தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தை முன்னிட்டு முன் கூட்டியே வருகைத் தந்து தனிநபராக அமர்ந்தார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிகள் இந்தியா முழுவதும் மாநில தேர்தல் ஆணையம் தலைமையில் நடந்து வருகிறது. தமிழகத்தில் இன்று (ஆகஸ்ட் 1) அதற்கான கூட்டம் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு அறிவித்தார்.
அதிமுக இரு அணியாக பிரிந்த நிலையில், முதலில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து எங்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளைச் சுட்டிக்காட்டித் தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கடிதம் எழுதப்பட்டது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பிற்கும் கடிதம் அனுப்பியது தேர்தல் ஆணையம்.
தொடர்ந்து இருதரப்பில் இருந்தும் யார் யார் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும், ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜும் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நடைபெறும் கூட்டத்துக்கு மற்றவர்கள் வருவதற்கு முன்னதாகவே ஓபிஎஸ் தரப்பில் கோவை செல்வராஜ் வந்து அதிமுகவுக்கு ஒதுக்கிய சேரில் அமர்ந்தார். காலை 11.10 மணிக்கெல்லாம் வந்து அவர், அதிமுக போர்டு வைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தார்.

அடுத்தடுத்து மற்ற கட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து கொண்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் வருகை தந்தனர்.
அதிமுக போர்டு வைக்கப்பட்டிருந்த சேரில் கோவை செல்வராஜ் அமர்ந்திருந்த நிலையில், அந்த போர்டை எடுத்து தன் இருக்கைக்கு முன் வைத்துக்கொண்டார் ஜெயக்குமார்.
கோவை செல்வராஜ், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரிசையாக அமர்ந்திருக்கின்றனர். தற்போது அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
பிரியா