தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் வெளியிட்ட 5 வாக்குறுதிகள் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் சட்டமாக மாறும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக டி.கே.சிவக்குமார், 8 அமைச்சர்கள் இன்று கர்நாடக கண்டீரவா மைதானத்தில் பதவியேற்றனர்.
இந்த பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மநீம தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் திருமாவளவன், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பதவியேற்பு விழாவிற்குப் பிறகு தலைவர்களின் பெயரை ஒவ்வொன்றாக சொல்லி வரவேற்றுப் பேசிய ராகுல் காந்தி, “எங்களிடம் உண்மை இருந்தது. பாஜகவிடம் இருந்த அனைத்து அதிகாரங்களையும் கர்நாடக மக்கள் தோற்கடித்துவிட்டனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் கர்நாடகா பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் நீங்கள் சந்தித்த கஷ்டங்கள் உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரியும்.
காங்கிரஸின் வெற்றிக்குப் பிறகு, இந்த தேர்தலில் காங்கிரஸ் எப்படி வென்றது என்று பல விஷயங்கள் எழுதப்பட்டன, வெவ்வேறு பகுப்பாய்வுகள் செய்யப்பட்டன, ஆனால் நாங்கள் ஏழைகள், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுடன் பின்தங்கியிருப்பதால் காங்கிரஸ் வெற்றி பெற்றது என்று நான் கூற விரும்புகிறேன்.
காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளிக்காது. அடுத்த 2 மணி நேரத்தில் புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், ஐந்து உத்தரவாதங்களும் சட்டமாக மாறும்” என்று பேசினார்.
5 வாக்குறுதிகள்
- மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம்,
- வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்,
- குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசம்,
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உரிமைத்தொகை,
- வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும்.
மோனிஷா
கைத்தூக்கி ஒற்றுமையை காட்டிய தலைவர்கள்!
சுட்டெரிக்கும் வெயிலுக்கு ஒரு பிரேக்: 12 மாவட்டங்களில் கனமழை!