மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான தகைசால் தமிழர் என்.சங்கரய்யா(102) உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று (நவம்பர் 15) காலை சிகிச்சை பலனின்றி காலமானார். thagaisal thamizhar Sankarayya funeral
மருத்துவமனையில் இருந்த சங்கரய்யா உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் சங்கரய்யாவின் மறைவுக்கு நேரிலும், சமூகவலைதளங்களிலும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர்.
சங்கரய்யா உடல் குரோம்பேட்டையில் உள்ள இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நேற்று பிற்பகல் சென்னை தி.நகர் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
அடையாறில் இருந்து பெசன்ட் நகர் மின்மயானம் வரை நடைபெற்ற சங்கரய்யாவின் இறுதி ஊர்வலத்தில், அனைத்து கட்சி தலைவர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்கேற்றனர்.
குறிப்பாக திமுக எம்.பி.ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சு.வெங்கடேசன் எம்.பி. மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
சுமார் 2 கி.மீ தூரம் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தினைத் தொடர்ந்து பெசன்ட் நகர் மின் மயானத்தில் தியாகி சங்கரய்யாவின் உடல், துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கட்சித் தலைவர்கள் முன்னிலையில் தகனம் செய்யப்பட்டது.
பின்னர் மயான வளாகத்தில் நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் மதிமுக தலைவர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெய்ச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீமதி உள்ளிட்டோர் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர். thagaisal thamizhar Sankarayya funeral
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’புதிய மருத்துவக்கல்லூரி தொடங்க தடை நீக்கம்… ஆனாலும் இது தவறு’: அன்புமணி
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!