“எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காக” : ராகுல் உதயநிதி பெயரை குறிப்பிடாமல் விமர்சித்த மோடி

Published On:

| By Kavi

அரசியல் ஆதாயத்துக்காக இந்து மதத்தை கேலி செய்கின்றனர் என்று ராகுல் காந்தி, உதயநிதி பெயரை குறிப்பிடாமல் மோடி பேசினார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று (ஜூலை 2) பேசினார்.  2 மணி நேரத்துக்கும் மேலாக பேசினார்.

எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸையும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் கடுமையாக விமர்சித்தார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றதை குறிப்பிட்டு ஒரு குட்டி ஸ்டோரி சொன்ன அவர், “மூன்றாவது முறையாக காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது.

எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது, 99 மதிப்பெண்கள் எடுத்த ஒரு பையன் இருந்தான். தான் எடுத்த மதிப்பெண்ணை மக்களிடம் காட்டுவது அவனது வழக்கம்.

99 மதிப்பெண் என்று கேட்டதும் மக்கள் அவனை மிகவும் ஊக்கப்படுத்தினார்கள்.

அப்போது அவனது ஆசிரியர் வந்து ஏன் இனிப்பு கொடுக்கிறாய் என்று கேட்டார்.

அந்த பையன் எடுத்தது 100க்கு 99 மதிப்பெண் அல்ல, 543க்கு 99 என்றார்.

தோல்வியில் உலக சாதனை படைத்திருக்கிறாய் என்பதை இப்போது அந்தக் குழந்தைக்கு யார் சொல்லி புரிய வைப்பார்கள்” என்று விமர்சித்தார் மோடி.

“2029ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி வரிசையில்தான் இருக்கும். 13 மாநிலங்களில் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியாத அவர் எப்படி ஹீரோவாக முடியும்?” என தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசினார்.

பொய்களைப் பரப்பி தோல்வியடைந்த சிலரின் அவலநிலை எனக்குப் புரிகிறது என்று கூறிய அவர், “2014க்கு முன் ஊழல் காலமாக இருந்தது. இன்று, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்காக, இந்தியா எதையும் செய்யும் என்பதை நாட்டு மக்கள் அறிந்துள்ளனர்.

இந்தியா சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியிருக்கிறது. 10 ஆண்டுகளில், பொருளாதாரத்தை 10ஆவது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு கொண்டு வர முடிந்தது. இப்போது அதை 3வது இடத்திற்கு கொண்டு செல்வோம்.

10 ஆண்டுகளில் பெண்கள் அதிகாரத்தை பெறுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

மக்களவைத் தேர்தலோடு நடந்த 4 மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக வென்றுள்ளது. 6 மாதங்களுக்கு முன்பு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வென்றோம்.

தற்போது கேரளாவில் பாஜக கணக்கை தொடங்கியுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சி மூன்றாவது முறையாக தோற்றுவிட்டு எங்களை தோற்கடித்ததாக நினைத்து கொண்டிருக்கிறது.

நாட்டில் அராஜகத்தை பரப்புகிறது காங்கிரஸ்.சிஏஏவுக்கு எதிராக அவர்கள் பொய்யை பரப்புகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ஊழல் வழக்குகளில் ஜாமீனில் வெளியில் இருக்கிறார்கள்.

பொறுப்பற்ற கருத்துகளை சொல்வதால் அவர்கள் உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இடஒதுக்கீடு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், அரசியலமைப்பு, எல்ஐசி, எச்ஏஎல் ஆகியவற்றுக்கு எதிராக பொய் கூறுகிறார்கள்.

அக்னிபத் பற்றியும், எம்.எஸ்.பி தரப்படவில்லை என்று பொய் பரப்புகிறார்கள்.

இந்துக்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்த முயல்கின்றனர். இதுதான் உங்கள் கலாச்சாரம், இதுதான் சிந்தனை” என்று ராகுல் காந்தியின் இந்துக்கள் குறித்த பேச்சை குறிப்பிட்டு பேசினார்.

தொடர்ந்து மோடி, “காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் இந்து மதத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள். அதற்கு கைத்தட்டுகிறார்கள். இதை நாடு என்றும் மறக்காது.

இந்துக்களையும் அவர்களின் பாரம்பரியங்களையும் அவமதிப்பதில் குறியாக உள்ளார்கள். இப்படி பேசுவதை நாகரிகமாக கருதி, அரசியல் ஆதாயத்துக்காக பேசுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த ஆண்டு சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போன்று ஒழிக்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் அவரது பெயரை குறிப்பிடாமல் இவ்வாறு பேசியுள்ளார் மோடி.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பிரியா

ஓசூரில் விமான நிலையம், எளிதான காரியம் அல்ல!

“ஜாமீனில் தான் வெளியே இருக்கிறீர்கள்” – நாடாளுமன்றத்தில் ராகுலை மிரட்டிய மோடி