அதற்குள் கர்நாடகத்தின் முடிவு தெளிவாக தெரிந்துவிடும். 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகு அனைத்துக் கட்சி கூட்டம் குறித்து யோசிக்கப்படும்.

உச்சநீதிமன்றம் என்பது கர்நாடகாவிற்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் அதுதான் உச்சநீதிமன்றம். ஒவ்வொரு அங்குலத்திலும் அவர்களது எதிர்ப்பை தெரிவிக்கிறார்கள். அதையும் சந்தித்து தமிழ்நாட்டு மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொண்டு தான் வந்திருக்கிறோம். இனியும் பெறுவோம்” என்று தெரிவித்தார்.

அப்போது,  ‘இந்தியா கூட்டணியில் தமிழக முதல்வர் முக்கியமான தலைவராக இருக்கிறார். அவர் கர்நாடக முதல்வரிடம் பேசி பிரச்சனையை சரி செய்யலாமே?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு, “பேச்சுவார்த்தை சரியில்லை என்பதால் தான் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளோம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது. அப்படி பேசினால் நாம் சட்டப்பூர்வ ஆயுதத்தை கைவிட்டதாகி விடும்” என்று பதிலளித்தார் அமைச்சர் துரைமுருகன்.

இதனையடுத்து தமிழக முதல்வர் அழுத்தம் கொடுத்தால் பிரச்சனை சரியாகிவிடும், ஆனால் முதல்வர் அழுத்தம் தர மறுக்கிறார் என்று குற்றம்சாட்டப்படுகிறது என்று செய்தியாளர் கூறியதற்கு, “எங்களை கெடுப்பதற்கு நினைக்கிறார்கள்” என்று சிரித்துக் கொண்டே கூறினார் அமைச்சர் துரைமுருகன்.

தமிழக விவசாயிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சராக உங்களுடைய பதில் என்ன என்ற கேள்விக்கு, “தமிழக விவசாயிகள் பாதிக்காத வண்ணம் எத்தனை முயற்சிகள் எடுக்கவேண்டுமானாலும் எடுப்போம். நிச்சயம் நிவாரணத்தை வாங்கி தருவோம்” என்று தெரிவித்தார்.

அமலாக்கத்துறை சோதனை குறித்த கேள்விக்கு, “அதெல்லாம் எனக்கு தெரியாது” என்று பதிலளித்தார் அமைச்சர் துரைமுருகன்.

மோனிஷா

Asia Cup: பைனலில் இந்திய அணியுடன் மோதப்போவது யார்?

அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share