நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
வரும் செப்டம்பர் 18 ஆம்தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று கடந்த 31ஆம் தேதி நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார்.
முன்னதாக இதுபோன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், அதன் காரணமும் தெரிவிக்கப்படும். ஆனால் இம்முறை இந்த சிறப்புக் கூட்டத்தொடரின் நோக்கம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக, அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் பிரகலாத் ஜோஷி.
“செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 4.30 மணிக்குச் சிறப்புக் கூட்டதொடர் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும். இதற்கான அழைப்பிதழ் அனைத்து எம்.பி.க்களின் இ.மெயிலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார் பிரகலாத் ஜோஷி.
இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ.பிரையன், “நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வேலை நாட்களே உள்ளன. ஆனால் இன்னும் எதற்காக இந்த சிறப்புக் கூட்டத்தொடர் என்று தெரிவிக்கப்படவில்லை. இரண்டு பேருக்கு மட்டுமே அது தெரியும். ஆனால் இன்னும் நம்மை நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ளவர்கள் என்று அழைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று தேதி செப்டம்பர் 13. நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன.
ஆனால் ஒருவர் அல்லது ஒருசிலரைத் தவிர இந்த சிறப்பு கூட்டம் எதற்கு என்று யாருக்கும் தெரியாது. இதற்கு முன்னதாக சிறப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டால் அதற்கான நோக்கம் என்னவென்று அறிவிக்கப்படும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
Today is September 13th. The five-day Special Session of Parliament will commence five days from now and nobody—barring One Man(ok, perhaps the Other One too)—has any sense of the agenda. On every previous occasion, when Special Sessions or Special Sittings were held, the list of…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 13, 2023
அந்த பதிவில் இதற்கு முன்னதாக எப்போது சிறப்பு கூட்டத்தொடர் நடத்தப்பட்டது என்றும் அதற்கான நோக்கம் என்னவென்றும் பட்டியலிட்டுள்ளார்.
இந்த சிறப்புக் கூட்டத் தொடரில் , ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பிரியா
அடுத்த சர்ச்சை : சனாதன எதிர்ப்பு பற்றி பேச மாணவிகளுக்கு அழைப்பு!
லிபியா வெள்ளம்: 6000 மக்கள் உயிரிழந்த சோகம்!